பப்பாளி விவசாயத்தில் சாதிக்கும் தெலங்கானா விவசாயி!

தெலங்கானா மாநிலம், கரீம்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், பப்பாளி விவசாயம் செய்து தலைநிமிர்ந்து நிற்கிறார்.

பொதுவாக மண்ணின் தரத்தை மேம்படுத்தவும், சுற்றுச்சூழல் சமநிலையை ஏற்படுத்தவும் ஊடுபயிர் முறை வேளாண் அதிகாரிகளால் ஊக்குவிக்கப்படுகிறது.

பல விவசாயிகள் புதுமையான தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்ள முன்வருவதில்லை.

அப்படி முன்வரும் சிலரும் விரும்பிய முடிவுகளை எட்டமுடியாமல் மனமுடைந்து போகின்றனர்.

புதிய தொழில்நுட்பங்களை நடைமுறைப்படுத்துவதில் ஏற்படும் பிழை என்கிறார்கள் நிபுணர்கள்.

ஆனால், கரீம்நகர் மாவட்டம், கொத்தப்பள்ளி மண்டலத்துக்கு உட்பட்ட கோண்டாப்பூர் கிராமத்தில் உள்ள விவசாயி குண்டா அஞ்சய்யா, தன் நெல் வயலில் பப்பாளியைப் பயிரிட்டு நல்ல மகசூல் கண்டுள்ளார்.

பப்பாளி விவசாயம் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய அஞ்சய்யா,

“எனக்குச் சொந்தமான 4.2 ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிட்டு நல்ல வருமானம் ஈட்டுகிறேன். வேளாண் அதிகாரிகள் மற்ற பயிர்களை வளர்க்க விவசாயிகளை ஊக்குவித்து வருகின்றனர்.

இரண்டாம் பயிராக ‘தைவான் ரெட் லேடி பப்பாளி’யைத் தேர்ந்தெடுத்துப் பயிரிட்டேன். அதற்காகப் பண்ணையில் 1.2 ஏக்கர் இடத்தை ஒதுக்கினேன்” என்கிறார்.

வேளாண் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை முகமை ஊழியர்கள் பப்பாளி சாகுபடியின் நுட்பங்களைப் புரிந்துகொண்டு உர மேலாண்மை குறித்து விவசாயிகளிடம் தெரிவித்தனர்.

பப்பாளி பயிரிட்டதன் மூலம் மாதம் 53,600 ரூபாய் நிகர லாபம் ஈட்ட முடிந்ததாக அஞ்சய்யா தெரிவித்தார்.

அவரது வெற்றிக்கதை சுற்றுவட்டாரத்தில் உள்ள விவசாயிகள் பலருக்கும் உத்வேகம் அளித்துள்ளது. அஞ்சய்யாவின் பண்ணைக்கு அருகிலுள்ள பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பல்வேறு வேளாண் முறைகளைக் கற்றுக்கொண்டனர்.

“தொடக்கத்தில் நல்ல விளைச்சலைப் பார்க்கமுடியுமா என்று பயந்தேன். ஆனாலும், பண்ணையில் கொள்முதல் செய்யும் வியாபாரிகளுக்கு நேரடியாகப் பொருட்களை விற்பனை செய்கிறேன்.

என் விளைபொருட்களை எடுத்துச்சென்று சந்தையில் விற்கிறார்கள்” என்கிறார் அஞ்சையா. அறுவடைக் காலத்தில் அவரால் சந்தையில் 250 கிலோ பப்பாளியை விற்கமுடிகிறது.

நெல் பயிரிடும்போது கிடைக்கும் லாபத்தைவிடப் பப்பாளி பயிரிடுவதன் மூலம் அதிக லாபம் கிடைப்பதைக் கவனித்த அவர், காய்கறி சாகுபடியில் ஈடுபட முயன்றார்.

பா.மகிழ்மதி

You might also like