தள்ளு மாலா – நிச்சயமாக ஒரு ட்ரெண்ட் செட்டர்!

ஒரு சாதாரணமான கதையைக் கொண்ட திரைப்படம் வெற்றி பெறுவதில் எவ்வளவு அபாயங்கள் இருக்கிறதோ, அதே அளவுக்கு அதனை ஈட்டுவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன என்பதற்கு மறு கருத்தில்லை.

அதேநேரத்தில், அத்திரைப்படம் ரொம்பவும் சாதாரணமானது என்ற எண்ணம் பார்வையாளர்களுக்குத் தோன்றிவிடாமல் பார்த்துக்கொள்வதும் மிக முக்கியம்.

இரு வேறு திசைகளில் உயர்ந்து நிற்கும் இச்சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெறும்போது, சில நேரங்களில் அப்படைப்பு ட்ரெண்ட்செட்டர் ஆகவும் கொண்டாடப்படக் கூடும்.

டொவினோ தாமஸ், கல்யாணி, லுக்மன் ஆவ்ரன், ஷைன் டாம் சாக்கோ நடிப்பில், விஷ்ணு விஜய் இசையில், காலித் ரஹ்மான் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் ’தள்ளு மாலா’ அப்படியொரு ‘ட்ரெண்ட்செட்டர்’ தகுதியை எட்டியிருக்கிறது.

‘தள்ளு மாலா’ என்றால் ‘சண்டைகளின் மாலை’ என்று பொருள். அதாவது, மோதல்களின் தொகுப்பு என்று கொள்ளலாம்.

காதலும் மோதலும்!

‘வத்திக்குச்சி பத்திக்காதுடா யாரும் வந்து உரசுற வரையில’ என்ற ரீதியில் எவருடனும் சண்டையிடத் தயாராக இருக்கும் குணாம்சம் கொண்டவர் வஸீம் (டொவினோ தாமஸ்). அவரும் எஸ்ஐ ரெஜியும் (ஷைன் டாம் சாக்கோ) சண்டையிடுவதில் படம் தொடங்குகிறது.

இதற்கு முன்னர், இருவரும் சண்டையிட்ட ஒரு பொழுதில் வஸீம் திருமணம் நின்றுபோனது இன்னொரு கிளைக்கதை.

வஸீமுக்கும் ரெஜிக்கும் இடையே என்னதான் பிரச்சனை என்று அறியும் முன்னர், வஸீமின் நண்பர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை நீங்கள் அறிய வேண்டும்.

அவர்களும் கூட ‘சட்டென்று தீப்பற்றும்’ அளவுக்கு ஆத்திரத்தை மூட்டை கட்டிச் சுமந்து கொண்டிருப்பவர்கள்தான். அதுவும் தனிக்கதை தான்.

ஜம்ஷி (லுக்மன் ஆவரன்), சத்தார் (ஸ்வாதி தாஸ்), ராஜேஷ் (ஆஸ்டின் டேன்), விகாஸ் (அத்ரி ஜோ) என்று நண்பர்கள் ஒவ்வொருடனும் மோதலுக்குப் பின்னர் நட்பானவர் வஸீம். இவ்வளவு ஏன், தனது காதலியான பீ பாத்து என்ற பாத்திமாவை (கல்யாணி) முதன்முதலாக ஒரு மோதலின் வழியேதான் அவர் சந்திக்கிறார்.

தொட்டதற்கெல்லாம் சண்டை என்றிருக்கும் வஸீம், ஒருகட்டத்தில் தனது ஆத்திரத்தால் தந்தை நடத்திவரும் தியேட்டர் தீக்கிரையாக காரணமாகிறார்.

இதையடுத்து, பணி நிமித்தம் துபாய் செல்கிறார். இரண்டாண்டுகள் கழித்து மீண்டும் கேரளா திரும்புபவர், திரும்பவும் பாத்திமா உடன் நட்பு கொள்கிறார். அது காதலாக கனிகிறது.

இருவரது குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட, திருமண நாளுக்கு முன்னதாக ரெஜியும் அவரது நண்பர்களும் வஸீம் வீட்டுக்கு வருகின்றனர். இது வஸீம் நண்பர்களிடம் கோபத்தை விதைக்கிறது. காரணம், சில ஆண்டுகளுக்கு முன்னதாக ரெஜி குரூப்பிடம் வஸீம் குரூப் அடி வாங்கினர் என்ற முன்கதை.

