விருமன் – தந்தைக்குப் பாடம் சொல்லும் மகன்!

உறவுகளுக்குள் நிகழும் பாசப் போராட்டங்களை முன்வைத்து எத்தனையோ திரைப்படங்கள் தமிழில் வெளியாகியிருக்கின்றன.

அதனுள் கொஞ்சமாய் வில்லத்தனத்தையும் ஹீரோயிசத்தையும் கலந்தால் எப்படியிருக்கும்? இந்த யோசனையின் அடிப்படையில், ‘விருமன்’ படத்தைத் தந்திருக்கிறார் இயக்குனர் முத்தையா.

‘குட்டிப்புலி’ முதல் இறுதியாக முத்தையாவின் இயக்கத்தில் வெளியான ’புலிக்குத்தி பாண்டி’ வரை எல்லா படங்களும் மதுரையைக் களமாக, குறிப்பிட்ட சாதியினரை கதாபாத்திரங்களாகக் கொண்டிருந்தன. விருமனும் அதற்கு விதிவிலக்கல்ல!

தந்தையை எதிர்க்கும் மகன்!

தேனி மாவட்டத்தில் தாசில்தாராக இருக்கும் முனியாண்டிக்கு (பிரகாஷ்ராஜ்) நான்கு மகன்கள். முதல் மூவர் தந்தையுடன் இருக்க, நான்காவதாகப் பிறந்த விருமன் (கார்த்தி) மட்டும் தாய்மாமன் (ராஜ்கிரண்) அரவணைப்பில் வளர்கிறார்.

தாய் (சரண்யா) சாவுக்கு தந்தையே காரணம் என்ற எண்ணத்திலேயே வளரும் விருமன், எப்படியாவது அவருக்கு உறவுகளின் அருமையைப் புரியவைக்க விரும்புகிறார். அதற்காகவே தந்தையின் செயல்பாடுகளை வன்மையாக எதிர்க்கிறார்.

தாயை விட தந்தையே பெரிது என்று தற்போதுவரை வாழ்ந்துவரும் சகோதரர்களைத் தனியே பிரித்தால் மட்டுமே அது நிகழும் என்று எண்ணுகிறார்.

ஆனால், தான் நினைத்ததே நடந்தேற வேண்டுமென்று விரும்பும் முனியாண்டி தன் மகன் விருமனை ஆள் வைத்து தாக்கும் அளவுக்கு மூர்க்கத்துடன் திரிகிறார்.

வெற்றி பெறுவது விருமனின் பிடிவாதமா, முனியாண்டியின் மூர்க்கமா என்று சொல்கிறது மீதமுள்ள திரைக்கதை.

தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான மோதலாக கதையின் மையம் இருந்தாலும் இதர உறவுகள், ஊர்க்காரர்கள், பஞ்சாயத்து, அதிகாரம், பணம், சொத்து என்று பல விஷயங்கள் திரைக்கதையில் முன்னிறுத்தப்படுகின்றன. அதனூடே பாசமும் உண்டு என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை.

பார்முலாவுக்குள் கலைஞர்கள்!

கதாபாத்திரங்களுக்கான முன்கதையைச் சொன்னபிறகு, இந்தந்த இடத்தில் நகைச்சுவை வரும், சண்டை வரும், பாடல் இடம்பெறும், காதலும் இன்னபிற உணர்வுகளும் கொப்பளிக்கும், எப்போது கிளைமேக்ஸ் வரும் என்பதையெல்லாம் எளிதாகச் சொல்லிவிடலாம்.

இந்த பார்முலாவை 100% பின்பற்றி அமைந்திருக்கிறது ‘விருமன்’.

நாயகனாக நடித்துள்ள கார்த்தி, இதில் கொஞ்சம் ‘பருத்தி வீரன்’, கொஞ்சம் ‘கொம்பன்’ என்று கலந்துகட்டி அடித்திருக்கிறார். சண்டைக்காட்சிகளிலும் நடனத்திலும் லேசாக சூர்யாவைப் பிரதிபலிக்கிறார். அதுதான் ஏனென்று தெரியவில்லை.

நாயகி அதிதி ஷங்கருக்கு இது முதல் படம். சில காட்சிகளில் அவரது நடிப்பு அதைக் காட்டிக் கொடுக்கிறது. ஆனால், அவரது நடனத்தில் நிரம்பியிருக்கும் துள்ளல் அதை மறக்கடிக்கிறது.

முனியாண்டியாக வரும் பிரகாஷ்ராஜ் தான் இத்திரைக்கதையின் தூண். அதனை உணர்ந்து ‘வழக்கம்போல’ நடித்திருக்கிறார்.

மலையாளத்தில் பத்ரன் இயக்கிய ‘ஸ்படிகம்’ தமிழில் ‘வீராப்பு’ ஆனபோது, திலகன் நடித்த தந்தை பாத்திரத்தை பிரகாஷ்ராஜ் ஏற்றிருந்தார்.

