கொலைவெறியைத் தணிக்கும் ரவுத்திரம்!

‘ஒரு தெக்கன் தள்ளு கேஸ்’ விமர்சனம்

ரவுத்திரம் என்பது காட்டுத் தீ போன்றது; ஒருமுறை பற்றினால் முழுதாய் எரித்தபிறகே தணியும்.

அப்படியொரு வேட்கை பிறந்தபிறகு, அதனைத் தணிக்க தனது ரவுத்திரத்தின் ஒரு துளியையே கருவியாகப் பயன்படுத்த முயலும் ஒரு மனிதனைப் பற்றி பேசுகிறது ‘ஒரு தெக்கன் தள்ளு கேஸ்’.

மறைந்த இயக்குனர் சாச்சியின் எழுத்தாக்கத்தில் உருவான ‘டிரைவிங் லைசென்ஸ்’, அவர் இயக்கிய ‘அய்யப்பனும் கோஷியும்’ இரண்டுமே இரு மனிதர்களுக்கு இடையிலான ‘தான்’ எனும் உணர்வெழுச்சியை அடிப்படையாகக் கொண்டவை.

இதுவும் அதே ரகம் என்றாலும், ஒட்டுமொத்த திரைக்கதையும் ஒருபக்கமாக மட்டுமே சுழல்வது வித்தியாசம்.

பீறிடும் கொலைவெறி!

வரகலா அருகேயுள்ள அஞ்சுதெங்கு எனும் கடலோரக் கிராமமொன்றில் முரட்டு சுபாவமுள்ள நல்ல மனிதராக அறியப்படுபவர் அம்மினி பிள்ளை (பிஜு மேனன்).

தனது மனைவி ருக்மிணியை (பத்மபிரியா) உயிராகப் பாவிப்பவர். சுற்றியுள்ள மனிதர்கள் பொறாமைப்படும் அளவுக்கு ஒற்றுமையாக வாழும் இவ்விருவருக்கும் குழந்தை பாக்கியம் இல்லை.

ருக்மிணியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் வசந்தி (நிமிஷா சஜயன்) அக்கிராமத்தைச் சேர்ந்த பொடியனை (ரோஷன் மேத்யூ) காதலிக்கிறார்.

தெனாவெட்டுமிக்க விடலையாக வலம் வரும் பொடியனுக்கும் அவரது நண்பர்களுக்கும், அக்கிராமம் சார்ந்த எல்லா விஷயத்திலும் அம்மினி மூக்கை நுழைப்பது எரிச்சலூட்டுகிறது.

ஒருநாள் இரவு தூக்கம் வராமல் வீட்டை விட்டு வெளியேறும் அம்மினி, காம்பவுண்ட் அருகே பொடியனும் வசந்தியும் எல்லை மீறுவதைக் கண்டு சத்தமிடுகிறார்.

அப்போது, அங்குவரும் ருக்மிணி அம்மினியை அதட்டி வீட்டினுள் அழைத்துச் செல்கிறார். ஆனாலும், இந்த விஷயம் கை கால் முளைத்து ஊருக்குள் தீயாகப் பரவுகிறது.

விஷயம் கைமீறுவதற்குள், பொடியனுக்கும் வசந்திக்கும் கல்யாணம் நிச்சயிக்குமாறு சொல்கிறார் ருக்மிணி. வசந்தியின் உறவினர்களுக்கும் அதுவே சரி என்றே படுகிறது.

ஆனால், நிச்சயதார்த்த நிகழ்விலும் அம்மினியே முன்னால் வந்து நிற்க, அங்கேயே தனது ஆத்திரத்தை வெளிப்படுத்துகிறார் பொடியன்.

தான் வீரன் என்று வசந்தியிடம் காட்டிக்கொள்ள நினைக்கும்போதெல்லாம் அம்மினி தடையாக வருவதாக எண்ணும் பொடியன், தன் நண்பர்களுடன் சேர்ந்து அவரைத் தாக்கத் திட்டமிடுகிறார்.

ஐந்து பேர் ஒன்றுசேர்ந்தும் ஒற்றை ஆளாக அனைவரையும் அம்மினி சமாளிக்க, வேறு வழியில்லாமல் அரிவாள் கொண்டு அவரை வெட்டுகிறார் பொடியன்.

அதன்பின் என்னவானது? பொடியன் உள்ளிட்ட ஐந்து பேரையும் அம்மினி என்ன செய்தார்? இரண்டு ஆண்களுக்கு இடையிலான ஈகோ மோதல், அவர்கள் சார்ந்த பெண்களை என்னவாக்கியது என்று சொல்கிறது ‘ஒரு தெக்கன் தள்ளு கேஸ்’.

ஒரு சிறு பொறி காட்டை அழிப்பதைப் போல, பொடியன் மற்றும் அவரது நண்பர்களின் கோபம் அம்மினியின் இயல்பைக் குலைக்கிறது. பொதுவாகவே, ஒருமுறை தாக்குதலுக்கு ஆளானவர் மனதில் கொலைவெறி பீறிடுவதே வழக்கமாக இருக்கும்.

