ஆக்ஷன் படங்களில் பல வகை உண்டு. அவற்றில் யதார்த்தத்தைப் பிரதிபலிப்பவை கொஞ்சம் அபாயகரமானவை. அவை ரசிகர்களுக்குப் பிடித்தமானதாக இருந்தாலே போதும்; பெரிய அளவில் கொண்டாடப்படும்.
ஆனால், ‘கரணம் தப்பினால் மரணம்’ என்பது போல சின்னதாய் ஒரு சர்ச்சை கிளம்பினாலே, அதன் விளைவுகள் வெகுகாலத்திற்குத் தொடரும்.
சிம்பு, சிதி இத்னானி, ராதிகா, அப்புகுட்டி, சித்திக், நீரஜ் மாதவ் உள்ளிட்ட பலர் நடிப்பில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் ‘வெந்து தணிந்தது காடு’, சில மனிதர்களின் வாழ்வை நேரில் பார்ப்பது போன்ற அனுபவத்தைத் தருகிறது.
அதே நேரத்தில், இதனால் சர்ச்சைகள் பூதாகரமாகுமா என்ற கேள்வியும் சேர்ந்தே எழுகிறது.
உள்ளும் புறமும் வெம்மை!
திருச்செந்தூர் வட்டாரத்தைச் சேர்ந்த முத்து வீரன் (சிம்பு) தன் தாய் (ராதிகா), தங்கையுடன் வாழ்கிறார்.
தந்தை பட்ட கடனை அடைக்க முடியாமல், சிறு வயதிலேயே வேலைக்குச் செல்கிறார். ஆனாலும், துயரம் அக்குடும்பத்தை இறுகப் பிடிக்கிறது.
மும்பையில் இருந்து ஊர் திரும்பிய சேர்மக்கனியைப் (பவா செல்லதுரை) பார்த்து, மகனை ஒரு நல்ல வேலையில் சேர்த்து விடுமாறு சொல்கிறார் முத்து வீரனின் தாய். அவரும் சரி என்று சம்மதிக்கிறார்.
ஆனால், அடுத்த நாளே அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறார். அப்போது, சேர்மக்கனி வசமிருக்கும் துப்பாக்கியை முத்து எடுத்துக்கொள்கிறார்.
அதன்பிறகு, தனியாக மும்பை சென்று சேர்மக்கனி சொன்ன இசக்கி பரோட்டா கடையைத் தேடிப் பிடித்து வேலையில் சேர்கிறார் முத்து. கொஞ்ச நாட்களில் அந்த கடையிலுள்ள அத்தனை வேலைகளும் அவருக்கு அத்துப்படியாகிறது.
அந்த பகுதியில் ரெடிமேட் ஜவுளிக்கடையொன்றில் வேலை பார்க்கும் பாவையின் (சிதி இத்னானி) அறிமுகமும் கிடைக்கிறது.
சில நாட்களிலேயே பாவை மீது காதல் பித்து பற்றும் அளவுக்கு, அவர் பின்னால் சுற்றத் தொடங்குகிறார் முத்து.
இசக்கியின் கடையில் வேலை செய்பவர்களில் சிலர் கூலிப்படை கொலையாளிகளாக இருப்பதும் அதனைச் செய்யவே தன்னை பணியில் சேர்த்திருப்பதும் முத்துவுக்குத் தாமதமாகவே புரிகிறது.
செந்தூரன் என்பவரின் கீழ் இசக்கி பணியாற்ற, அவர்களிருவருக்கும் தலைவராக கற்குவேல் என்பவர் இருப்பதும் தெரிய வருகிறது.
கற்குவேல் குழுவினருக்கும் கேரளாவைச் சேர்ந்த குட்டிபாய் (சித்திக்) என்பவருக்கும் இடையே நிலம் வாங்கி விற்பதில் பகை. யாருக்காகவோ நாம் ஏன் சாக வேண்டுமென்று எண்ணும் முத்து, அங்கிருந்து தப்பித்துச் செல்ல முயல்கிறார்.
