பரபரப்பூட்டும் திருப்பங்களோ, வழக்கத்திற்கு மாறான கதாபாத்திரங்களோ, கொஞ்சம் வித்தியாசமான கதையோ, உருவாக்கத்தில் பிரமாண்டமோ இல்லாத படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பது குதிரைக் கொம்பைக் கையில் பிடிப்பதற்கு ஒப்பானது.
ஆனால், அதனைச் சாதிக்கும் திரைப்படங்களும் அவ்வப்போது வரத்தான் செய்கின்றன.
மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ், நித்யா மேனன், பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், ராஷி கன்னா, பிரியா பவானி சங்கர், முனீஸ்காந்த் உட்படப் பலர் நடித்திருக்கும் ‘திருச்சிற்றம்பலம்’ கூட அப்படியொரு சாதாரண வாழ்வை முன்வைக்கும் திரைப்படம்தான்.
ரொம்பவே எளிமையான கதை!
உணவு டெலிவரி செய்யும் பணியைச் செய்துவரும் திருச்சிற்றம்பலம் (தனுஷ்) கொஞ்சம் பயந்த சுபாவமுடையவர்.
இளம் வயதில் நடந்த விபத்தொன்றில் தாயும் தங்கையும் மரணமடைந்ததே அதற்குக் காரணம். அதில் அவரும் அவரது தந்தையும் தப்பித்து விடுகின்றனர்.
அந்த விபத்திற்கு தந்தை நீலகண்டனின் (பிரகாஷ்ராஜ்) அலட்சியமே காரணம் என்று நினைக்கிறார் திருச்சிற்றம்பலம்.
இதனால், அவருடன் பேசுவதையே நிறுத்தி விடுகிறார்.
இருவருக்கும் பாலமாக விளங்கி, இவர் சொல்வதை அவருக்கும் அவர் சொல்வதை இவருக்கும் கடத்தும் மீடியமாக இருப்பவர் தாத்தா திருச்சிற்றம்பலம் (பாரதிராஜா). ஆம், தாத்தாவுக்கும் பேரனுக்கும் ஒரே பெயர்.
சிறு வயதில் ‘பலம்’ என்பதைப் பலரும் ‘பழம்’ என்று சொல்வதை அவமானமாக நினைக்கிறார் திருச்சிற்றம்பலம்.
போகப் போக அதுவே பழகிவிடுகிறது. விரக்திதான் தனக்கானது என்றிருக்கும் அவருக்கு ஆறுதல் அளிப்பது ஷோபனாவின் (நித்யா மேனன்) நட்பு மட்டுமே.
திருச்சிற்றம்பலம் என்ன செய்தாலும் அதற்குத் துணை நிற்கிறார் ஷோபனா. வெவ்வேறு காலகட்டங்களில் அனுஷா (ராஷி கன்னா), ரஞ்சனி (பிரியா பவானி சங்கர்) என்று இரு பெண்களை திரு காதலிக்கவும் உதவுகிறார்.
திருவின் காதல்கள் என்னவானது? அப்பெண்கள் திருவைக் காதலித்தார்களா? ஷோபனாவின் இருப்பு திருவின் வாழ்வில் எத்தகைய மாற்றங்களை உண்டுபண்ணியது என்று நீள்கிறது ‘திருச்சிற்றம்பலம்’.
ஒரு டஜன் பாத்திரங்கள் மட்டுமே திரைக்கதையில் அங்கம் வகிப்பது ரொம்பவே எளிமையான ஒரு திரைப்படத்தைப் பார்க்கும் உணர்வைத் தருகிறது.
பார்த்த ஞாபகம் இல்லையோ!
திருச்சிற்றம்பலம் படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, ‘இக்கதையை முன்பே பார்த்திருக்கிறோமா’ என்ற சந்தேகம் தோன்றிவிடுகிறது.
அடுத்தடுத்து வரும் காட்சிகளை முன்கூட்டியே யூகித்து அவையெல்லாம் சரியாகவும் அமையும்போது, நம் கணிப்பின் மீது நமக்கே பிரமிப்பும் ஏற்படுகிறது.