அப்புறமென்ன, திருமண நிகழ்வையும் மீறி வஸீம் குரூப்பும் ரெஜி குரூப்பும் ஏன் மோதிக் கொண்டார்கள்? அதன் பின்விளைவுகள் என்ன? பாத்திமாவும் வஸீமும் இணைந்தார்களா என்று சொல்கிறது ‘தள்ளு மாலா’.

ரொம்பவும் எளிமையான கதையாக இருந்தாலும், காட்சிகளை ‘நான் லீனியர்’ முறையில் வெவ்வேறு அத்தியாயங்களில் அடக்கி கவனம் ஈர்க்கிறது திரைக்கதை.

வழியும் புதுமை!

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் கதாபாத்திரங்களின் வாழ்வோடு கலந்திருக்கும் தன்மை, நாயகன் நாயகியின் தோற்ற மாற்றங்கள், இரு வேறு இடங்களை இணைக்கும் பிளாஷ்பேக் உத்தி போன்றவற்றை வெளிக்காட்ட விஎஃப்எக்ஸ் துணை நாடியிருக்கிறார் இயக்குனர் காலித் ரஹ்மான்.

கூடவே ஒரு காட்சியில் இருந்து இன்னொரு காட்சிக்கு தாவ எடிட்டிங்கில் பயன்படுத்தப்படும் ‘டிரான்சிஸன்’னுக்காகவும், வெவ்வேறு உணர்வுகளைக் கொண்ட காட்சிகளை இணைக்க பிந்தைய காட்சியிலுள்ள பாத்திரங்களை முன்னதில் சேர்த்துக் காட்டுவதற்காகவும் கூட பயன்படுத்தியிருக்கிறார்.

இது போதாதென்று வழக்கத்திற்கு மாறான கோணங்களில் பாய்ந்து பறக்கிறது ஜிம்ஷி காலித்தின் ஒளிப்பதிவு.

சொகுசு காருக்குள் ரெஜி, வஸீம் கும்பலிடையே நடக்கும் சண்டையும், தியேட்டர் ஒன்றில் நடக்கும் மோதலும் 360 டிகிரியில் படம்பிடிக்கப்பட்டிருப்பது ‘வாவ்’ சொல்ல வைக்கும் விஷயங்கள்.

விஎஃப்எக்ஸ் நுட்பங்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டுமென்பதையும் மனதில் கொண்டே படத்தொகுப்பைக் கையாண்டிருக்கிறார் நிஷாத் யூசுஃப்.

வழக்கமாக மலையாளப் படங்களில் அதிர்வை உருவாக்கும் நடனங்களோ, சண்டைக்காட்சிகளோ இருக்காது. தள்ளு மாலா விதிவிலக்கு. ‘கண்ணில் பெட்டோலே’ பாடலும் ‘ண்டாக்கு’வும் பார்க்கும்போது நம்மையும் அறியாமல் துள்ளல் தொற்றுகிறது.

சுப்ரீம் சுந்தரின் வடிவமைப்பில் அமைந்த அந்த தியேட்டர் மோதல் நிச்சயம் அவருக்கு தேசிய விருதைப் பெற்றுத் தரும்.

விஷ்ணு விஜய்யின் பின்னணி இசை சில இடங்களில் நகைச்சுவையும் சிலவற்றில் ஆக்‌ஷனும் ரொமான்ஸும் மேலிட உதவியிருக்கிறது.

’ண்டாக்கு’ பாடல் ‘புதுப்பேட்டை’யில் வரும் ‘வர்றியா’வை நினைவூட்டுகிறது என்றால், ‘தள்ளு மாலா’ அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தில் இடம்பெற்ற ‘அழகான பொண்ணுதான்’ பாடலுக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. ’கண்ணில் பெட்டோலே’, ‘ஓலே மெலடி’ இரண்டும் தாள லயம் மிகுந்த மெலடிகள் என்றாலும் துள்ளலை ஏற்படுத்துகின்றன.

இவையனைத்தையும் மீறி தயாரிப்பு வடிவமைப்பும் காஸ்ட்யூம் டிசைனும் கூட, படத்தின் ‘ப்ரெஷ் லுக்’குக்கு பெருமளவில் உதவியிருக்கின்றன.

இவற்றை முன்கூட்டியே எழுத்தில் தீர்மானித்த வகையில் திரைக்கதையாசிரியர்கள் இதன் பெரும்பலமாக அமைந்திருக்கின்றனர்.

