சோழர்களை தொடர்ந்து பல்லவர்களும் வெள்ளித்திரையில் தோன்ற இருக்கிறார்கள். ஆம், அறிமுக இயக்குநர் பெருமாள் வரதன் இயக்கியுள்ள ‘நந்திவர்மன்’ திரைப்படம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பல்லவ மன்னவர்களில் முக்கியமானவரான நந்திவர்மன் பற்றிய பெருமைகளையும், ரகசியங்களையும் வெளிக்கொண்டு வரும் திரைப்படமாக உருவாகியுள்ளது.
‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தில் நடித்த சுரேஷ் ரவி நாயகனாக நடித்திருக்கிறார். ஆஷா கவுடா நாயகியாக நடித்திருக்கிறார்.
‘மரகத நாணயம்’, ‘ராட்சசன்’, ‘புரூஸ்லி’ ஆகிய படங்களில் இணை ஒளிப்பதிவாளராகவும், ‘கன்னி மாடம்’ படத்தில் துணை இயக்குநராகவும் பணியாற்றிய பெருமாள் வரதன், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து ‘நந்திவர்மன்’ படத்தை இயக்கியிருக்கிறார்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நந்திவர்மன் சூழ்ச்சியினால் கொலை செய்யப்படுகிறார்.
அப்போது நடக்கும் போரில் அவர் வாழ்ந்த ஊரே பூமிக்கு அடியில் புதைந்துவிடுகிறது.
அந்த சம்பவத்தில் இருந்து, அந்த ஊரில் 6 மணிக்கு மேல் பல்வேறு அமானுஷ்ய விஷயங்கள் நடப்பதாக ஒரு நம்பிக்கை இருந்துவருவதால், தற்போதைய காலகட்டத்திலும் அந்த ஊரில் வசிக்கும் மக்கள் மாலை 6 மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே வர மாட்டார்கள்.
இதற்கிடையே, அந்த ஊரில் புதைந்த நந்திவர்மனின் இடத்தை கண்டுபிடிப்பதற்காக தொல்லியல் துறையினர் வருகிறார்கள்.
வர்களில் ஒருவர் பின் ஒருவராக மர்மமான முறையில் மரணம் அடைகிறார்கள்.
அதன் பின்னணி என்ன? என்பதை சுவாரஸ்யமான வரலாற்று கதையுடன், தற்போதைய காலக்கட்டத்துக்கு ஏற்ற வகையில் சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானரில் இப்படத்தை பெருமாள் வரதன் இயக்கியிருக்கிறார்.
இயக்குநர் பெருமாள் வரதன், “நான் செஞ்சிகோட்டைக்கு ஒரு முறை சென்றிருந்த போது, அப்பகுதியில் உள்ள ஒரு பெரியவர் அங்கு நடக்கும் சில அமானுஷ்ய விஷயங்கள் பற்றி கூறினார்.
அதை கேட்கவே வியப்பாக இருந்தது. பிறகு மறுநாள் அதே இடத்திற்கு நான் சென்றேன், அப்போது மற்றொருவர் அதே விஷயங்களை சொன்னார்.
இப்படி அப்பகுதியில் இருக்கும் பலர் அங்கு நடக்கும் அமானுஷ்ய விஷயங்கள் குறித்து சொன்னார்கள்.
அப்போது அங்கு யார் ஆட்சி செய்தது என்று விசாரித்ததில், பல்லவ மன்னர்கள்தான் அப்பகுதியை ஆண்டதாக சொன்னார்கள். பிறகுதான் பல்லவர்கள் பற்றியும், அங்கு நிலவும் அமானுஷ்ய விஷயங்கள் பற்றியும் ஆய்வு மேற்கொண்டேன்.
அப்போது ஒரு ஐந்து பல்லவ மன்னர்களின் பெயர்கள் தெரியவந்தது, அதில் நந்திவர்மன் முக்கியமானவராக இருந்ததால் அவருடைய பெயரை தலைப்பாக வைத்துவிட்டேன்” என்றார்.
‘பொன்னியின் செல்வன்’ படத்திற்கு பிறகு நிறைய வரலாற்று சரித்திர படங்கள் வரும் என்று சொல்லப்படுகிறது.
நீங்களும் அந்த படத்தை பார்த்து தான் ‘நந்திவர்மன்’ படத்தை எடுத்தீர்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்த இயக்குநர் பெருமாள் வரதன்,
“‘பொன்னியின் செல்வன்’ படம் அல்ல, அப்படம் பற்றிய முதல் அறிவிப்பு வெளியாகும் முன்பே இந்த படத்தின் முழு திரைக்கதையை எழுதி முடித்துவிட்டேன்.
சில மாதங்கள் தயாரிப்பாளர் தேடிக்கொண்டிருந்தேன். அந்த காலக்கட்டத்தில்தான் பொன்னியின் செல்வன் படத்தின் அறிவிப்பு வெளியானது.
எனவே, பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு முன்பாகவே என் படம் உருவாக வேண்டியது, தயாரிப்பாளர் கிடைக்காததால் கொஞ்சம் தாமதாமாகிவிட்டது” என்றார்.