உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா இன்றுடன் ஓய்வுபெறவுள்ள நிலையில், அவரது தலைமையிலான அமர்வு விசாரிக்கும் அனைத்து வழக்குகளின் விசாரணை மற்றும் தீர்ப்புகள், நேரலை செய்யப்பட்டு வருகிறது.
உச்சநீதிமன்றத்தின் 71வது ஆண்டுகால வரலாற்றில் வழக்கு விசாரணை நேரலை செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும். காலை 10.30 மணிக்கு தொடங்கிய நேரலை, மாலை வரை ஒளிபரப்பப்பட இருக்கிறது.
மொத்தம் 20 வழக்குகள் இன்று நேரலையில் விசாரிக்கப்பட உள்ளன. நேஷனல் இன்பேர்மேட்டிக் சென்டர் எனப்படும் தேசிய தகவல் மையத்தின் இணையதளம் மூலம் நேரலை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 2015ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற ஹெல்மெட் தொடர்பான வழக்கின் விசாரணை நேரலை செய்யப்பட்டது. அது உயர்நீதிமன்ற வரலாற்றில் முதல் நேரலையாகும்.
ஹெல்மெட் கட்டாயத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தியதால் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்தது. கொரோனா தொற்று வேகமாக பரவிய காலகட்டத்தில், வழக்குகள் காணொலி காட்சி மூலம் நடத்தப்பட்டன.
ஆனால் அவைகள் நேரலை செய்ய தடை விதிக்கப்பட்ட நிலையில், கடந்த 2020ம் ஆண்டு அக்டோபரில் குஜராத் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணை முதல்முறையாக காணொலியில் நேரலை செய்யப்பட்டது.