அந்த நேரத்தில், இசக்கியின் பரோட்டா கடைக்குள் குட்டிபாயின் ஆட்கள் புகுந்து தாக்குகின்றனர். அவர்களைப் பதிலுக்கு தாக்கும் முத்து, ஒருகட்டத்தில் ஊரில் இருந்து தான் எடுத்து வந்த சேர்மக்கனியின் துப்பாக்கியைக் கொண்டு சுட்டுக் கொல்கிறார்.
அதன்பிறகு என்னவானது? வேண்டாம் என்று நினைக்கும் வன்முறை முத்துவின் வாழ்க்கையைப் பீடித்துக் கொண்டதா? பாவை உடனான முத்துவின் காதல் என்னவானது என்று நீள்கிறது ‘வெந்து தணிந்தது காடு’.
நிலத்தில் படர்ந்திருக்கும் வெம்மை முத்து மற்றும் அவர் சார்ந்த மனிதர்களின் மனங்களிலும் நிறைந்திருப்பது சில காட்சிகளிலேயே நமக்கு உணர்த்தப்படுகிறது.
இந்த தயார்படுத்தல்தான் பின்பாதியில் வரும் வன்முறைக் காட்சிகளுக்கான வித்தாகவும் அமைந்திருக்கிறது.
சிம்புவின் வெற்றி!
சிம்பு நாயகனாக அறிமுகமான ‘காதல் அழிவதில்லை’ படத்திலேயே அவர் எத்தகைய நடிகர் என்று தெரிந்துவிட்டது.
அடுத்த கமல்ஹாசன் என்று கொண்டாடப்பட வேண்டியவர், அடிக்கடி இடைவெளி எடுத்துக்கொண்டதால் விமர்சனங்களுக்கு உள்ளானார்.
‘மாநாடு’ வெற்றியைத் தொடர்ந்து, அதே சூட்டோடு கௌதம் கூட்டணியில் ‘வெந்து தணிந்தது காடு’ முத்துவாக தோன்றியிருக்கிறார்.
வலது இடது என்று இரு பக்கமும் சாய்ந்து நடப்பது, விடலைப் பருவத்திற்கே உரிய ஆர்வ மிகுதி, திடீரென்று பெருகும் ஆத்திரத்தை அப்படியே கொட்டுவது என்று அப்பாத்திரத்தை அவர் கையாண்டிருக்கும் விதம் பாராட்டுக்குரியது.
திக்கித் திணறி சொந்தமாய் தமிழில் பேசியிருக்கிறார் சிதி இத்னானி. வாரணம் ஆயிரம் சமீராவுக்கு தங்கை போன்றிருக்கிறார்.
அதனாலேயே என்னவோ நாயகனைவிட நாயகிக்கு வயது அதிகம் என்பதாக கதை அமைத்திருக்கிறார் இயக்குனர்.
சிம்புவின் தாயாக நடித்திருக்கும் ராதிகா சரத்குமார், திருச்செந்தூர் வட்டார வழக்கை கையாண்டிருப்பதும் முதிர்ந்த கைம்பெண்ணாகத் தோன்றும் விதமும் அப்பாத்திரமாகவே எண்ணத் தூண்டுகிறது.
அடியாட்களாக வருபவர்களில் சிலருக்கு வசனம் பேசவும் முகம் காட்டவும் திரைக்கதை இடம் தந்திருக்கிறது. அவர்களில் கற்குவேல், செந்தூரான், மாசாணம், இசக்கி பாத்திரங்களில் நடித்தவர்கள் மனதைத் தொடுகின்றனர்.
மலையாள நடிகர்கள் சித்திக் வழக்கமான வில்லனாக வருகிறார் என்றால், நீரஜ் மாதவ் ஏற்றிருக்கும் ஸ்ரீதரன் பாத்திரம் இதுவரையிலான தமிழ் சினிமாவில் மிக அரிதாகவே வடிவமைக்கப்பட்ட ஒன்று.
