கணம் – நிகழ்காலத்தின் முக்கியத்துவம் சொல்லும்!

எந்த வாழ்க்கையை நரகம் என்று நினைக்கிறோமோ அதையே சொர்க்கம் என்று உணர்வதற்கு நிறைய அனுபவங்களைக் கடந்து வர வேண்டும்.

உண்மையைச் சொன்னால், ஒரு படத்தின் தொடக்கமும் முடிவுக்கும் இடையிலான திரைக்கதையில் அப்படிப்பட்ட அனுபவங்கள் நிறைந்திருந்தால் அது நிச்சயம் உலகப்படமாய் மிளிரும் என்பது எனது அனுமானம்.

ஸ்ரீகார்த்திக் இயக்கத்தில் சர்வானந்த், அமலா, சதீஷ், ரமேஷ் திலக், நாசர், ரித்து வர்மா, ரவி ராகவேந்தர் உள்ளிட்டோர் நடித்திருக்கும் ‘கணம்’ திரைப்படம் அப்படிப்பட்ட காட்சியாக்கத்தைக் கொண்டிருக்கிறது.

அது ரசிகர்களுக்கு பிடிக்குமா இல்லையா எனும் கேள்விக்கோ எம்மிடம் பதில் இல்லை.

கடந்த காலத் தவறுகள்!

கடந்த காலத்தில் நாம் செய்த தவறுகள், எதிர்பாராத இன்னல்களைச் சரி செய்ய முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? பெரும்பாலானோர் மனதில் இந்த எண்ணம் இருக்கும்.

தாயை ஒரு விபத்தில் இழந்து, தந்தையுடன் பட்டும் படாமல் உறவைப் பேணும் ஒரு மனிதன் ஆதி (சர்வானந்த்).

இசையே தனக்கான வாழ்க்கை என்றிருக்கும் இவருக்கு மேடை என்றால் பெரும்பயம். அதனால், இவரது இசைத்திறமை இந்த உலகத்திற்கு தெரியாமலேயே இருக்கிறது.

எந்த வகையிலாவது தாயின் இழப்பைச் சரி செய்ய முடியாதா என்ற தவிப்பு அவருக்குள் தகிக்கிறது.

ஆதியின் நண்பன் கதிருக்கோ (சதீஷ்) பல வரன்கள் தேடியும் சரியான வாழ்க்கைத் துணை அமையாத நிலை.

இன்னொரு நண்பனான தரகர் பாண்டிக்கோ (ரமேஷ் திலக்), தான் சிறுவயதில் ஒழுங்காக படிக்காத காரணத்தினால் இப்படியொரு வேலையைப் பார்க்க வேண்டியிருப்பதாக ஒரு வருத்தம் இருக்கிறது.

ஏதோ ஒரு வகையில் விரக்தியைச் சுமக்கும் இம்மூவரும், தற்செயலாக ரங்கி குட்டபால் (நாசர்) எனும் இயற்பியல் அறிஞரைச் சந்திக்கின்றனர்.

அவரோ, தான் ஒரு ‘டைம் மெஷினை’ கண்டுபிடித்துள்ளதாகவும் அதனை சோதித்துப் பார்க்க உதவ வேண்டுமெனவும் கூறுகிறார்.

தன் தாயை விபத்தில் சிக்காமல் தவிர்த்தால் அவரது உயிரைக் காக்கலாமே என்று ஏங்குகிறார் ஆதி. சிறு வயதில் தன்னைச் சுற்றி சுற்றி வந்த தோழியைக் காதலித்தால் வாழ்க்கை மாறியிருக்குமே என்று ஆசைப்படுகிறார் கதிர்.

பாடம் என்றாலே வேப்பங்காயாக கசக்கும் மனநிலையை மாற்றினால் நல்ல வேலைக்குச் சென்றிருக்கலாமே என்று நினைக்கிறார் பாண்டி.

இருபதாண்டுகளுக்கு முன்னர் டைம் மெஷின் சோதனையின்போது இழந்த நண்பன் மைக்கேல் ராயை (யோக் ஜேப்பி) மீட்க, கடந்த காலத்திற்கு இவர்கள் மூவரையும் அனுப்பிப் பார்க்கலாமே என்று திட்டமிடுகிறார் விஞ்ஞானி பால்.

