‘நாய்க்கு பேரு வச்சியே சோறு வச்சியா’ என்று ஒரு படத்தில் நாகேஷ் வசனம் பேசியிருப்பார். போலவே, சில திரைப்படங்களைப் பார்க்கையில் கதைக்காக இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாமே என்று தோன்றும்.
அப்படியொரு படமாக அமைந்திருக்கிறது அருண்விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘சினம்’.
ஷபீர் இசையமைப்பில், கோபிநாத் ஒளிப்பதிவில் வெளியாகியிருக்கும் இப்படத்தை திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் ஜி.என்.ஆர்.குமரவேலன்.
’போலீஸ் நாயகன்’ கதை!
காவல் துறையின் கெடுபிடிகளை நாயகத்தனத்துடன் காண்பிக்கும் படங்கள் தமிழில் நிறையவே உண்டு. அவற்றில் யதார்த்தம் நிறைந்த படங்கள் வெகு அரிது. அவற்றுள் ஒன்றாக இடம்பிடித்திருக்கிறது ‘சினம்’.
ஆதரவற்றோர் இல்லத்தில் கல்வி கற்று காவல் துறையில் எஸ்.ஐ. ஆகப் பணியாற்றுபவர் பாரி வெங்கட் (அருண் விஜய்). நேர்மையாக இருப்பது இவரது பலம். ஆனால், உடன் பணியாற்றும் இன்ஸ்பெக்டருக்கு அதுவே எரிச்சலை ஊட்டுகிறது.
பாரியின் மனைவி பெயர் மாதங்கி (பாலக் லால்வானி). ரத்தப் பரிசோதனை நிலையமொன்றில் பணியாற்றும் இவருக்கும் பாரிக்கும் இடையே காதல் மலர்கிறது.
பெற்றோரின் எதிர்ப்பை மீறி பாரியின் கரம் பிடிக்கிறார் மாதங்கி. இவர்கள் இருவருக்கும் 4 வயதான ஒரு பெண் குழந்தை இருக்கிறது.
ஒருநாள் மாதங்கியின் தங்கையைப் பெண் பார்க்க வருவதாகத் தகவல் வருகிறது. வேலூரில் நடைபெறும் அந்த நிகழ்ச்சிக்கு மாதங்கியையும் குழந்தையையும் அனுப்பிவிட்டு, அன்றைய தினம் ஒரு வழக்கில் குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தச் செல்கிறார் பாரி.
நீதிமன்ற வளாகத்தில் அந்த நபர் கொலை செய்யப்பட, கொலையாளியைத் தேடித் திரிகிறார் பாரி. அந்த நபரைக் கைது செய்து சிறையில் அடைக்கிறார். அப்போது, வேலூரில் இருந்து சென்னை கோயம்பேடு திரும்பியதைத் தெரிவிக்கிறார் மாதங்கி. அவருக்காக செங்குன்றம் பேருந்து நிலையத்தில் பாரி காத்திருக்கிறார்.
ரொம்ப நேரம் ஆகியும் மாதங்கி வராததால் தவிக்கிறார் பாரி. அப்போது, செங்குன்றம் ஏரிக்கரை அருகே ஒரு கணவன் மனைவியின் சடலம் கிடைப்பதாகத் தெரிய வருகிறது. அங்கு சென்று பார்த்தால், மாதங்கியுடன் அடையாளம் தெரியாத ஒரு நடுத்தர வயது ஆண் கொலையாகிக் கிடக்கிறார்.
யார் அந்த நபர்? மாதங்கியையும் அவரையும் கொலை செய்தது யார்? கொலைக்கான காரணம் என்ன என்ற கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது ‘சினம்’.
வெறுமனே காவல் துறை செயல்பாடுகள் பற்றிய படமாக அல்லாமல், ஒரு சாதாரண மனிதன் சந்திக்கும் அவமானங்களும் இதில் உண்டு.
அதனாலேயே, அருண் விஜய் கொள்ளும் சினம் பார்வையாளர்களையும் தொற்றும் என்று எதிர்பார்த்திருக்கிறார் இயக்குனர் ஜி.என்.ஆர்.குமரவேலன். ஆனால், அது முழுமையாக நிகழவில்லை. அடிப்படைக் கதையில் இருக்கும் தெளிவின்மையே அதற்குக் காரணம்.