ஆனால், அந்த ரவுத்திரத்தைத் தணிக்கும் விதமாக அவர் அந்நபர்களைக் குறைந்தபட்சமாகத் தண்டிக்க முனைவதே இக்கதையை வித்தியாசப்படுத்துகிறது.

ஒரு இனிய பிளாஷ்பேக்!

எண்பதுகளில் நிகழ்வது போல இக்கதை சொல்லப்பட்டிருப்பதே, இப்படத்தைப் பார்க்கத் தூண்டும் முதல் காரணம். ஜி.ஆர்.இந்துகோபன் எழுதிய ‘அம்மினி பிள்ளா வெட்டு கேஸ்’ எனும் சிறுகதையைத் தழுவி இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

இரண்டு மனிதர்களுக்கு இடையிலான ஈகோ மோதல் என்பதை வைத்துக் கொண்டு, அக்கடலோரக் காற்றை சுவாசிக்கும் இதர மனிதர்களை படைத்திருக்கிறார் திரைக்கதை எழுதிய ராஜேஷ் பின்னாடன்.

குறும்படத்திற்கான கதையை விரிவாக நீட்டி முழக்கியிருப்பது சற்றே அயற்சியூட்டுகிறது.

ஆனாலும் ஒவ்வொரு பாத்திரத்திற்கும் ஒரு குணாதிசயம், வெவ்வேறு பின்னணி, உணர்ச்சிகள் என்று ஒரு கிராமத்தையே முழுதாக உயிருடன் காட்ட முயன்றிருக்கிறது படக்குழு.

அம்மினி பிள்ளையாக நடித்திருக்கும் பிஜு மேனன், தனது வயதான தோற்றத்திற்கு ஏற்ற கதையை தேர்ந்தெடுத்திருக்கிறார்.

அதற்குத் தக்க ‘ஹீரோயிச பில்டப்’பும் கூட இருக்கிறது. ஆனாலும், ‘அய்யப்பனும் கோஷியும்’ பார்க்கும்போது இருந்த உத்வேகமும் உற்சாகமும் இதில் சுத்தமாக இல்லை.

ருக்மினியாக வரும் பத்மபிரியா, நீண்டநாட்கள் கழித்து திரையில் தோன்றியிருக்கிறார்.

கொஞ்சம் பருமனாகத் தெரிந்தாலும், தனது நடிப்பால் அந்த எண்ணம் எழாமல் செய்திருக்கிறார். அவரும் நிமிஷாவும் பேசும் வசனங்களில் காமம் இயல்பாக வெளிப்பட்டிருப்பது ஆச்சர்யம்.

கண்களே பாதி நடித்துவிடும் என்ற நிலையில் காதல், காமம், கோபம், அழுகை, அவமானம் என்று வெவ்வேறு உணர்வுகளை முகத்தில் படரவிட்டு பிரமிக்க வைக்கிறார் நிமிஷா சஜயன்.

அவரது ஜோடியாக வரும் ரோஷன் மேத்யூவுக்கு ஆத்திரமும் இயலாமையும் நிறைந்த பாத்திரம்.

ஆனால், அதனை முழுமையாக வெளிக்காட்டும் காட்சிகள் தரப்படவில்லை.

இதனால், ‘அய்யப்பனும் கோஷியும்’ பிருத்விராஜ் போன்றோ, ‘டிரைவிங் லைசென்ஸ்’ சூரஜ் போன்றோ தாக்கம் ஏற்படுத்தும் வாய்ப்பு பறிபோயிருக்கிறது.

ரோஷன் மேத்யூவின் நண்பர்களாக வருபவர்கள் தொடங்கி பிஜுவிடம் வலிந்து பேசும் அந்த கிராமத்தின் காமக்கிழத்தி, கேசட் கடை தொடங்கும் தம்பதி,

டீக்கடைக்காரர், சந்தையில் வியாபாரத்திற்கு வரும் பெண், திரைப்படம் தொடர்பான அறிவிப்பாளர், ஒரு பேருந்து முழுக்கவிருக்கும் பயணிகள் என்று பல பாத்திரங்கள் இதில் வருகின்றன.

தந்தையின் மரணத்திற்குப் பணி அவரது காட்டிலாகா பணியைச் செய்துவரும் ஒரு மகன் பாத்திரம் அதில் குறிப்பிடத்தக்கது.

இத்தனை பாத்திரங்கள் இருந்தும், அவற்றில் வித்தியாசம் கூடைக்கணக்கில் நிரம்பியிருந்தும் திரைக்கதையில் பெரிதாக திருப்பங்கள் இல்லாத்தால் அனைத்தும் விழலுக்கு இறைத்த நீராகியிருக்கிறது.

