இந்தியன்-2: ஷங்கர் நினைத்தது வேறு, நடந்தது வேறு!

இளம் வயதில் நாடக சபா ஒன்றில் நடிகனாக, தனது கலைப் பயணத்தை ஆரம்பித்தவர் ஷங்கர். சினிமா நடிகராக வேண்டும் என்பது அவரது கனவு.

“நினைத்ததெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை’’ எனும் பாடல் அவரது வாழ்க்கையில் ஒவ்வொரு பகுதியிலும் வந்து சென்றது.

தொடகம் முதல், கலைப்பயணத்தில் அவர் நினைத்தது எதுவுமே நடக்கவில்லை.
ஷங்கரின் நாடக மன்ற தோழர் ஓமகுச்சி நரசிம்மன், சினிமாவில் நடிகராகி விட ஷங்கரோ டைரக்டராகி விட்டார்.

எஸ்.ஏ.சந்திரசேகர், பவித்ரன் ஆகியோரிடம் உதவியாளராக பணிபுரிந்த ஷங்கரை டைரக்டராக உயர்த்தினார் குஞ்சுமோன்.

‘ஜெண்டில்மேன்’ – முதல்படம்.

அதில் சரத்குமாரை நடிக்க வைக்க விரும்பினார். அழைப்பிதழ்கூட ரெடி. கடைசி நேரத்தில் சரத் மறுக்கவே, அர்ஜுன் ஹீரோவானார்.

இரண்டாவது படமான காதலன் படத்தின் கதையை பிரசாந்தை மனதில் வைத்து எழுதினார் ஷங்கர். ஜெண்டில்மேன் அப்போது ரிலீஸ் ஆகி இருக்கவில்லை.

பிரசாந்த் தயக்கம் காட்டினார். பிரபுதேவா ‘காதலன்’ ஆனார்.

தனது முதல் சொந்தப் படமான முதல்வன் கதையை, ரஜினிகாந்தை மனதில் வைத்தே செதுக்கினார் ஷங்கர். அப்போது கலைஞர் முதலமைச்சராக இருந்தார்.

அவருடன் நல்ல நட்பில் இருந்தார் ரஜினி. முதல்வனில் சில சர்ச்சையான விஷயங்கள் இருந்ததால் ரஜினி தயங்கினார்.

ஷங்கரிடம் “சாரி’’ சொல்ல – மீண்டும் அர்ஜுனுடன் இணைந்தார். ரோபா கதையும், கமலுக்காக சுஜாதா உருவாக்கிய கதை. சந்தர்ப்பங்கள் கூடி வராததால், ரஜினி ’எந்திரன்’ ஆனார்.

அந்தப் படத்தை முதலில் லைகா நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது.
பட்ஜெட்டை பார்த்து லைகா மிரண்டு போனது.

ரஜினிகாந்த இந்த விவகாரத்தில் நேரடியாக களம் இறங்கி, கலாநிதி மாறனை சந்தித்து சன் பிக்சர்ஸ் மூலம் எந்திரனை தயாரிக்க ஏற்பாடு செய்தார்.
இப்போது இந்தியன – 2 விவகாரத்துக்கு வருவோம்.

லைகா நிறுவனம் தான் இந்தப் படத்தை தயாரிக்கும் பொறுப்பை ஏற்றது.
முதல் கோணல்… முற்றும் கோணல் எனும் பழமொழி – இந்தப் படத்துக்கு முற்றிலும் பொருந்தும்.

படத்துக்கு பூஜை போட்ட சில நாட்களிலேயே கமல் மேக்கப் விஷயத்தில், டைரக்டருக்கும், ஹீரோவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், படத்தை டேக் ஆஃப் செய்ய கொஞ்ச நாட்கள் பிடித்தது.

ஓரளவு படம் வளர்ந்த நிலையில் 2020 ஆம் ஆண்டு போரூர் அருகே பட ஷுட்டிங்கின் போது விபத்து நிகழ்ந்து 3 பேர் உயிரிழந்தனர். இதனால்
படம் நிறுத்தப்பட்டது.

பிறகு கொரானா, கமலில் அரசியல் பிரவேசம் போன்ற பிரச்சினைகளால் படம் உயிர் பெறுமா என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.
ஹீரோயின் காஜல் கல்யாணமாகி பீல்டை விட்டு ஒதுங்கினார்.

பிரதான நகைச்சுவை வேடத்தில் நடித்த விவேக் மரணம் அடைந்தார்.
ஷங்கர், தெலுங்கு படத்தை இயக்க போய் விட்டார். லைகா தயாரித்த முந்தைய சில படங்கள் நஷ்டம் அடைந்திருந்ததால், இந்தியன் -2 வை தொடர அந்த நிறுவனம் விரும்பவில்லை. படம் ‘டிராப்’ என்றே கனவு தொழிற்சாலையில் பேசப்பட்டது.

இந்த நிலையில் தான் விக்ரம் – 2 மூலமாக இந்தியன் – 2 வுக்கு உயிர் கிடைத்துள்ளது.

எப்படி?

கமல்ஹாசனின் சொந்தப்படமான விக்ரம் படத்தை உதயநிதியின் ரெட்ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம், விநியோகம் செய்தது.

அதன்மூலம் கோடிகளில் லாபம் கிடைத்தது. கமலஹாசனுடன் உதயநிதிக்கு நல்லுறவு உண்டானது.

கமல் ஏற்பாட்டில் இந்தியன் – 2 படத்தின் இணை தயாரிப்பாளராக லைகாவுடன் ரெட்ஜெயண்ட் மூவீஸ் இணைந்துள்ளது.

இதனை அடுத்து, சென்னையில் புதன்கிழமை இந்தியன் – 2 ஷுட்டிங் மீண்டும் தொடங்கியுள்ளது.

பாபி சிம்ஹா, ஜெயப்பிரகாஷ் தொடர்பான காட்சிகளை ஷங்கர் படமாக்கினார்.
காஜல் மீண்டும் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். விவேக் பாத்திரத்தில் குரு சோமசுந்தரம் நடிக்கிறார்.

அடுத்த மாதம் முதல் வாரத்தில் இருந்து ஷுட்டிங்கில் கமலஹாசன் பங்கேற்க உள்ளார்.

இதுவரை 60 சதவீத படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. எஞ்சிய 40 சதவீதக் காட்சிகள் படமாக்கப்பட வேண்டும்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே படத்தை ரிலீஸ் செய்திருக்க வேண்டும்.
ஆனால், தயாரிப்பாளர் தொடங்கி பட ரிலீஸ் வரை ஷங்கர் நினைத்தது வேறு, நடப்பது வேறு.

– பி.எம்.எம்.

You might also like