தான் எழுதிய கதைக்கு அஷ்ரப் ஹம்சா உடன் இணைந்து திரைக்கதை அமைத்திருக்கிறார் மூஷின் பராரி.

மூஷின் எழுதி இயக்குவதாக இருந்த இப்படம் ஏன் காலித் ரஹ்மான் கைகளுக்குச் சென்றது எனத் தெரியவில்லை. ஆனால், தன் சகோதரர் ஜிம்ஷியை துணையாக கொண்டு அற்புதமான காட்சி விருந்தை காலித் படைத்திருக்கிறார் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.

மொத்தத்தில், படம் முழுக்க புதுமைகள் வழிகின்றன என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

அற்புதமான கூட்டுழைப்பு!

டொவினோ தாமஸ் சிறந்த நடிகர் என்பதைக் கடந்த ஐந்தாண்டுகளாகவே நிரூபித்து வருகிறார். ‘மாயநதி’, ‘எண்ட உம்மாவிண்ட பேரு’, ‘தரங்கம்’, ‘தீவண்டி’, ’உயரே’, ‘மின்னல் முரளி’ உட்பட அவரது படங்களில் பெரும்பாலானவை அவற்றின் வித்தியாசமான உள்ளடக்கத்திற்காகவே கவனத்தை ஈர்த்திருக்கின்றன.

தெலுங்கு படமான ‘சித்ரலஹரி’, ‘மாநாடு’, இந்த ஆண்டில் வெளியான ‘ஹ்ருதயம்’, ’ப்ரோ டாடி’ மூலமாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிற கல்யாணி, ரொம்பவும் கூலாக ‘பாத்திமா’ பாத்திரத்தில் புகுந்திருக்கிறார்.

டொவினோவின் நண்பர்களாக வருகிறவர்கள், அவரது பெற்றோர் தாண்டி நம் கவனத்தை ஈர்க்கும் இரு நடிகர்கள் லுக்மன் ஆவரன் மற்றும் ஷைன் டாம் சாக்கோ. நாயக அந்தஸ்து பெற்ற பிறகும் கூட, இவ்விருவரும் கதாபாத்திரங்களாக நடிப்பதைத் தொடர்ந்து வருவது அருமை.

திருமண வீட்டில் டென்ஷனுடன் திரியும் காட்சிகளில் லுக்மனும், அடி வாங்கிய வீடியோ வைரல் ஆன கடுப்பில் இருப்பதை வெளிப்படுத்துவதில் டாம் சாக்கோவும் பின்னியிருக்கின்றனர்.

சாக்கோவின் குரூப்பில் பினு பாப்புவும் கோகுலனும் ‘அடிபொலி’ பெர்பார்மன்ஸை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

பாத்திர வார்ப்புகளில் இக்கலைஞர்கள் பொருந்திக்கொண்ட விதமும் தொழில்நுட்ப அம்சங்களும் ஒருங்கிணைய, அற்புதமான கூட்டுழைப்பு இருந்தாக வேண்டும். அதனாலேயே ‘தள்ளு மாலா’ ட்ரெண்ட் செட்டர் ஆகியிருக்கிறது.

அதோடு, தான் இயக்கிய ஒவ்வொரு படத்தையும் வெவ்வேறு ட்ரீட்மெண்டில் தந்து குறிப்பிடத்தக்க இயக்குனர் என்ற நாற்காலியில் அமர்கிறார் காலித் ரஹ்மான்.

எவ்வித நியதிகளுக்கும் கட்டுப்படாத புதிய உலகத்தில் இன்றைய தலைமுறை வாழ்வதாகக் காட்டுவது தார்மீகரீதியில் சரியல்ல என்றாலும், பகையையும் நட்பாக மாற்றலாம் என்பதுவே இன்றைய இயல்பு என்ற வகையில் கவனம் ஈர்த்திருக்கிறது ‘தள்ளு மாலா’.

போக்கிரித்தனத்தையும் மூர்க்கத்தையும் வளர்த்துவிடுவது நல்லதா என்ற கேள்வி, படம் பார்த்து முடிந்ததும் நமக்குள் எழுகிறது. அப்படியெல்லாம் நிகழாது என்று நமக்கு நாமே சமாதானம் சொல்லிக்கொண்டால், சமீபகாலத்தில் ‘தள்ளு மாலா’ போல ஒரு ட்ரெண்ட்செட்டர் வரவில்லை என்பதையும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வோம்!

-உதய் பாடகலிங்கம்

You might also like