கனவுத் தொழிற்சாலையான கோடம்பாக்கத்தில் நுழைவோரின் பிரதான நோக்கம் பணத்துடன் இணைந்து வரும் புகழ்.
‘’கலைச்சேவை செய்யவே சினிமாவுக்கு வந்துள்ளேன்’’ என சிலர் கதைப்பது எல்லாம் தனக்கான பிம்பத்தை உருவாக்குவதற்கான செப்படி வித்தை என்பது உலகம் அறிந்த விஷயம்.
எனினும் அரிதினும் அரிதாக சில சினிமா பிரபலங்கள் விளம்பர வெளிச்சத்தில் இருந்து தங்களை ஒதுக்கியே வைத்துள்ளனர் என்பது வியப்பான உண்மை.
அவர்களில் சிலரை பற்றி காணலாம்.
ஆபாவாணன்
திரைப்பட கல்லூரி மாணவர்களால் கலைப்படம் மட்டுமே கொடுக்க முடியும் என்ற இலக்கணத்தை உடைத்தவர் ஆபாவாணன்.
இவரது தயாரிப்பில் உருவான ஊமைவிழிகள் நல்ல விமர்சனத்தை பெற்றதோடு வசூலிலும் சாதனை படைத்தது.
பாடலாசிரியர், இணை இசை அமைப்பாளர், கதை வசனகர்த்தா போன்ற துறைகளிலும் முத்திரை பதித்தவர்.
தனது போட்டோ பத்திரிகைகளில் வெளியாவதை விரும்பாதவர்.
பல ஆண்டுகள் தனது கொள்கையில் உறுதியாக இருந்தார்.
துரதிருஷ்டவசமாக வழக்கு ஒன்றில் தண்டனை பெற்றபோது, ஆபாவாணன் போட்டோவை பத்திரிகைகள் வெளியிட நேர்ந்தது.
’ஆஸ்கர்’ ரவிச்சந்திரன்
விநியோகஸ்தராக சினிமா பயணத்தை ஆரம்பித்தவர் ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன்.
ஜாக்கிசான் படங்களை தமிழ்நாட்டில் வெளியிடும் உரிமையை தொடர்ந்து பெற்று வந்தவர். ஜாக்கிசனின் நண்பரும் கூட.
இவர் தயாரித்த முதல் படம் வானத்தப்போல. பின்னர் அந்நியன் உள்ளிட்ட பல்வேறு வெற்றிப் படங்களை தயாரித்தார்.
தனது புகைப்படம் பத்திரிகைகளில் வெளியாவதை சுத்தமாக விரும்பாதவர்.
தமிழில் குறிப்பிடத்தக்க தயாரிப்பாளராக இருந்தபோதும் இன்று வரை, தன் முகத்தை ஊடகத்தில் காட்டியதில்லை.
இவரது வானத்தப்போல் படத்துக்கு தேசிய விருது கிடைத்தது. குடியரசு தலைவர் விருது வழங்கினார்.
விருது வாங்கினால் தனது போட்டோ பத்திரிகையில் வந்து விடுமே என நினைத்தவர், தனது தம்பி சுரேஷை அனுப்பி விருதை பெற வைத்தார்.
மணிரத்னம்
கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக சினிமாவில் நீடித்திருக்கும் ஒரே டைரக்டர் மணிரத்னம்.
இந்திக்குப்போன பாலசந்தர், பாரதிராஜா, பாக்யராஜ் போன்ற ஜாம்பவான்கள் போன வேகத்திலேயே, சுவற்றில் அடித்த பந்து மாதிரி கோடம்பாக்கம் திரும்பி விட்டனர்.
ஆனால் ’ரோஜா’ படம் மூலம் வட இந்தியாவில் வாசம் பரப்பிய மணரத்னம், அங்கே ஸ்திரமாக கால் பதித்திருப்பது, தமிழர்கள் கொண்டாடப்பட வேண்டிய விஷயம்.
தனது படங்கள் பேசப்பட வேண்டும் – தான் தனிப்பட்ட முறையில் பேசப்பட வேண்டாம் என நினைப்பவர் மணிரத்னம்.
எந்த ஒரு இதழிலும் அவர் தனிப்பட்ட பேட்டி வந்துள்ளதாக தகவல் இல்லை.
அஜீத்குமார்
அமராவதி படத்தில் அஜீத்குமார் அறிமுகமான போது, தமிழ் சினிமா ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக் உள்ளிட்டோர் கைகளில் இருந்தது.
கடைசி மூன்று பேர் ஹீரோ ஸ்தானத்தில் இருந்து இறங்கி குணசித்திர வேடங்களுக்கு தாவிய பின்னர், விஜய்யும், அஜித்தும் சேர்ந்தே வளர்ந்தனர்.
ஒரு ஹிட் படம் கொடுத்தால் நான்கைந்து தோல்வி படங்கள் கொடுத்த அஜீத்துக்கு கடந்த ஏழெட்டு ஆண்டுகளாக மார்க்கெட் ஸ்டெடியாக உள்ளது. எந்தப் படமும் சோடை போனதில்லை.
வசூலில் ரஜினிக்கு, அஜித் படங்கள் சவால் விட்ட நிலையில் பேட்டி அளிப்பதை அறவே நிறுத்தி விட்டார்.
பேட்டியை விடுங்கள், உச்ச இடத்துக்கு சென்றபின் பொது வெளியில் தோன்றுவதை கூட முழுவதுமாக நிறுத்தி விட்டார் அல்டிமேட் ஸ்டார்.
தனது மன்றங்களையும் கலைத்து விட்டார்.
மணிரத்னம் போல் அஜித்தும் தனது படங்கள் மட்டுமே பேசப்படட்டும் – தான் பேசப்பட வேண்டியதில்லை என்ற முடிவை எடுத்துள்ளார்.
’அல்டிமேட் ஸ்டார்’ என தன்னை அழைக்க வேண்டாம் என அறிவித்து, ஸ்டுடியோவும் வீடும் மட்டுமே உலகம் என சுருக்கி கொண்டார் வலிமை நாயகன்.
நாளை எப்படியோ?
– பி.எம்.எம்.