இதையடுத்து ஆதி, கதிர், பாண்டி மூவரும் 2019இல் இருந்து 1998க்கு செல்கின்றனர். தங்களது பால்ய உருவங்களைக் கண்டு எப்படியெல்லாம் இருந்திருக்கிறோம் என்பதை அறிந்து ஆச்சர்யமடைகின்றனர். அப்போது சந்தித்தவற்றை முற்றிலுமாக மாற்ற முயற்சிக்கின்றனர்.

ஆனால், யார் இந்த புதிய நபர்கள் என்று யோசிக்கும் சிறுவர்கள் ஆதி, கதிர், பாண்டி மூவரும் அவர்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு வருகின்றனர்; ஒருமுறை மட்டுமே பயன்படுத்தத்தக்க ‘டைம் மெஷினை’ பயன்படுத்தி 2019ஆம் ஆண்டுக்கு வந்துவிடுகின்றனர்.

அதன்பின் என்னவானது? கடந்தகாலத்தில் பெரியவர்களாகவும் நிகழ்காலத்தில் சிறுவர்களாகவும் வாழ்வது எத்தகைய கொடுமை? ஆதி உள்ளிட்ட மூவரது கடந்த கால பிரச்சனைகளுக்கு நிகழ்காலத்தில் தீர்வு கிடைத்ததா, டைம் மெஷின் வரமா சாபமா என்று சொல்கிறது ‘கணம்’.

மெலிதான உணர்வோட்டம்!

தாயை விபத்தில் பறிகொடுத்த உணர்வு பயமாகத் தங்கி ஆதியின் வளமான எதிர்காலத்தை அரித்து சிதைக்கிறது.

இதனைத் திரையில் பிரதிபலித்து நம் மனதில் தங்குகிறார் சர்வானந்த். ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை, எங்கேயும் எப்போதும் படங்களுக்கு பிறகு அவர் நேரடியாக நடிக்கும் தமிழ் படம் என்றாலும், அக்குறை வெளிப்படாத அளவுக்கு நிதானமாக ‘டப்பிங்’ பேசியிருக்கிறார்.

சர்வானந்தின் தாயாக நடித்திருக்கும் அமலா, நீண்டநாள் கழித்து பெரிய திரையில் தலைகாட்டியிருக்கிறார்.

நாயகியாக அவரை ரசித்தவர்களுக்கு, அவரது முதிர்ந்த தோற்றம் உவப்பாக இருக்காது. அதனையும் மீறி, இயல்பான நடிப்பால் அக்கதாபாத்திரமாக மிளிர்கிறார்.

நண்பர்களாக வரும் சதீஷ், ரமேஷ் திலக் இருவருமே ‘ஒன்லைனர்’களை அள்ளிவிடவில்லை.

ஆனால், கடந்த கால தவறுகளை அவர்கள் நினைவுபடுத்தும் இடங்கள் இயல்பான நகைச்சுவையாக அமைந்திருக்கின்றன.

போலவே, கிளைமேக்ஸ் காட்சியில் தங்களுக்கான வாழ்வை அவர்கள் ஏற்றுக்கொள்ளும் இடமும் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது.

நாயகி ரீத்து வர்மாவுக்குப் பெரிதாக காட்சிகள் இல்லை என்றாலும், ரசிகர்கள் கவனம் பதியும் வகையில் திரையில் வந்து போயிருக்கிறார்.

விஞ்ஞானியாக வரும் நாசர், வழக்கம்போல தன் நடிப்பினால் அப்பாத்திரத்திற்கு உயிர் தந்திருக்கிறார்.

இது தவிர யோக் ஜேப்பி, ரவி ராகவேந்தர், வையாபுரி, எம்.எஸ்.பாஸ்கர், கேபிஒய் பாலா உள்ளிட்டோர் இதில் நடித்திருக்கின்றனர்.

இதே படம் தெலுங்கிலும் தயாராகியிருக்கிறது. அதில் சதீஷ், ரமேஷ் திலக் வேடங்களில் வெண்ணிலா கிஷோரும் பிரியதர்ஷியும் நடித்திருக்கின்றனர் என்பதே வித்தியாசம்.

நிகழ்காலத்தை பல வண்ணச் சிதறல்களாகவும், கடந்த காலத்தை பழுப்பான புகைப்படம் போலவும் பதிவு செய்திருக்கிறது சுஜித் சாரங்கின் ஒளிப்பதிவு.

கடந்த காலம், எதிர்காலம் என்று மாறி மாறி வரும் இடங்கள் பார்வையாளர்களைக் குழப்பிவிடாமல், வெகு நேர்த்தியாக கதை சொல்ல உதவியிருக்கிறது ஸ்ரீஜித் சாரங்கின் படத்தொகுப்பு.

