பொது நல வழக்கு என்ற பெயரில் தவறான தகவல் அளித்தால் அபராதம்!

– உயர்நீதிமன்ற மதுரைக் கிளை எச்சரிக்கை 

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் வின்சென்ட் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில் மானாமதுரையில் அரசு புறம்போக்கு இடத்தை தனி நபர்கள் முறைகேடாக ஆக்கிரமிப்பு செய்து பட்டா பெற்றுள்ளனர் எனவும், இந்த பட்டாக்களை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு வழக்கறிஞர் வாதிடும்போது, “மனுதாரர் இதே கோரிக்கையுடன் ஏற்கெனவே மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவை நீதிமன்றம் மனு தள்ளுபடி செய்தது” என்று குறிப்பிட்டார்.

விவாதங்களைக் கேட்ட நீதிபதிகள், “மனுதாரர் இதே கோரிக்கையுடன் ஏற்கெனவே தாக்கல் செய்த மனு தள்ளுபடியான நிலையில், மீண்டும் மனு தாக்கல் செய்தது எப்படி? ஒரு பொது நல வழக்கில் ஒரு உத்தரவு தான் பிறப்பிக்க முடியும்.

மீண்டும் மீண்டும் மனுத் தாக்கல் செய்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதுடன் பொது நல வழக்கு என்ற பெயரில் நீதிமன்றத்தில் தவறான தகவல் அளிக்கும் மனுதாரர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும்” என்று எச்சரிக்கை விடுத்து அந்த மனுவையும் அவர்கள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

vels
You might also like