அவரது ஜோடியாக வரும் காயடு லோகருக்கும் முக்கியத்துவம் உண்டு. இவரைப் போலவே மூத்த நடிகை துளசிக்கும் இரண்டாம் பாகத்தில் முக்கியத்துவம் கிடைக்கும் என்று நம்பலாம்.
என்னதான் ‘க்ளிஷே’வாக இருந்தாலும், அப்புகுட்டியின் பாத்திர வடிவமைப்பும் அவரது இருப்பும் இப்படத்திற்குப் பெரும்பலம். அவரும் அதைச் சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார்.
ஜாபர் சித்திக்கின் வரவும் கூட ஆக்ஷன் காட்சிகளுக்கு வேகம் சேர்க்க உதவியிருக்கிறது.
பெரும்பாலான காட்சிகள் யதார்த்தமான களங்களில் படம்பிடிக்கப்பட்டிருப்பதும், ஆக்ஷன் படத்திற்கேற்ற ‘ஹேண்டி’ ஷாட்கள் அதிகமிருப்பதும் ஒளிப்பதிவாளர் சித்தார்த்த நுனியின் உழைப்பு பெரியது என்று காட்டுகிறது.
மிகச்சீராகச் செல்லும் திரைக்கதைக்கேற்ப படத்தொகுப்பைக் கையாண்டிருக்கிறார் ஆண்டனி.
ஆனால், இறுதியாக வரும் பத்து நிமிடங்களில் மட்டும் இரண்டாம் பாகத்திற்கான முன்னோட்டம் போல காட்சிகளை அடுக்கியிருப்பது கேஜிஎஃப்பின் தாக்கம் என்று உணர வைக்கிறது.
அதில் ‘நாயகன்’ வேலு நாயக்கர் ரெபரென்ஸும் உண்டு. கண்டிப்பாக அவை இரண்டாம் பாகம் தரும் ஆச்சர்யங்களை மட்டுப்படுத்தும்.
தயாரிப்பு வடிவமைப்பாளர் ராஜீவன் திருநெல்வேலி மற்றும் சென்னை வட்டாரப் படப்பிடிப்பைக் கவனித்துக்கொள்ள, மும்பை வட்டாரத்தை திரையில் காட்ட உதவியிருக்கிறார் சோனு ஹிட்டல்மானி.
ரஹ்மான் இசையில் பாடல்களே திரைக்கதையின் வெப்பத்தைத் தணிக்கிறது. அதேநேரத்தில், அவரது பின்னணி இசைதான் அத்திரைக்கதைதான் சூட்டை இன்னும் ஏற்றிவிடுகிறது.
படம் பார்த்து வெளியே வரும்போது இந்த முரண் நினைவுக்கு வருவது, தன் உழைப்பில் ரஹ்மான் இன்னும் வேகம் குறைக்கவில்லை என்பதற்கான சான்று.
திருச்செந்தூர் வட்டாரத்தில் இருந்து மும்பைக்குச் செல்லும் ஒரு இளைஞனின் சாகசக் கதையாகத் தோன்றினாலும், அதில் வாழ்வியலைச் சொன்ன விதத்தில் கவனம் ஈர்த்திருக்கிறார் ஜெயமோகன்.
’திக்கத்தவங்களுக்கு கூட தெய்வம் இருக்கும்’, ‘பணம் இல்லேன்னா தரையில கிடக்குற சாக்கு மாதிரி மிதிக்காங்க’ என்பது போன்ற வசனங்கள் கைத்தட்டல்களை எதிர்பாராமல் ஆங்காங்கே வந்து போயிருப்பது அழகு.
சர்ச்சைகளும் உண்டு!
போலீஸ் கேங்ஸ்டர் கதைகளில் போலீஸை மட்டுமே சாகச நாயகர்களாக காட்டும் வழக்கமுள்ள இயக்குனர் கௌதம், ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் எதிர்தரப்பின் நியாய அநியாயங்களைப் பேசியிருப்பது வித்தியாசம். அதற்காக, குற்ற உலகத்தை சாகசமானதாக காட்டாமல் சாதாரணமாகச் சொல்லியிருப்பதும் பாராட்டத்தக்கது.