சுருங்கச் சொல்வதே பலமா?!
சில படங்கள் நீளமாக இருப்பது அலுப்பு தட்டும். சிலவோ ரத்தினச் சுருக்கமாக இருந்து, பல விளக்கங்கள் எங்கே போயிற்று என்று தேட வைக்கும்.
‘சினம்’ படத்தில் பெரிதாக எதுவும் விடுபடவில்லை. அதேநேரத்தில், ஒரு நல்ல படம் பார்த்த திருப்தியும் உருவாகவில்லை.
காரணம், மிகத்தட்டையான கதை. அதை நீட்டி முழக்குவதற்கு ஏதுவாக இல்லாமல்போன திரைக்கதை.
முதல் இருபது நிமிடங்களில் கதை காட்டும் உலகம் பிடிபடும்போது ஒரு திருப்பம் அல்லது புதிர் இடம்பெற்று, அதன் பின்னணியை அறிய அடுத்த ஒரு மணி நேரம் செலவழிக்கப்பட்டு, அதன்பிறகான அரை மணி அல்லது முக்கால் மணி நேரத்தில் அப்புதிருக்கான பதில் கிடைக்கப் பெற வேண்டுமென்பது ஒரு கமர்ஷியல் திரைக்கதைக்கான நியதி.
அப்படிப் பார்த்தால், நாயகனின் மனைவி கொலையாவதுதான் அந்த திருப்பம். ஆனால், அதுவே இடைவேளையை ஒட்டி நிகழ்கிறது.
பின்பாதி முழுவதும் அதற்கான காரணத்தை தேடி அலைவதைச் சொல்கிறது. அது தெரிந்தபிறகு சட்டென்று படம் முடிந்துவிடுகிறது.
’க்ளிஷே’வாக இருந்தாலும் கூட, நாயகியின் கொலையில் திரைக்கதை தொடங்கி இடையிடையே பிளாஷ்பேக் இடம்பிடித்திருந்தால் இக்குறை நிகழ்ந்திருக்காது.
கதை வசனம் எழுதிய ஆர்.சரவணனும் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் ஜி.என்.ஆர்.குமரவேலனும் அம்முடிவை எடுப்பதில் தடுமாறியிருக்கின்றனர். அதுவே ஒட்டுமொத்த படத்தின் சீர்மையையும் குலைத்துப் போட்டிருக்கிறது.
சுருங்கச் சொல்வது பலம் என்று நினைத்து கொலைக்கான காரணங்களைத் தேடும் இடமும் ரத்தினச் சுருக்கமாக அமைந்திருக்கிறது.
ஒரு பட்டியல் போல அதனை விரிவுபடுத்தி, ஒவ்வொன்றாக நாயகன் சரிபார்ப்பதாக இருந்தால் இன்னும் கொஞ்சம் நீளம் கூடியிருக்கும்; விறுவிறுப்பையும் அதிகப்படுத்தியிருக்கும்.
போலவே, கொலைக்கு காரணமானவர்களையும் திடீரென்று திரைக்கதைக்குள் நுழைத்திருப்பதையும் தவிர்த்திருக்கலாம். பரத் நடித்த ‘காளிதாஸ்’ உள்ளிட்டவற்றில் இதனைக் காண முடியும்.
அதேபோல, அன்றாடம் தான் பார்க்கும் விஷயங்களை வைத்து நாயகி தன் குழந்தைக்கு கதைகள் சொல்வதாக காட்சியமைப்பு உண்டு.
அதனையும் திரைக்கதையின் முடிச்சை அவிழ்க்கப் பயன்படுத்துவதில் அழுத்தம் காட்டத் தவறியிருக்கிறார் இயக்குனர்.
மேலே சொன்ன குறைகளை தவிர்த்துப் பார்த்தால், திரைக்கதையாக வடித்த காட்சிகளுக்கு அருமையாக உருவம் தந்திருக்கிறார் இயக்குனர்.
