நட்சத்திரம் நகர்கிறது – ரஞ்சித் சொல்லும் காதல் அரசியல்!

இயக்குனர் பா.ரஞ்சித்தின் முதல் படமான ‘அட்டகத்தி’ தொடங்கி ‘சார்பட்டா பரம்பரை’ வரை அனைத்துமே தலித் அரசியலை முன்னிலைப்படுத்தின. ‘நட்சத்திரம் நகர்கிறது’ படமும் அதையொட்டியே அமைந்திருக்கிறது;

ஒரு கற்பனையான காதல் கதையின் ஊடே கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் நிகழ்த்தப்பட்ட ஆணவக் கொலைகளை பெரிய திரையில் ஆவணப்படுத்தும் பணியைச் செய்திருக்கிறது.

ஆனால் ‘மெட்ராஸ்’ போலவோ அல்லது ‘சார்பட்டா பரம்பரை’ போலவோ திரைக்கதையில் நம்மையும் ஒருவராக மாற்றும் வித்தையைச் சரிவர செய்திருக்கிறதா?

இதுநாள் வரை தம்மை ஒடுக்கப்பட்டவராக உணர்பவரிடத்தில் வேட்கையையோ ஒடுக்கியவராக எண்ணியிருந்தவர்களிடத்தில் குற்றவுணர்வையோ இப்படம் எழுப்புகிறதா?

படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே இக்கேள்விகளுக்கு எளிதாகப் பதில் கிடைத்துவிடுகிறது.

இனியன் – ரெனே காதல்!

காதலாகிக் கசிவதும் காமத்தில் முயங்குவதும் ஒன்றே என்றெண்ணும் இளையோரின் ஒரு துளியாக இனியனும் (காளிதாஸ்) ரெனேவும் (துஷாரா விஜயன்) வாழ்ந்து வருகின்றனர்.

ஒருநாள் நள்ளிரவில் இனியனும் சோர்வும் ரெனேவின் உற்சாகமும் எதிரெதிராக மோத, இருவரும் பிரிகின்றனர். உணவு முதல் இளையராஜா வரை, ரெனே சிலாகிக்கும் எந்தவொன்றிலும் இனியன் காணும் சாதி அபிப்ராயமே அந்த மோதலுக்கான அடிப்படைக் காரணம்.

என்றாலும், சுபைர் (ரெஜின் ஜோஸ்) நடத்தும் நாடக ஒத்திகையில் இருவருமே காதலர்கள் வேடத்தில் நடிக்கின்றனர்.

சாதி மதம் இனம் கடந்து மனிதர்கள் ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தாங்கியிருக்கும் அந்த நாடக குழுவில் ஒவ்வொருவரும் தனிமனித சுதந்திரத்திற்கு மதிப்பளிக்கின்றனர்.

சினிமாவில் நடிப்பதற்கான முன்னோட்டமாக அமையும் வகையில், அந்த குழுவில் இணையும் அர்ஜுனுக்கு (கலையரசன்) அந்த உலகமே வித்தியாசமாகப்படுகிறது.

ஆணும் பெண்ணும் காதலிப்பதைத் தாண்டி ஆண் – ஆண், பெண் – பெண், ஆண் – திருநங்கை காதல்களை கண்டு அவர் மிரண்டு போகிறார்.

சக மனிதர்களை அர்ஜுன் காணும் போக்கு மாறும்போது, சுபைர் குழுவினர் உருவாக்கும் நாடகமும் வளர்கிறது. ஒரு சாதாரண ஆண் பெண்ணின் காதல் இச்சமூகத்தால் எவ்வாறு நோக்கப்படுகிறது என்பதே அந்த நாடகத்தின் கரு.

அது நிறைவுற்று மக்களின் பார்வைக்கு முன்வைக்கப்படும் சூழலில், ராட்சசன் (சபீர்) மர்ம நபர் அதற்கு இடையூறு செய்ய முயற்சிக்கிறார். அவரது தடையை மீறி சுபைர் குழுவினரின் நாடகம் நிகழ்ந்ததா இல்லையா என்பதோடு முடிவடைகிறது ‘நட்சத்திரம் நகர்கிறது’.

