தமிழ் சினிமாவில் தனி இடம் பிடித்த ‘வில்லன்கள்’!

சினிமாவுக்கு ஆணிவேர் கதை என்பார்கள். உண்மை தான். வெகுஜன சினிமாக்களின் – ஒற்றைத் தூணாக திகழ்வது கதாநாயகன்.

சில படங்களில் கதாநாயகனுக்கு நிகரான வில்லன்களின் சித்தரிப்பு, படத்திற்கு புதிய வண்ணம் கொடுப்பதோடு, வணிக ரீதியிலான வெற்றிக்கும் வலு சேர்க்கிறது.

சமீபத்திய உதாரணம் – கே.ஜி.எஃப்-2.

அந்தப் படத்தின் உயிர்ப்பான காட்சிகளுக்கு சஞ்சய்தத் ரத்தமாகவும், சுவாசமாகவும் இருந்தார்.

ஷோலே படத்தின் இமாலய சாதனைக்கு அம்ஜத்கான் காரணியாக இருந்ததுபோல், கேஜிஎஃப் வெற்றிக்கு காரணம் சஞ்சய்தத் என்றால் மிகை அல்ல.

இதனால் தற்போது உருவாகும் பிரபல நடிகர்களின் படங்களில், வில்லன் பாத்திரங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க ஆரம்பித்துள்ளனர். விஜய்யின் அடுத்த படத்தில் ஆறு வில்லன்களாம்.

(எம்.ஜி.ஆர்., 50 ஆண்டுகளுக்கு முன்னரே, தனது உலகம் சுற்றும் வாலிபன் படத்தில், அசோகன், நம்பியார், மனோகர், ஜஸ்டின், கோபால கிருஷ்ணன், தேங்காய் சீனிவாசன் என ஆறு வில்லன்களை இடம்பெறச் செய்தார் என்பது தனிக்கதை).

தமிழ் சினிமாவில் கதாநாயகனையும், ரசிகர் கூட்டத்தையும் ஒரு சேர மிரட்டிய நேற்றைய மற்றும் இன்றைய வில்லன்கள் குறித்த ஒரு பார்வை:

எம்.ஆர்.ராதா

உடலால் பேசாமல் வார்த்தைகளிலேயே வில்லத்தனம் செய்த ஒரே தமிழ் நடிகர் – நடிகவேள் எம்.ஆர்.ராதா.

குள்ளநரி தந்திர வியூகங்களும், மாடுலேஷனும் இவரது தனி சிறப்பு.

அந்த கரகர குரலும், உடல்மொழியும்- ராதாவுக்கு நிகர் ராதாவேதான்.

வில்லனுக்கு என ஒரு ரசிகர் கூட்டம் தமிழகத்தில் உருவாகி இருந்தது என்றால் அது எம்.ஆர்.ராதாவுக்கு மட்டுமே என சொன்னால் மிகை அல்ல.

நம்பியார்

அரை நூற்றாண்டு காலம் தமிழ் சினிமாவை கலக்கிய வில்லன் – நம்பியார்.
சமகாலத்தில் எம்.ஜி.ஆருடனும், சிவாஜியுடனும் மோதிய ஒரே வில்லன் நடிகரும் நம்பியார் தான்.

உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் இரண்டே காட்சிகளில் மட்டும் வந்திருப்பார். ஒன்று அசோகனுடன், மற்றொன்று எம்.ஜி.ஆருடன்.

புத்தர் கோவிலில் எம்.ஜி.ஆருடன், மதயானையை நினைவூட்டும் உடல் மொழியுடன் நம்பியார் மோதும் சண்டை காட்சி, அந்தக் காலத்தில் சிறுவர்களுக்கு பீதியையும், பெரியோருக்கு மிரட்சியையும் ஏற்படுத்தியது நிஜம்.

கோரப்பற்கள் காட்டி, கண்களை அகல உருட்டி – தோள் தட்டும் நம்பியார் இப்போதும் திகிலூட்டுகிறார்.

ஆயிரத்தில் ஒருவன், குடியிருந்த கோவில், எங்க வீட்டுப் பிள்ளை, உரிமைக்குரல், நாளை நமதே படங்களில் நம்பியாரைத் தவிர வேறு யாரையும் வில்லன் வேடத்தில் நினைத்து பார்க்க முடியவில்லை.

சிவாஜிக்கு வெள்ளிவிழா படங்களாக அமைந்த அனைத்திலும் நம்பியாருக்கு பங்கு உண்டு.

தெய்வமகன், எங்க ஊர் ராஜா, திரிசூலம் போன்றவை குறிப்பிடத்தக்கவை.
சவாலே சமாளி மற்றும் ராமன் எத்தனை ராமனடி படங்களில் சிவாஜியுடன் நடிப்பிலும் போட்டி போட்டிருப்பார் நம்பியார்.

ரகுவரன்

ரஜினி, சத்யராஜ் போன்றோர் வில்லனாக அறிமுகமாகி, ஹீரோவாக பரிணமித்தவர்கள்.

ரகுவரன், நாயகனாக உதயமாகி, வில்லனாக உருமாறிக் கொண்டவர்.

பி.எஸ்.வீரப்பா போல் கனத்த குரல் கிடையாது. நம்பியார் போல் உடல்வாகு இல்லை. ஆனால், கண்களிலேயே வில்லத்தனத்தை வெளிப்படுத்தியவர் ரகுவரன்.

‘பாட்ஷா’ புதிய உயரங்களை எட்டியதற்கு மார்க் ஆண்டனியாக மிரட்டிய ரகுவரனின் பங்கு முக்கியமானது.

பூவிழி வாசலிலே படத்தில் இயல்பாக நடித்திருந்தார். முதல்வனில் கொஞ்சம் சினிமாத்தனம். எனினும் இரண்டும் ரகுவரனின் மாஸ்டர் பீஸ்கள்.

பிரகாஷ்ராஜ்

டூயட்டில் புயலாக உருவாகி அதே வேகத்துடன் தென்னகம் முழுவதும் சுழன்றடித்துக் கொண்டிருக்கிறார் பிரகாஷ்ராஜ்.

ஆசை, ஐயா, கில்லி படங்களில் தனி ராஜ்யமே நடத்தினார்.

உடல்மொழியும், வசன உச்சரிப்பும் ஒரு சேர அமையப் பெற்ற ஒரு சில வில்லன்களில் பிரகாஷ்ராஜும் ஒருவர்.

விஜய்சேதுபதி

ஒரே நேரத்தில் ஹீரோ, வில்லன் என இரட்டைப் படகுகளில் சவாரி செய்து வெற்றிகளைக் குவிக்கும் நடிகர் விஜய்சேதுபதி.

பேட்ட, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களின் அசுர வெற்றிக்கு சேதுபதியின் வில்லத்தனம் பிரதான காரணம் என்பதை சினிமா உலகம் அறியும்.

ஹீரோ வேடத்துக்கு 10 கோடி வாங்கும் விஜய்சேதுபதியை 30 கோடி கொடுத்து வில்லன் வேடத்துக்கு ஒப்பந்தம் செய்கிறார்கள் என்பது இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத அதிசயம்.

-பி.எம்.எம்

You might also like