காரணம், இதில் இடம்பெற்றிருக்கும் கதையை ஏற்கனவே சில படங்களில் பார்த்ததுதான். அதையும் மீறி, சுமார் இரண்டு மணி நேரம் ’ஸ்மூத்’தாக கடந்துபோகிறது என்பதுதான் ‘திருச்சிற்றம்பலத்’தின் சிறப்பு.
கதையை முழுதாகச் சொல்லாவிட்டாலும் கூட, இதன் கிளைமேக்ஸ் என்னவென்று சொல்லிவிடலாம்.
’அப்படியா எனக்கு தெரியவில்லையே’ என்பவர்கள் பிரசாந்த், ஷாலினி நடித்த ‘பிரியாத வரம் வேண்டும்’ படத்தை ஒருமுறை பார்க்கலாம். இல்லை என்பவர்கள், ‘பார்த்தேன் ரசித்தேன்’னை நினைவுகளில் இருந்து மீட்டெடுக்கலாம்.
‘வேலையில்லா பட்டதாரி’ போலவே இதிலும் மிகச்சாதாரணமான ஒரு நடுத்தர வர்க்க இளைஞனைக் கண்ணில் நிறுத்துகிறார் தனுஷ்.
அவருக்கென்று பெரிதாக சண்டைக் காட்சிகளும் பஞ்ச் வசனங்களும் இல்லை என்பதால், ஹீரோயிசம் காட்டவும் வழி இல்லை.
அதையெல்லாம் தாண்டி, வெறுமனே தன் முகபாவனைகளாலும் உடல் மொழியாலும் கைத்தட்டல்களை பெறுகிறார்.
கொஞ்சம் உயர் நடுத்தர வர்க்க பின்னணியில் ராஷி கன்னாவும் படித்த கிராமத்துப் பெண் என்கிற தொனியும் பிரியா பவானி சங்கரும் வந்து போயிருக்கின்றனர். அவர்கள் வரும் காட்சிகளில் அழகு வழிந்தோடுகிறது.
தனுஷின் தந்தையாக வரும் பிரகாஷ் ராஜ் அடக்கி வாசிக்க, தாத்தாவாக வரும் பாரதிராஜா எந்நேரமும் மதுவையும் கவலைகளையும் சுமப்பவராகத் தோன்றியிருக்கிறார்.
இவர்கள் இருவரையும் ‘அவன் இவன்..’ என்று தனுஷின் பாத்திரம் விளிப்பது உறுத்தலாகத் தோன்றுகிறது.
பாரதிராஜாவும் தனுஷும் இடம்பெற்ற காட்சிகளில் முக்கால்வாசி ‘மது போதை’ விளம்பரத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கின்றன. இவ்விரண்டையும் தவிர்த்திருக்கலாம்.
தனுஷின் இன்னொரு தாத்தாவாக வரும் ராமசாமியும் அவரது ஜோடியாக நடித்தவரும் வழமையான கிராமத்து பெருசுகளாக நம் கண் முன்னே நிற்கின்றனர். படத்தில் வரும் ஒரே நகைச்சுவை நடிகர் முனீஸ்காந்த் மட்டுமே.
இத்தனை திறமையாளர்களை மீறி, படம் முழுக்க வியாபித்திருப்பது நித்யா மேனன் மட்டுமே.
’இப்ப நீ தனியா இருக்கணும்னு நினைக்கறியா, அப்படின்னா கிளம்பறேன்’ என்று தனுஷின் தோளில் இருந்து தன் கைகளை எடுக்கும் காட்சியில், அவரது கண்களே பாதி நடித்து விடுகின்றன.
கடைசி 15 நிமிடங்கள் நம் கண்களில் நீர் வழிய தனுஷ் கால்வாசி காரணமென்றால் முக்கால்வாசியை குத்தகைக்கு எடுத்துக்கொள்கிறார் நித்யா.
நித்யாவின் தாய், தந்தை, தம்பியாக நடித்தவர்களுக்கு பெரிய ‘ஸ்கோப்’ இல்லை என்றாலும், அவர்களது முகங்கள் நினைவில் நிற்கும்விதமாகவே காட்சிகள் அமைந்திருக்கின்றன.
‘பார்த்த ஞாபகம் இல்லையோ’ ரகமாக ஒட்டுமொத்தப் படமும் அமைந்திருந்தாலும், அதனை மறக்கச் செய்வதில் முக்கியப் பங்காற்றியிருக்கிறது ஓம்பிரகாஷின் ஒளிப்பதிவு.
