போதையின் பிடியில் பள்ளி மாணவர்கள்!

பள்ளிச் சீருடையுடன் மாணவர்கள் சகஜமாக மது அருந்தும் காட்சிகளையும், மாணவிகள் மது அருந்தும் காட்சிகளையும் வெவ்வேறு வீடியோக்களில் பார்க்கிற சமூக அக்கறையுள்ளவர்கள் அதிர்ந்து போக வேண்டியிருக்கிறது.

மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் உள்ள நீதிபதிகளும் அப்படிப்பட்ட காட்சிகளைப் பார்த்து அதிர்ந்து தான் போயிருக்கிறார்கள்.

திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருக்கிற தகவல்களும் அதிர்ச்சி ரகம்.

‘’தமிழகத்தில் அரசே மதுபான விற்பனையில் ஈடுபட்டிருக்கிறது. மது அருந்துவோரின் எண்ணிக்கையில் தமிழகம் தான் முதலிடம் வகிக்கிறது.

பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை நிறந்திருக்கும் மதுக்கடைகளில் மது அருந்திவிட்டுப் பலர் வாகனங்களை ஓட்டுவதால் நிறைய விபத்துகளும், உயிரிழப்புகளும் நடக்கின்றன.

மதுக்கடைகள் திறந்திருக்கும் நேரத்தைக் குறைக்க வேண்டும். 21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மதுவை விற்கத் தடை விதிக்க வேண்டும்’’.

இந்த மனுவை  விசாரித்த நீதிபதிகள், ‘’பள்ளிச்சீருடைகளுடன் மாணவர்கள் மது அருந்தும் புகைப்படங்கள் அதிர்ச்சியளிக்கின்றன. நாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது என்றே தெரியவில்லை.

இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் மது விற்பனைக்குத் தடை விதிக்க நேரிடும்’’ என்று எச்சரித்திருக்கிறார்கள்.

மது விற்பனையை அரசே நடத்தி, அதன் விற்பனை இலக்கையும் அரசே தீர்மானித்து நெருக்கடி கொடுக்கும் போது, டாஸ்மாக் கடைக்காரர்கள் மது விற்பனையில் கவனம் செலுத்துவார்களா? எந்த வயதுக்காரர்கள் சரக்கை வாங்குகிறார்கள் என்பதில் அக்கறை காட்டுவார்களா?

ஒரு பக்கம் மது விற்பனை, மற்றொரு புறம் கஞ்சா போன்ற போதைப் பொருட்களின் விநியோகம், குட்கா போன்றவற்றின் விற்பனை என்று இளம் வயதுக்காரர்களைக் குறி வைத்து எப்படிப்பட்ட போதை வலை விரிக்கப்பட்டிருக்கிறது?

இத்தகைய ஊற்றுக்கண்களை அடைக்கப்போவது யார்?

*

You might also like