காதல்தான் மையம் என்றானபிறகு, அதிலிருக்கும் இண்டு இடுக்குகளைக் கூட விடக்கூடாது என்று மெனக்கெட்டிருக்கிறார் இயக்குனர் பா.ரஞ்சித்.

இளைய தலைமுறையினர் சாதி வேலியைக் காதலைக் கொண்டு தாண்ட முயற்சிக்கும்போது ’நாடக காதல்’ என்ற பெயரில் ரத்தம் பீய்ச்சும் வேலையைச் செய்யும் மோசமான அரசியலையும் கூராய்வு செய்திருக்கிறார்.

அந்த அரசியலைப் பேசும்போது நிகழும் ஆதரவையும் எதிர்ப்பையும் ஒரே உரையாடலில் இடம்பெறச் செய்திருக்கிறார்.

கூடவே, சாதி பாகுபாடு மட்டுமல்லாமல் தன்பாலின ஈர்ப்பும் கூட காதலின் குறுக்கே வரக்கூடாது என்பதனை முன்வைக்கிறார்.

எல்லாமே சரிதான். ஆனால், ஒரு திரைப்படமாகப் பார்வையாளனை ஈர்க்கும் விதத்தில் ‘நட்சத்திரம் நகர்கிறதா’ இருக்கிறதா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

அசுரத்தனமான நடிப்பு!

ரெனேவாக நடித்திருக்கும் துஷாரா விஜயனைச் சுற்றியே ஒட்டுமொத்த படமும் நகர்கிறது. ‘சார்பட்டா பரம்பரை’யில் ரொம்பவும் ஒல்லியாக விடலைப் பெண்ணாகத் தோன்றியவர், இதில் காதலில் ஊறியவர் போன்று தோற்றமளிக்கிறார்.

படம் முழுக்க காதலன் மீதான கோபத்தில், எரிச்சலில், கிட்டத்தட்ட ஊடலில் இருக்கும் பாத்திரம் அவருக்கு. அந்த உணர்வு ஒரு பிரேமில் கூட விடுபடவில்லை.

காளிதாஸ் ஜெயராமும் அதை இம்மி பிசகாமல் திரையில் வெளிப்படுத்தியிருக்கிறார். காதலை இழந்த வலியில், அது தந்த சுகமான நினைவுகளில் மூழ்கியிருப்பதை படம் முழுக்க வெளிப்படுத்தியிருக்கிறார். இதற்காகவே காளிதாஸுக்கும் துஷாராவுக்கும் விருதுகள் குவிய வேண்டும்.

இவர்கள் இருவரையும் தாண்டி டயானா – பிரவீனாக வரும் சுமீத் போரானா, அர்ஜூன் இருவரும் அபாரமாக நடித்திருக்கின்றனர்.

கிட்டத்தட்ட காளிதாஸ், துஷாராவுக்கு அடுத்து படம் முழுக்க வருவது கலையரசன். ரஞ்சித் சொல்லும் கதைகளையும் வாதங்களையும் கிண்டலடிப்பவர்களின் குரலாகவே அவரது பாத்திரம் படைக்கப்பட்டுள்ளது.

அதையும் தாண்டி குறிப்பிட்ட சாதியைச் சார்ந்தவராகத் திரையில் அவரது பாத்திரம் வெளிப்படுகிறது. நிச்சயம் இது அதிர்வலைகளைக் கிளப்பும்.

இவர்கள் தவிர்த்து ‘மெட்ராஸ்’ வில்லன் சார்லஸ் வினோத், ஹரிகிருஷ்ணன், ’சார்பட்டா பரம்பரை’யில் ரோஸ் ஆக நடித்த ஷபீர், சுபத்ரா, ரெஜின் ரோஸ் என்று கிட்டத்தட்ட இரண்டு டஜன் நடிகர் நடிகைகள் படத்தில் இடம்பெற்றுள்ளனர்.

மைம் கோபியும் கூட சிறு வேடமொன்றில் நடித்திருக்கிறார்.

இத்தனை நடிகர் நடிகைகளையும் ஒருசேரத் திரையில் காண்பிக்கும்போது ‘நாடகத்தனம்’ தென்படக்கூடாது. அதனைத் தவிர்ப்பதற்குப் பதிலாக, நாடக ஒத்திகையையே கதைக்களமாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார் ரஞ்சித்.

