தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
சென்னை சோழிங்கநல்லூர் அருகேயுள்ள பக்கிங்ஹாம் கால்வாய் கரையோரப் பகுதிகளில் உள்ள சதுப்பு நிலங்களை போக்குவரத்து, சுற்றுலாத் துறைகளுக்கு மாற்றம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக எச்.சி.சேகர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், “மாநிலம் முழுவதும் ஆக்கிரமிப்பில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகள், சதுப்பு நிலங்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சதுப்பு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை கருணையின்றி அப்புறப்படுத்த வேண்டும்.
ஆக்கிரமிப்புகளில் உள்ள கட்டிடங்களுக்கு வழங்கப்படும் குடிநீர், மின்சார இணைப்பு ஆகியவற்றை துண்டிக்க வேண்டும்.
சதுப்பு நிலங்களை போக்குவரத்து, சுற்றுலாத் துறைகளுக்கு மாற்றம் செய்யும் தமிழக அரசின் உத்தரவுகள் ரத்து செய்யப்படுகின்றன என உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனுவை நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு விசாரித்தது.
அப்போது, தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் குமணன் மேல்முறையீட்டு மனுவை திரும்ப பெறுவதாக தெரிவித்தார்.
எதிர்மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.சிராஜுதின் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டினார்.
அதைப் பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், சதுப்பு நிலங்களை மீட்கும் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகளை முழுவீச்சுடன் செயல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.