இயக்குனர் ஸ்ரீஜித் வெறுமனே அழகியலுக்கும் ஹீரோயிசத்துக்கும் முக்கியத்துவம் தந்தால் போதுமென்று விட்டிருக்கிறார்.

சுமார் நாற்பதாண்டுகளுக்கு முன்னர் ஒரு கடலோர கிராமம் எப்படியிருந்தது என்பதைக் காட்டுகிறது திலீப் நாத்தின் கலை வடிவமைப்பு.

’ஒரு இனிய பிளாஷ்பேக்’கை காணும் உத்வேகத்தை தரவும் வழி வகுத்திருக்கிறது.

அப்போதைய பேருந்து, ஆட்டோ, டீக்கடை, சந்தை செட்அப், லைட் ஹவுஸ் என்று பலவற்றை ‘ரீகிரியேட்’ செய்திருந்தாலும் ஒருகட்டத்தில் ஒரு சிறிய இடத்தில் அவை நிரப்பப்பட்டிருக்கும் உணர்வே பெருகுகிறது.

மது நீலகண்டனின் ஒளிப்பதிவில் நிரம்பியிருக்கும் ‘மூவ்மெண்ட்ஸ்’, ஒரு கமர்ஷியல் படம் பார்க்கிறோம் எனும் உணர்வைப் பெருக்குகிறது.

மனோஜ் கன்னத்தின் படத்தொகுப்பு தொடர்ச்சியாக காட்சிகளை அடுக்குகிறது. ஆனாலும், வேகம் பெருகி மீண்டும் குறையும் திரைக்கதை அமைப்பு வேண்டாத காட்சிகளை வெட்டாமல் தடுத்திருக்கிறது.

ஜஸ்டின் வர்கீஸின் பின்னணி இசை, பிஜு மேனனுக்கு ‘பில்டப்’ தரவே அதிகம் பயன்பட்டிருக்கிறது.

தடுமாறியிருக்கும் திரைக்கதை!

யாராலும் வீழ்த்த முடியாதவராக அறியப்பட்ட ஒரு நபரை இன்னொருவர் அரிவாளால் தாக்குகிறார் என்பதே கதையின் மையம்.

அப்படியானால், அந்த நபரின் ரவுத்திரம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதைக் காட்ட காட்சிகள் வேண்டாமா?

அப்படிக் காட்டினால் ‘கிளிஷே’வாகிவிடும் எனும் பயத்தில் வெறுமனே அவ்விஷயத்தை வசனமாக கடந்து போயிருக்கிறது ராஜேஷ் பின்னாடன் – ஸ்ரீஜித் கூட்டணி.

தாக்கப்பட்ட நபர் போலீஸில் புகார் கொடுக்காமல் தானே அதனைத் தீர்க்க முயல்வது சாதாரண விஷயமல்ல. ஆனால், ‘ஜஸ்ட் லைக் தட்’ அந்த இடத்தையும் கடந்திருப்பது ஒரு நல்ல எபிசோடை தவறவிட்டிருக்கிறது.

தன்னை அடித்தவர்களுக்கு அம்மினி பாடம் புகட்டப் போகிறார் என்பது ரசிகர்கள் அறிந்ததே! அதில் என்ன வித்தியாசம் இருக்கப் போகிறது என்று எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது.

போலவே, தான் மட்டுமே கணவனின் பெரும்பலம் என்று ருக்மிணி நம்புவதும் அதனைச் செயல்படுத்திக் காட்டுவதும் திரைக்கதையில் இன்னும் அழுத்தமாக வெளிப்பட்டிருக்கலாம்.

ஆனாலும், தன் கணவன் மீது ஊரார் அவதூறு சொல்லும் காட்சியில் அவருக்கு ஆதரவாய் பேசும் காட்சியில் கைத்தட்டல்களை அள்ளுகிறார் பத்மப்ரியா.

நாயகன் நாயகியின் காம உலகம், அது குறித்த ஊராரின் பார்வை, நாயகனின் தான்தோன்றித்தனம் உள்ளிட்டவற்றை பூடகமாகப் பேசி,

அது பற்றிய எதிர்தரப்பின் எண்ணவோட்டத்தைத் திரைக்கதையில் நிறைத்திருந்தால் இன்னும் கவனம் ஈர்த்திருக்கும் ‘ஒரு தெக்கன் தள்ளு கேஸ்’.

சில அம்சங்களில் ஏமாற்றம் தந்திருந்தாலும், ஐம்பதுகளை எட்டியபிறகு எப்படிப்பட்ட பாத்திரங்களில் நடிக்க வேண்டுமென்பதற்கு உதாரணமாகவே இதில் தோன்றியிருக்கிறார் பிஜு.

தமிழ் திரையுலகில் அது அரிதான விஷயம் என்பதால், அதற்காக மட்டுமே இப்படத்தைப் பார்க்கலாம்..!

-உதய் பாடகலிங்கம்

You might also like