இதயம் தருவோம் வகுப்பறைகளுக்கு…!

நூல் அறிமுகம்: 

சமகால கல்விச்சூழல் குறித்து ஊடகங்களில் ஒலிக்கும் குரல் ஆசிரியர் உமாமகேஸ்வரி. அச்சு ஊடகங்களில் எழுத்தின் வழியாகவும், காட்சி ஊடகங்களில் பேச்சின் வழியாகவும் அரசுப் பள்ளிகளின் நிலையை வெளிப்படுத்தும் நல்லாசிரியர்.

அவர் எழுதியதுதான் உரையாடும் வகுப்பறைகள் என்ற நூல். புக்ஸ் பார் சில்ட்ரன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

புரிதலோடும் உறுதிபடவும் பேசக்கூடிய ஆசிரியர்கள் பலரை இன்று நான் சந்திக்கிறேன். அரசுப் பள்ளிகளின் பெருமையாக விளங்கக்கூடிய மகள் உமா மகேஸ்வரி அத்தகைய ஆசிரியர்களில் ஒருவர் என்று பாராட்டுகிறார் நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள அ. மாடசாமி.

அதே நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள பத்திரிகையாளர் சுந்தரபுத்தன் வார்த்தைகளில் சில உங்கள் பார்வைக்காக…

எனக்கு எப்போதும் ஆச்சரியப்படவைக்கும் ஆசிரியராக இருக்கிறார் உமா.

அரசுப் பள்ளியில் அர்ப்பணிப்புடன் ஒரு கணித ஆசிரியராக பணியாற்றிக்கொண்டே சமகாலக்கல்வி எதிர்கொள்ளும் பிரச்னைகளை எழுதிக்கொண்டே இருக்கிறார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்காக… ஏழை எளிய பெற்றோர்களுக்காக… ஆசிரியர்களுக்காக எழுதிக்கொண்டே இருக்கிறார். அவருக்கு ஆசிரியப் பணிக்கான ஓய்வு என்பதே எழுத்தாக மாறிவிட்டது.

‘புதிய தலைமுறை கல்வி’ பத்திரிகையில் பணியாற்றிய காலங்களில் எனக்கு அறிமுகமானவர் உமா.

ஆசிரியர்கள் பிரச்னையா, புதிய கல்விக்கொள்கையா, மாணவர்களுக்குத் தேர்வுகளால் மன அழுத்தமா, கற்பித்தல் அல்லாத பணிகளால் ஆசிரியர்களுக்குச் சுமையா, தேர்வுக்கு வழிகாட்டுதலா… எது பற்றியும் கேட்கலாம். உடனே பதில் சொல்வார். அல்லது ஒரு கட்டுரையாக எழுதி அனுப்பிவிடுவார்.

இன்று கல்வி பிரச்னைகள் குறித்து அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் வெளிப்படையாக கருத்துச் சொல்வதற்கும், அதில் பாதிக்கப்படும் மக்களின் பார்வையை முன்வைப்பதற்கும் முந்திவரும் ஆசிரியை உமாமகேஸ்வரி.

அரசுப் பள்ளிகள் மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான அவரது வாதங்கள், சமூகத்தில் இன்று பல்வேறு உரிமைக் குரல்களாக பெருக்கெடுப்பதில் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியராக, ஆய்வாளராக, களச்செயல்பாட்டாளராக, பாடத்திட்ட வடிவமைப்பாளராக, கல்வித் திட்டங்களைச் செயல்படுத்தும் குழுவில் உறுப்பினராக எனப் பல்துறைகளில் பங்காற்றி செழுமையான அனுபவம் கொண்டவர்.

அவரது வலிமையான எழுத்து, கல்வித்துறைக்கும் மாணவ சமுதாயத்துக்கும் ஒரு வான்விளக்காக ஒளிர்ந்து வழிகாட்டுகிறது.

கல்வித்துறையின் வளர்ச்சிக்காக அங்கு நேரும் சிக்கல்கள், பிரச்னைகள் குறித்து உரையாட, குரல் கொடுக்க ஆசிரியர்களாகிய நாம்தான் முன்வரவேண்டும் என்ற நோக்குடன் நல்லாசிரியராக நாளும் பொழுதும் ஓடிக்கொண்டிருக்கிறார் ஆசிரியை உமாமகேஸ்வரி.

“கல்வி ஓர் அரசியல் செயல்பாடு” என்ற பாவ்லோ ப்ரேய்ரின் கருத்தைச் சுட்டிக்காட்டும் அவர், பாடங்கள் மட்டும் வகுப்பறையல்ல என்பதை தம் பள்ளியில் சத்தமில்லாமல் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.

நான்கு சுவர்களுக்கு வெளியே சுழலும் உலகம், மாணவர்களின் பிஞ்சு மனங்களின் எதார்த்தமான சந்தேகங்கள், அறிவியல் விசித்திரங்கள், குடும்பச் சிக்கல்கள் எனச் சகலத்தையும் பற்றி உரையாடும் வகுப்பறையை உயிர்ப்பு மிக்க உரையாடல்களின் பல்கலைக்கூடமாக மாற்றியிருக்கிறார்.

ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் நடந்த உரையாடல்களை அதன் உண்மைத்தன்மை மாறாமல் தரும் ஓர் அழகிய ஆவணத் தொகுப்பாக உமாமகேஸ்வரியின் இந்த நூல் வெளிவந்திருக்கிறது.

குழந்தைகளுடன் உரையாடும் வகுப்பறைகளே உயிரோட்டமான வகுப்பறைகளாக இருக்கமுடியும் என்று கருத்தை அடிப்படையாக வைத்து மனந்திறந்து உரையாடி மாணவிகளின் மன இருளை அகற்றியிருக்கிறார்.

“ஒரு ஆசிரியராக என்னைப் புதுப்பித்துக்கொள்ளவும் நான் குழந்தைகளிடமிருந்து கற்றுக்கொள்ளவும் எனக்கு அந்த உரையாடல்கள் மிகவும் உதவின”என்று நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்கிறார்.

வகுப்பறை என்றாலே பாடப்புத்தகமும், பாடங்களும், தேர்வுகளும், மதிப்பெண்களும், கரும்பலகையும், பணி முடித்த கையேடும், வருகைப் பதிவேடும்தான் பெரும்பான்மையான ஆசிரியர்களின் சிந்தனையும் எண்ணங்களுமாக நிறைந்திருக்கிறது. ஆனால் உண்மை நிலை முற்றிலும் வேறு.

மேற்சொன்ன அனைத்தும் வகுப்பறைக்கு முக்கியம் என்றாலும், அதை கடந்த மிக முக்கியமான விஷயம் மாணவர்களும், அவர்களது மனநிலையுமே என்ற நூலாசிரியர் உமாமகேஸ்வரியின் கருத்துதான் இந்த நூலின் இதயமாக இருக்கிறது.

இங்கே அவர் வகுப்பறைகளுக்கு இதயம் தந்த ஆசிரியையாக மிளிர்கிறார்.

உரையாடும் வகுப்பறைகள்!
-சு.உமாமகேஸ்வரி

வெளியீடு: புக்ஸ் பார் சில்ட்ரன்
7இ இளங்கோ சாலை,
தேனாம்பேட்டை, சென்னை – 18.
விலை: ரூ.80/-

பா. மகிழ்மதி

You might also like