இந்த ஆண்டு அதிக புயல்கள் உருவாக வாய்ப்பு!

– வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

ஆந்திர கடலோரப் பகுதியில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆந்திர கடலோரப் பகுதியில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக தமிழ்நாட்டில் வரும் 9-ம் தேதி வரை 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும். வட தமிழக மாவட்டங்கள், வட தமிழக உள் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது“ எனத் தெரிவித்துள்ளது.

முன்னதாக வடகிழக்கு பருவமழை அக்.20-ம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது.

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பான அளவில் பெய்யக்கூடும். வடகிழக்கு பருவமழை காலத்தில் கடந்த ஆண்டுகளைவிட இந்த முறை அதிக புயல் உருவாக வாய்ப்பு உள்ளது எனவும் கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like