டைம் மெஷின் இயங்கும் தருணங்களில் நம்மை மறக்கடிக்கிறது ஜேக்ஸ் பிஜோய்யின் பின்னணி இசை; ’அம்மா அம்மா’, ‘தாளம் தட்டும்’, ‘மாறிப்போச்சே’ என்று மூன்று பாடல்களுமே கதையோடு கலந்திருப்பதால் பாதியிலேயே எழுந்து போகத் துடிப்பவர்களும் இருக்கையில் அமர்ந்துவிடுகின்றனர்.

என்.சதீஷ்குமாரின் கலை வடிவமைப்பு கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் பிரித்துப் போடுவதில் முக்கியப் பங்காற்றியிருக்கிறது.

ஹாலிவுட் படங்களை காப்பியடித்து டைம் மெஷின் என்று ஏதோ ஒரு சாதனத்தை அண்ணாந்து பார்ப்பதற்குப் பதிலாக, மிகச்சாதாரணமான ஒன்றைக் காண வைத்திருக்கிறது.

1990களிலேயே தொலைக்காட்சி பரவலாகி 2000களில் செயற்கைக்கோள் யுகம் ஆரம்பமாகிவிட்டது. ஆனாலும் வானொலி, சைக்கிளை வைத்தே கடந்த காலம் என்று நம்பவைக்க முயன்றிருக்கிறார் இயக்குனர் ஸ்ரீகார்த்திக்.

முதல் அரை மணி நேரம் டெம்ப்ளேட் ஆக இருந்தாலும், அதன்பின் வரும் சில காட்சிகள் சிரிக்க வைக்கின்றன.

இடைவேளையில் வரும் திருப்பம் எதிர்பாராததாக இருக்கிறது; பின்பாதியில் அதற்கேற்ற காட்சியமைப்புகள் இல்லாததால் திரைக்கதை ‘இழுவை’யாகத் தோன்றுகிறது. கடைசி 20 நிமிட காட்சிகள் மட்டுமே அக்குறையைச் சரி செய்திருக்கிறது.

இந்த கணம் முக்கியம்!

வழக்கமாக கால எந்திரத்தில் ஏறி பழங்காலத்திற்கோ அல்லது ஆயிரம் ஆண்டுகள் தாண்டி எதிர்காலத்திற்கோ செல்ல விரும்புவதை காட்டியிருக்கின்றன சில திரைப்படங்கள்.

கடந்த காலத்தில் ஒரு தவறு சரி செய்யப்படுவது நிகழ்காலத்தில் எத்தகைய மாற்றங்களுக்கு காரணமாகியிருக்கிறது என்று சில படங்கள் சொல்லியிருக்கின்றன.

அவற்றில் இருந்து மாறுபட்டு நிகழ்காலத்தின் ஒவ்வொரு கணமும் முக்கியம் என்று சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஸ்ரீகார்த்திக். அதனாலேயே, இந்த ‘கணம்’ முக்கியத்துவம் பெறுகிறது.

நடிகர் நடிகைகளின் பில்டப்கள், வழக்கமான காதல் காட்சிகள், செயற்கையாகத் தோன்றும் ஹீரோயிசம், அதீதமான சென்டிமெண்ட் போன்றவை நிறைந்த மசாலா சினிமாக்களை வெறுப்பவர்களுக்கு ‘பளிச்’சென்று வேறொரு உலகத்தை காட்டுகிறது இத்திரைப்படம்.

சமீபத்தில் வெளியான தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ படம் கூட நாயகன் தனது பயத்தை எவ்வாறு வெற்றி கொள்கிறான் என்பதை ‘பீல்குட் லவ் டிராமா’ பாணியில் சொன்னது. அதையே சயன்ஸ் பிக்‌ஷன், பேண்டஸி பாணியில் ‘அம்மா சென்டிமெண்ட்’ கலந்து சொல்லியிருக்கிறது ‘கணம்’.

டைம் மெஷின் படங்கள் பார்த்த மிதப்பில் லாஜிக் பார்த்து கேள்விகள் கேட்க நிறைய பலவீனங்கள் திரைக்கதையில் இருக்கலாம்.

ஆனால், ஒரு நல்ல படம் பார்க்க வேண்டுமென்று மட்டும் விரும்பினால் ‘கணம்’ உங்களுக்குப் பிடித்தமானதாக இருக்கும்!

  • உதய் பாடகலிங்கம்
You might also like