ரெஸ்டாரெண்ட், கோயில் திருவிழா, கடைவீதி மட்டுமல்லாமல் பொருட்கள் குப்பை போல இறைந்து கிடக்கும் ஒரு சுமாரான வீடு கூட அவரது நுட்பத்தில் அழகாக உருமாறியிருக்கிறது.
ஒளிப்பதிவுக்கு உதவும் வகையில், மிகச்சாதாரணமாக நாம் கடந்துவந்த இடங்களைக் கூட அழகாக்க உதவியிருக்கிறது ஜாக்கியின் கலை வடிவமைப்பு.
மிகநேர்த்தியாக காட்சிகளை அடுக்கி கண் முன்னே ஒரு அற்புதத்தைக் காணும் வித்தையைச் செய்திருக்கிறது ஜிகே பிரசன்னாவின் படத்தொகுப்பு.
இயக்குனராக மித்ரன் ஆர் ஜவஹர், மிகச்சீராக ஒரு கதையைத் திரையில் படரவிட்டிருக்கிறார்.
ஆனால், குடும்ப உறுப்பினர்கள் முன்பே இளைய தலைமுறை தங்களுடைய காதல் பற்றி ‘ஜஸ்ட் லைக் தட்’ விவரிப்பதெல்லாம் கொஞ்சம் முரணாய்த் தோன்றுகிறது.
அப்போது மட்டும் ‘உன்னோட உலகம் வேற, நான் வாழுற உலகம் வேற’ என்கிற தனுஷின் வசனம் நம் மனதுக்குள் எதிரொலிக்கிறது.
அனிருத்துக்கு என்னாச்சு?!
படத்தில் இளையராஜாவின் ரசிகராக தனுஷின் பாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதற்கேற்ப ‘சங்கீத மேகம்’ பாடலின் ப்ரீலூட்’ ஒரு ரிங்டோன் ஆகவும் வைத்திருப்பது நல்ல விஷயம்.
ராஷி கன்னாவிடம் தனுஷ் தன் காதலைத் தெரிவிக்கும் காட்சி. கிட்டத்தட்ட ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் கமல் – ரூபிணி சம்பந்தப்பட்ட காட்சியை நினைவூட்டுவது உண்மை.
அதற்காக, அதிலுள்ள பின்னணி இசைக்கு ‘பட்டி டிங்கரிங்’ செய்து நடமாட விட்டிருப்பது நன்றாகவா இருக்கிறது?
போலவே, பிற்பாதியில் வரும் பாதி காட்சிகளில் பின்னணி இசை ‘ராஜா மய’மாகவே இருப்பது ‘அனிருத்துக்கு என்னாச்சு’ என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது.
அதேநேரத்தில் ‘மேகம் கருக்காதா’, ‘தாய்க்கிழவி’ பாடல்களுக்கு தியேட்டரே உற்சாகக் கூத்தாடுகிறது என்பதையும் இவ்விடத்தில் தெரிவிக்க விரும்புகிறேன்.
தனுஷ் – அனிருத் காம்பினேஷன் என்பதுவே ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் யுஎஸ்பியாக இருந்தபோதிலும், அதையும் மீறி ரொம்பவே சிம்பிளான படம் பார்த்த அனுபவம் கிடைக்கிறது.
அதோடு, படம் பார்த்து வெளியேறும்போது ஒரு நிறைவும் தொற்றிக் கொள்கிறது. சமீபகாலமாகப் பல படங்களில் அந்த உணர்வு கைவரப் பெறவில்லை என்பது குறிப்பிட வேண்டிய விஷயம்.
’ஜகமே தந்திரம்’, ‘மாறன்’ போன்றவை ஓடிடியில் வெளியானதால், ‘கர்ண’னுக்குப் பிறகு நேரடியாக தியேட்டர்களை வந்தடைந்திருக்கிறது ‘திருச்சிற்றம்பலம்’. அந்த இடைவெளியை மறக்கும் வகையில் ஒரு ’பீல்குட்’ படமாகவும் அமைந்திருப்பது நன்று!
– உதய் பாடகலிங்கம்