அதனை ஏற்றுக்கொள்பவர்களும், என்னதான் சொல்லியிருக்கிறாரென்று பார்ப்போமே என்பவர்களும் மட்டுமே திரைக்கதையுடன் தொடர்ந்து பயணிக்க முடியும்.

தெருக்கூத்தையும் வீதி நாடகங்களையும் அவற்றின் நவீன வடிவங்களையும் ‘அலர்ஜி’யாக எண்ணும் ஒரு சமூகத்தில் இப்படியொரு திரைக்கதை வடிவத்தை முன்வைத்திருப்பது ஆகப்பெரிய சவால்.

கூடவே வழக்கத்திற்கு மாறான உரையாடல்களும் காட்சிகளும் அதிகம் இடம்பெற்றிருக்கின்றன. இதனால், படம் கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஓடுகிறது.

இவ்வளவு இருந்தும் திரையில் இளமை கூட்ட உதவியிருக்கிறது ஏ,கிஷோர் குமாரின் ஒளிப்பதிவு. காட்சிகளில் வெளிப்படும் உணர்வுகள் கொஞ்சமும் மங்காத வண்ணம் சீர்மையை வெளிப்படுத்தியிருக்கிறது செல்வா ஆர்.கே.வின் படத்தொகுப்பு.

ஜெயராகுவின் கலை வடிவமைப்பு ஒரு ‘காலேஜ் கல்ச்சுரல்ஸ்’ நடக்குமிடத்திற்குச் சென்ற உணர்வை ஊட்டுகிறது. தவிர துஷாரா மற்றும் இதர கலைஞர்களின் மேக்அப், காஸ்ட்யூம் வடிவமைப்பு, ஒலிப்பதிவு என்று பல அம்சங்கள் இதில் புத்துணர்வைத் தருகின்றன.

குறிப்பாக தென்மாவின் பின்னணி இசை ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தை இன்னொரு முறை காண வேண்டுமென்ற எண்ணத்தை ஆழ விதைக்கிறது.

’பருவமே’ பாடல் பார்ட்டிகளில் குதூகலமூட்டும் என்றால், ‘பேரின்ப காதல்’ நிச்சயம் காதலில் திளைக்கத் தூண்டுவதாய் இருக்கும்.

இவற்றில் இருந்து முற்றிலும் வேறுபட்டு காதலுக்காக கழுத்தறுக்கப்பட்டவர்களின் வலியைச் சொல்கிறது ‘ஜனமே’ பாடல்.

இத்தனை பேரின் உழைப்பையும் ஒட்டுமொத்தமாகச் செதுக்கிய வகையில் ரஞ்சித்தின் தீர்க்கமான பார்வையை சாதாரணமாக எடை போடக் கூடாது.

உண்மையைச் சொன்னால், தனது முந்தைய படங்களை விட, தயாரிப்புகளை விட, இதில் ரொம்பவும் தீவிரமாக தற்கால சாதி அரசியலை தோலுரித்திருக்கிறார்.

சாதி வன்மத்தை விதைக்கும் காட்சிகளை, தலைவர்களை மிகக்காட்டமாக விமர்சித்திருக்கிறார். அது எல்லா மக்களையும் சென்றடைய வேண்டுமானால் படம் மக்களுக்குப் பிடித்தமான வகையில் மிக எளிமையாக இருக்க வேண்டும்.

ஆனால், ரஞ்சித் திரைக்கதையில் நிறைத்திருக்கும் குறியீடுகள் அதற்கு மாபெரும் தடைகளாக இருக்கின்றன.

குறியீடுகள் மட்டும் போதுமா?

ஒடுக்கப்பட்டவளாக அடையாளப்படுத்தப்பட்ட தமிழ் எனும் பெண் தனது பெயரை ‘ரெனே’ என்று மாற்றிக்கொண்டு, வலிகளையும் அவமானங்களையும் மீறி இச்சமூகத்தில் தன்னை வலுமிக்கவளாக உணர்வதும் தொடர்ந்து பயணிப்பதும் அதற்கு அவரது காதல் உறுதுணையாக இருப்பதும் தான் ‘நட்சத்திரம் நகர்கிறது’ திரைப்படம்.

