மாணவியின் உடல்கூறாய்வு ஆய்வறிக்கையை வழங்க முடியாது!

– விழுப்புரம் நீதிமன்றம் மறுப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூா் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து அவரது உடல் 2 முறை உடல்கூறாய்வு செய்யப்பட்டது.

 இதில், முதல் உடல்கூறாய்வு அறிக்கை மட்டும் மாணவியின் பெற்றோரிடம் வழங்கப்பட்ட நிலையில், 2-ஆவது உடல்கூறாய்வு முடிவுகள் பெற்றோரிடம் வழங்கப்படவில்லை.

இதையடுத்து, மூன்றாவது முறையாக உடல்கூறாய்வு செய்ய வேண்டும் என்று மாணவியின் பெற்றோர் வைத்த கோரிக்கையை ஏற்க மறுத்த சென்னை உயா்நீதிமன்றம், அதற்குப் பதிலாக இரண்டு உடல்கூறாய்வு முடிவுகளையும் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவக் குழுவினா் ஆய்வு செய்ய உத்தரவிட்டது.

அதைத் தொடர்ந்து அந்த ஆய்வறிக்கை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இதனிடையே இரண்டாவது உடல்கூறாய்வு அறிக்கையின் நகல்களை வழங்கக் கோரி, விழுப்புரம் நீதிமன்றத்தில் ஸ்ரீமதியின் பெற்றோர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி புஷ்பராணி, ”சென்னை உயா் நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவில் ஜிப்மா் ஆய்வறிக்கையை பெற்றோரிடம் வழங்குவதற்கு உத்தரவிடவில்லை. ஆகவே, ஜிப்மா் ஆய்வறிக்கையை வழங்க இயலாது” என்று தெரிவித்தார்.  

இதனிடையே ஸ்ரீமதி மரணத்துக்கு நீதி கேட்டு அவரது தாய் செல்வி, கடலூாரில் இருந்து நடைபயணமாக சென்னைக்குச் சென்று நாளை தமிழக முதல்வரைச் சந்தித்து மனு அளிப்பதாக இருந்தது.  இது தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

 

You might also like