மாஸ் மசாலா படங்கள் எடுப்பதில் இருக்கும் ஆகப்பெரிய சிக்கல், கொஞ்சம் சறுக்கினாலும் அபத்தக் களஞ்சியம் ஆகிவிடும். அஸ்திவாரம் பலமாக அமைந்துவிட்டால், அதற்கு நேரெதிராக காலம்காலமாக கொண்டாடப்படும்.
இவ்விரண்டையும் மாறிமாறி அனுபவித்து வருபவர் தெலுங்கு திரைப்பட இயக்குனர் பூரி ஜெகன்னாத்.
தம், தவம், எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, போக்கிரி, அயோக்யா என்று இவர் இயக்கிய சில படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்பட்டிருக்கின்றன.
விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், ஷங்கி பாண்டே நடிப்பில் பூரி ஜெகன்னாத் தெலுங்கு மற்றும் இந்தியில் இயக்கியிருக்கும் படம் ‘லைகர்’.
இது தமிழ், மலையாளம், கன்னடத்திலும் ‘டப்’ செய்யப்பட்டுள்ளது. இந்த லைகர் பூரி ஜெகன்னாத்துக்கு சாதனையாக அமைந்திருக்கிறதா சோதனையாக அமைந்திருக்கிறதா?
அதென்ன லைகர்?
ஒரு சிங்கத்திற்கும் புலிக்கும் இடையிலான உறவால் பிறக்கும் உயிருக்கு ‘லைகர்’ என்று ஆங்கிலத்தில் பெயர்.
எம்எம்ஏ எனப்படும் மிக்ஸ்டு மார்ஷியல் ஆர்ட்டில் சாம்பியன் ஆக முயற்சித்து அவ்விளையாட்டின்போதே மரணமடைந்த பல்ராம் என்பவருக்கும் பாலாமணி (ரம்யா கிருஷ்ணன்) என்பவருக்கும் மகனாகப் பிறந்தவர் லைகர் (விஜய் தேவரகொண்டா).
தந்தையைப் போலவே எம்எம்ஏவில் தேசிய சாம்பியன் ஆக வேண்டுமென்பது அவரது இலக்கு.
அதற்காக, மும்பைக்கு தன் தாயுடன் வந்திறங்குகிறார் லைகர். அங்கு இருவரும் ஒரு டீக்கடை வைக்கின்றனர்.
மும்பையிலுள்ள ஒரு பிரபல எம்எம்ஏ பயிற்சியாளரிடம் (ரோனித் ராய்) மாணவராகச் சேர வருகிறார் லைகர். பணம் இல்லாத காரணத்தால் அவரிடமே வேலை பார்க்கிறார்.
அந்த பயிற்சியாளரோ, ’பெண்களின் பின்னால் காதல் அது இதுவென்று சுற்றுவதாக இருந்தால் பயிற்சிக்கு வராதே’ என்று தொடக்கத்திலேயே எச்சரிக்கிறார்.
மேற்படி பயிற்சியாளருக்கு எதிராக வேறொரு பயிற்சி நிறுவனத்தை நடத்தி வருகிறார் சஞ்சு (விஷு) என்ற நபர். அவரது தங்கை தான்யா (அனன்யா பாண்டே) லைகரை பார்க்கிறார்.
மோதலில் ஆரம்பிக்கும் அவர்களது உறவு காதலாக மாறுகிறது. இருவரும் நெருங்கிப் பழகுகின்றனர்.
ஒருநாள் லைகருக்கு ‘திக்குவாய்’ எனும் பேச்சுக் குறைபாடு இருப்பதாக அறிந்து, அவரை விட்டு விலகுகிறார் தான்யா.
தான்யாவின் காதலை இழந்ததால் லைகரின் சுபாவமே மாறிப் போகிறது.
அதன்பின், அவர் எம்எம்ஏ பயிற்சியை மேற்கொண்டாரா? தேசிய சாம்பியன் ஆனாரா என்பதைச் சொல்கிறது ‘லைகர்’.
தீவிரம் கொண்டாரா விஜய்?
‘அர்ஜுன் ரெட்டி’ பார்த்துவிட்டு விஜய் தேவரகொண்டாவை கொண்டாடியவர்கள் ‘லைகர்’ பார்த்தால் உடனடியாக மனதை மாற்றிக்கொள்வார்கள். இத்தனைக்கும் இந்த படத்திற்காக உடம்பை இறுக்கிக் கட்டியிருக்கிறார் விஜய். தலைமுடியை சுருளச் சுருள வளர்த்திருக்கிறார்.
இருந்தாலும் என்ன பிரயோஜனம், லைகர் படத்தின் கதை எண்பதுகளில் வெளியான படங்களைக் காட்டிலும் மோசமானதாக இருக்கிறதே?