நாயகியின் பெற்றோரிடம் நேரடியாகச் சென்று தான் அவரை மணக்கத் தயாராகவிருப்பதாக சிம்பு சொல்லும் காட்சியில், ‘அப்போ என்னோட சம்மதத்தை கேட்க மாட்டியா’ என்று சிதி இத்னானி சொல்லுமிடம் அப்பாத்திரத்தின் உணர்வுகளுக்கான முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
போலவே, துரோகம் இழைத்தவர் பற்றி நாயகன் வருத்தப்படும் காட்சியில் அப்பாத்திரம் தன் தரப்பு நியாயங்களைச் சொல்ல இரண்டு வரி வசனம் தரப்பட்டிருப்பது ஒவ்வொருவருக்கும் தனி உலகம் உண்டு என்பதை வெளிப்படுத்துகிறது.
‘என்னை அறிந்தால்’ போன்ற படங்களில் ‘கேங்க்ஸ்டர்’ உலகத்தை கௌதம் காட்டியிருந்தாலும் கூட, ‘வெந்து தணிந்தது காடு’வில் அதன் ஏற்ற இறக்கங்களை காட்ட முயற்சித்திருக்கிறார்.
சில காட்சிகளை குறும்பட பாணியில் மிக எளிமையாக அதீத அழகியல் மெனக்கெடல்கள் இல்லாமல் படமாக்கியிருக்கிறார். இந்த மாற்றம் தான் இப்படத்தின் ஆகப்பெரும் சிறப்பு.
கதைப்படி, வெளியூர் சென்று கடையிலோ அல்லது வேறேதோ பணியிலோ ஈடுபடுபவர்களில் சிலர் ரவுடித்தனத்தில் ஆர்வம் காட்டலாம். ஆனால், ஒரு கூலிப்படையே ஒரு ஹோட்டலில் இயங்குகிறது என்பது போல இக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.
போதாக்குறைக்கு, குறிப்பிட்ட வட்டாரத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட சாதியினரை மட்டுமே இப்படம் குறி வைத்திருப்பதாகவும் கூட சர்ச்சைகள் எழ வாய்ப்புகள் அதிகம். அது எப்படி என்பவர்கள், இப்படம் பார்த்த தென்மாவட்டக்காரர்களிடம் கருத்துகள் கேட்கலாம்.
’சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் வரும் பக்ஸ் பாத்திரம் போல, இதில் நடிகர் சித்திக்கின் பாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
பூடகமான வசனங்களிலும் மறைமுகமான காட்சியமைப்பிலும் அருவெருப்பூட்டும் உணர்வு மட்டுப்பட்டிருந்தாலும் அக்காட்சிகள் பேமிலி ஆடியன்ஸை தொந்தரவூட்டுவதாக இருக்கும்.
இவை அனைத்துக்கும் மேலாக, இடைவேளைக்கு முன்னதாக சிம்பு துப்பாக்கியை எடுக்க முயலும் காட்சி வருகிறது.
அதற்கு தியேட்டரில் எழும் ஆரவாரம் படத்தில் நிறைந்திருக்கும் வன்முறை உணர்வு குறித்த புலம்பல்களை பெருக்கெடுக்கச் செய்கிறது.
என்னதான் ஆயுதம் எடுத்தவனுக்கு ஆயுதத்தால் சாவு என்று வசனம் பேசி காட்சிகளை வடித்தாலும், பின்னதை விட்டு முன்னதை மட்டுமே ஒரு சமூகம் மனதிலிருத்துவது பேராபத்தின் அறிகுறி.
அவற்றைத் தவிர்த்துப் பார்த்தால், கௌதம் – சிம்பு கூட்டணியின் இந்த ‘ப்ரெஷ்’ முயற்சியைப் பாராட்டலாம்!
-உதய் பாடகலிங்கம்