ரெனே – இனியன் காதல்தான் படத்தின் மையம் என்றபோதும், திரைக்கதையில் இருவரது குடும்பத்தினருமே காட்டப்படவில்லை.

அதேநேரத்தில் ரெனேவை விட்டு முதலில் விலகி பின்னர் காதலில் விழும் அர்ஜுனின் குடும்பமே பிரதானப்படுத்தப்படுகிறது. ஆணும் பெண்ணும் வேறொரு சாதியைச் சேர்ந்தவர்களைக் காதலித்தால் அது ‘நாடகத்தனம்’ என்று ஆணித்தரமாக நம்பிய அர்ஜுனின் மனமாற்றமே படத்தின் திருப்புமுனை.

படத்தின் கிளைமேக்ஸில் கலாசார காவலர்கள் என்ற போர்வையில் சுபைர் குழுவினரின் நாடகத்தை தடுக்கும் மர்ம நபர், அக்குழுவிலுள்ள ஒவ்வொருவரின் ஆணிவேர் வரை அறிந்து வைத்திருக்கிறார்.

தன்னைத்தானே ராட்சசன் என்று சொல்லிக்கொள்ளும் அவர் திரையில் தோன்றும்போது, பின்னணியில் சிங்கம் கர்ஜிக்கிறது. தனக்கு உத்தரவுகள் வழங்குபவரை ‘மாஸ்டர்’ என்றழைக்கிறார் அந்நபர்.

நாடகம் நடத்துபவர்களை கொடூரமாக தாக்குகின்றனர் அவரது ஆட்கள். ரெனேவும் மற்றவர்களும் பதிலடி தரும்போது, நாற்காலிகளுக்கு நடுவே அவர் தவழ்ந்து போகிறார்.

அது மட்டுமல்லாமல் ஆணவக் கொலைக்கு ஆளானவர்கள் குறித்த அசல் பதிவுகளும் கூட இடையிடையே இடம்பெற்றிருக்கின்றன.

இவையெல்லாம் எதிர் அரசியல் என்றால், இன்னொரு புறம் அம்பேத்கரியம் பூதாகரப்படுத்தப்பட்டிருக்கிறது.

இளையராஜாவின் இசையைவிட அவர் இன்ன சாதியில் பிறந்தார் என்பதைச் சொல்லிப் புறக்கணிப்பவர்களை விமர்சிக்கிறார் ரெனே.

அர்ஜுனை ரெனே சினேகத்துடன் காபி அருந்த அழைக்கும்போது அரங்கத்தின் கதவு திறக்கப்படுகிறது. அந்த கதவுக்கு மேலிருக்கும் சுவரில் புத்தர் சிரிக்கிறார்.

இவ்வளவு ஏன், தான் பலமுறை உடலுறவு கொண்டிருப்பதாக இனியனிடம் ரெனே சொல்வது கூட இதுவரை ஒரு வெகுஜன சினிமாவில் நாம் பார்த்திராத ’பெண்ணிய அரசியல்’ தான்.

இப்படி படம் நெடுக பல அரசியல் விஷயங்கள் இருக்கின்றன; சிலவற்றை நாம் இன்னொரு முறை காண்கையில் உணரலாம்.

இவை எல்லாம் எனக்கு ஒரு உணவில் பயன்படுத்தப்படும் அழகூட்டிகளாக, சுவையூட்டிகளாக மட்டுமே தெரிகின்றன.

அவற்றின் அடர்த்தி கூடும்போது உள்ளிருக்கும் உணவு என்னவென்பது கூட தெரியாமல் போய்விடும்.

போலவே, சாதியைச் சிதைக்கவல்ல காதலைப் பார்வையாளர்களிடம் நிறைக்கும் வாய்ப்பைத் தவற விட்டிருக்கிறது ‘நட்சத்திரம் நகர்கிறது’;

அதிகளவிலான பார்வையாளர்கள் திரும்பத் திரும்ப காண்பதற்கான உற்சாகத்தையும் வறழச் செய்திருக்கிறது.

-உதய் பாடகலிங்கம்

You might also like