கோபிநாத்தின் ஒளிப்பதிவும் ராஜா முகம்மதுவின் படத்தொகுப்பும் நறுக்கு தெறித்தாற் போல இயக்குனரின் எண்ணத்தில் இருந்தவாறு காட்சிகளை வடிக்க உதவியிருக்கிறது.
பாடல்கள் ஓகே ரகம் என்றவாறு அமைய, பின்னணி இசை மூலமாக காட்சிகளுக்கு அழுத்தம் கூட்ட முயன்றிருக்கிறார் இசையமைப்பாளர் ஷபீர். திரையுலகுக்கு ஒரு நல்ல வரவு!
மைக்கேலின் கலை வடிவமைப்பு காவல் நிலைய காட்சிகளிலும் கிளைமேக்ஸ் சண்டைக்காட்சியிலும் அருமையாக அமைந்திருக்கிறது.
தனியாக நடிப்பைச் சிலாகிக்கத் தேவையில்லை எனும் அளவுக்கு, ஒரு கதாபாத்திரமாக உருமாறும் வித்தையை நீண்டகாலமாகப் பின்பற்றி வருகிறார் அருண் விஜய். இதிலும் அப்படியே!
ஒரு சீரியல் நடிகை போன்று திரையில் பாந்தமாக தோன்றியிருக்கிறார் பாலக் லால்வானி. தந்தையாக நடித்த கே.எஸ்.ஜி.வெங்கடேஷுடன் தோன்றும் காட்சிகளில் நன்றாக நடித்திருக்கிறார்.
அருண் விஜய் உடன் திரியும் காளி வெங்கட், ஒரு சாதாரணமான போலீஸ் கான்ஸ்டபிளை கண் முன்னே நிறுத்துகிறார்.
இவர்கள் தவிர்த்து மறைந்த ஆர்.என்.ஆர்.மனோகர், ரேகா சுரேஷ் என்று சுமார் ஒரு டஜன் நடிகர்களே திரையில் வந்து போயிருக்கின்றனர். அவரவருக்கான முக்கியத்துவம் தரப்பட்டிருப்பது ஆறுதல்.
திரைக்கதையில் கூட்டுழைப்பு தேவை!
‘நினைத்தாலே இனிக்கும்’ தொடங்கி ‘வாகா’ வரை அபாரமான காட்சியமைப்பு திறன் கொண்டவர் என்று பெயர் பெற்றவர் ஜி.என்.ஆர்.குமரவேலன்.
கிட்டத்தட்ட ஏ.எல்.விஜய்யின் படங்களைப் போலவே, இவர் படைப்புகளும் அழகியல் உணர்வுடன் அமையப் பெற்றிருக்கும். ’சினம்’ பார்க்கும்போது குறைவான பட்ஜெட்டில் நல்ல தரமான படத்தைத் தர முயன்றிருப்பது தெரிகிறது.
தினசரிகளில் நாம் பார்த்து வரும் பாலியல் அத்துமீறல் தொடர்பான செய்தியொன்றின் பின்னணியைத் தர முயன்றிருக்கிறது ‘சினம்’. ஆனால், இக்கதையில் நாயகனோ அவர் சம்பந்தப்பட்டவர்களோ எதிர்கொள்ளும் அவமானங்கள் இடம்பெறவில்லை.
குற்றத்தில் ஈடுபட்டவர்களின் சமூகப் பின்னணியோ, அதற்கான காரண காரியங்களோ விளக்கப்படவில்லை.
குற்றவாளிகளைத் தேடுவதற்காக நாயகன் மேற்கொள்ளும் விசாரணை யதார்த்தமாகத் தோற்றமளித்தாலும், அது முழுமையானதாகத் தோன்றுவதில்லை.
திரைக்கதையில் இன்னும் ஓரிரு நிபுணர்களின் பங்களிப்பு இருந்திருந்தால், இக்குறை நிவர்த்தி செய்யப்பட்டிருக்கலாம்.
அடுத்த படத்திலாவது இதுபோன்று நேராமல் பார்த்துக்கொண்டால், ஜி.என்.ஆர்.குமரவேலன் கொண்டாடப்படுவார்.
அதுவரை ‘சினம்’ ஓடிடியில் வெளியாகும்வரை காத்திருக்கலாம்!
– உதய் பாடகலிங்கம்