ரவுடிகளுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்!

– காவல்துறையினருக்கு டி.ஜி.பி. உத்தரவு

தமிழகத்தில் கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் உள்ளிட்ட கொடுங்குற்றங்களில் ஈடுபடும் ரவுடிகளை காவல்துறையினர் தரம் பிரித்து பட்டியல் தயாரித்துள்ளனர்.

அதனடிப்படையில், ரவுடிகள் மீது தொடர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவுடிகள், அங்கிருந்து சதி திட்டம் தீட்டுகின்றனரா; ஜாமினில் வெளியே வந்துள்ள ரவுடிகளின் அன்றாட நடவடிக்கைகளை காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

எனினும், ரவுடிகளின் ‘ஆட்டத்தை’ காவல்துறையினரால் கட்டுப்படுத்த முடியவில்லை. புற்றீசல்கள் போல, அரசியல் சார்பு ரவுடிகள் அதிகரித்து வருகின்றனர். ரவுடிகளை ஒடுக்குவது காலத்தின் கட்டாயம். அப்போது தான், சட்டம் – ஒழுங்கை கட்டுக்குள் கொண்டு வர முடியும். அதற்காக, ரவுடி மற்றும் கூலிப்படையினருக்கு எதிரான நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என, ஐ.ஜி.,க்கள், கமிஷனர்கள், எஸ்.பி., உள்ளிட்ட காவல் உயர் அதிகாரிகளுக்கு, டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து விளக்கமளித்த காவல் உயர் அதிகாரிகள், “கூலிப்படை, வன்முறை வழக்குகளில் சிக்கிய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். இவர்கள் மீதான, நீதிமன்ற விசாரணையை விரைந்து முடித்து, தண்டனை பெற்றுத்தர வேண்டும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் வழக்குகளின் கோப்புகளை, ‘துாசி’ தட்டி, விசாரணை மேற்கொண்டு, குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்.

குற்றவாளிகளின் வழக்கு விபரம், புகைப்படம் மற்றும் வீடியோ என அனைத்தையும் ஆவணப்படுத்த வேண்டும். ‘டிஜிட்டல்’ முறையில் பட்டியல் தயாரித்தல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என உத்தரவிட்டுள்ளார்” எனக் கூறினர்.

You might also like