ஸ்கிரிப்டை கேட்பதிலோ படிப்பதிலோ விஜய் தேவரகொண்டா தீவிரம் கொண்டாரா என்ற கேள்வியே படத்தைப் பார்க்கும்போது எழுகிறது.
ஆக்ஷனுக்கு முக்கியத்துவமுள்ள படம் என்பதால் சண்டைக்காட்சிகளுக்கு மெனக்கெட்டிருப்பார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
அந்த காட்சிகளுக்கென்று சிறிய ‘கதை’ (?!) ஒன்றையும் அமைத்திருக்கின்றனர் ஆக்ஷன் கொரியோகிராபர்கள்.
ஆனால், நடனத்தைச் சிலாகிக்க வைக்கும் அளவுக்கு படத்தில் பாடல்கள் அமையவில்லை.
‘அக்டி பக்டி’ என்ற பாடல் உள்ளது; நாயகி மன உளைச்சலுக்கு உள்ளாகி வோட்கா அருந்தி போதையின் உச்சத்தில் கூத்தடிப்பதாக அமைந்துள்ளது அப்பாடலுக்கான சூழல். இதுவே ஒரு சோறு பதம்.
ஒளிப்பதிவாளர் விஷ்ணு சர்மா, படத்தொகுப்பாளர் ஜுனைத் சித்திகி, பின்னணி இசை அமைத்த சுனில் காஷ்யப் என்று ஒவ்வொருவரும் பார்த்துப் பார்த்து தமது பணிகளைச் செவ்வனே மேற்கொண்டிருக்கின்றனர்.
ரம்யா கிருஷ்ணன், ஷங்கி பாண்டே, ரோனித் ராய், அலி மட்டுமல்லாமல் அனன்யாவும் அவரது சகோதரராக வரும் விஷுவும் கூட நன்றாக நடித்திருக்கின்றனர். விஜய்யின் மெனக்கெடல் பற்றி சந்தேகமே வேண்டாம்.
இதெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் கதை என்கிற ஒன்று வலுவாக இல்லாததால், திரைக்கதை என்பது மழையில் நனையாமல் தப்பிக்க கந்தல் துணியை போர்த்தினாற் போலாகிறது.
நிறைய படங்களில் வெளிவந்த காட்சிகள் இதிலும் வந்திருப்பதை ‘க்ளிஷே’ என்று எடுத்துக்கொண்டாலும், அவற்றை பார்க்கும்போது பெருகுகிற எரிச்சலைத்தான் தவிர்க்க முடியவில்லை.
இவர்கள் போதாதென்று ‘குத்துச்சண்டை’ புகழ் மைக் டைசன் வேறு ஹெண்டர்சன் எனும் முன்னாள் எம்எம்ஏ சாம்பியன் ஆக நடித்திருக்கிறார்.
அவர் வரும் காட்சிகள் சிரிப்பையும் மூட்டவில்லை; ஆக்ஷன் விருந்தாகவும் அமையவில்லை. அவரது காதை விஜய் கடிக்கும்போது, நம்மையும் அறியாமல் காதைத் தொட்டுப் பார்த்துக்கொள்வது அனிச்சையாக நிகழ்கிறது!
தெலுங்கிலும் இந்தியிலும் இக்கதையைப் படமாக்குவதற்கு முன்பாக, ஒருமுறை கூட திரைக்கதையைப் படித்து விவாதிக்கும் வழக்கத்தை நடிப்புக் கலைஞர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் மேற்கொள்ளவில்லையோ என்ற கேள்வி எழுகிறது.
அதைச் செய்திருந்தால் ஒன்று திரைக்கதை நிச்சயம் செம்மை செய்யப்பட்டிருக்கும் அல்லது இப்படம் எடுக்கப்படாமலேயே கைவிடப்பட்டிருக்கும். இரண்டுமே நிகழவில்லை.
தொடர்ச்சியாக சண்டைக்காட்சிகள் பார்க்கும்போது தூக்கம் வருவது உண்மையிலேயே வினோதமான விஷயம். அப்படியொரு அனுபவத்தை தந்திருக்கிறது ‘லைகர்’. படம் எப்படியிருக்கிறது என்பதற்கான ஒரு வரி விமர்சனமும் கூட அதுதான்.
இனிமேல் ‘பான் இந்தியா’ படம் என்று எவராவது சொன்னால், அதன் உள்ளடக்கம் பற்றிய சந்தேகம் நமக்குள் வலுக்கும்.
’இது என்ன பைத்தியக்காரத்தனம்’ என்று தியேட்டரில் இருக்கும்போது புலம்புவதும் நிகழும். அப்படியொரு அபிப்ராயத்தைப் பலப்படுத்திய படங்களில் ஒன்றாகியிருக்கிறது ‘லைகர்’!
-உதய் பாடகலிங்கம்