மோகன்லாலின் பாத்திரத்தில் சுந்தர்.சி. நடித்திருந்தார். அப்பாத்திரத்திற்கும் இதில் வரும் முனியாண்டிக்கும் பெரிய வித்தியாசமில்லை.

ராஜ்கிரண், கருணாஸ், சரண்யா, சுந்தர், ஓ.ஏ.கே.சுந்தர், இளவரசு, வசுமித்ர, மனோஜ், ராஜ்குமார், அருந்ததி, மைனா நந்தினி, இந்திரஜா, வடிவுக்கரசி உட்படப் பெரும் பட்டாளமே இப்படத்தில் இருக்கிறது.

அனைவருக்கும் திரையில் முகம் காட்ட வாய்ப்பும் கிடைத்திருக்கிறது.

சிங்கம்புலிக்கு வசனங்கள் நகைச்சுவையாக ஏற்கனவே எழுதப்பட்டிருக்க, தனக்கான இடத்தை டப்பிங்கில் நிரப்பிச் சரி செய்திருக்கிறார் சூரி.

பிரகாஷ்ராஜ் பிரதான வில்லன் என்றபோதும், தனக்கான முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் வந்து சென்றிருக்கிறார் ஆர்.கே.சுரேஷ்.

ஹீரோயிசத்தை உணர்த்தும் காட்சிகளில் தியேட்டரை தெறிக்கவிடுகிறது செல்வகுமாரின் ஒளிப்பதிவு. கண்களுக்கு குளுமை தரும் விதமாக, அடர் வண்ணங்களை திரையில் நிரப்பியிருக்கிறது.

கறுப்பு வெள்ளையில் காட்டி, ஆங்காங்கே வரும் பிளாஷ்பேக் காட்சிகள் நடப்புக் கதையோடு கலந்து குழப்பிவிடாமல் ஜாக்கிரதையாக கையாண்டிருக்கிறார் படத்தொகுப்பாளர் வெங்கட் ராஜன்.

‘காஞ்ச பூ கண்ணால’, ‘மதுர வீரன்’ பாடல்கள் ஆட்டம் போட வைத்தாலும், காட்சிகளை அடிக்கோடிட்டு மனதில் இருத்தும்விதமாக பின்னணி இசை தந்து தனக்கான முக்கியத்துவத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் யுவன்.

எங்கும் ’மீசை’மயம்!

முதல் மூன்று படங்களான குட்டிப்புலி, கொம்பன், மருதுவில் சில பாத்திரங்களை மட்டும் குறிப்பிட்ட சாதியினராக வகைப்படுத்தியிருந்தார் இயக்குனர் முத்தையா.

ஆனால், அடுத்துவந்த கொடிவீரன், தேவராட்டம், புலிக்குத்தி பாண்டியில் அவை மட்டுமே நிரம்பியிருந்தன.

அந்த வரிசையில் ‘விருமனி’ல் பெரும்பாலான பாத்திரங்கள் முறுக்கு மீசையுடன் திரிந்து அந்த எண்ணத்தை வலுப்படுத்துகின்றன.

பிரதான பாத்திரங்களாக நடித்த கார்த்தி, பிரகாஷ்ராஜ், மனோஜ் உள்ளிட்டவர்கள் இந்த மீசை’மயத்தில்’ இருந்து நழுவியிருக்கின்றனர்.

கார்த்தியை முறுக்குமீசையுடன் காட்டினால் ‘கொம்பன்’ பாத்திரம் நினைவுக்கு வரும் என்று இயக்குனர் தவிர்த்திருக்கலாம்.

போலவே, ‘வானம் கிடுகிடுங்க’ பாடலும் கூட ‘தேவர் மகனி’ல் வந்த ‘போற்றிப் பாடடி பெண்ணே’ ரகத்தில் அமைந்திருப்பது முன்பே திட்டமிடப்பட்டதா என்று தெரியவில்லை.

வெறுமனே நாயக பாத்திரத்தின் பெருமையைச் சொல்லும் பாடல் என்று விளக்கமளிப்பது கண்டிப்பாக இதற்கான பதிலாக இராது.

‘விருமன்’ ஆடியோ வெளியீட்டையொட்டி ‘குறிப்பிட்ட சமூகத்தை மட்டுமே உங்கள் படங்களில் முன்னிறுத்துகிறீர்களே’ என்று கேட்கப்பட்ட கேள்விக்கு,

‘வேறு சமூகத்தினரை மோசமானவர்களாக காட்டினால் பிரச்சனை வரும் என்று ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை மட்டுமே திரையில் காட்டுகிறேன். எனக்கு தெரிந்த நான் அறிந்த வாழ்க்கையை வெளிப்படுத்த விரும்புகிறேன்.

இதனால், தொடர்ச்சியாக அந்த சமூகத்தினரை மட்டும் மோசமானவர்களாக காட்டுகிறேன் என்ற கெட்டபெயரும் என் மீது உள்ளது’ என்று பதிலளித்திருந்தார் முத்தையா.

இனிவரும் படங்களிலும் இந்த கேள்வியும் பதிலும் தொடரும் வகையிலேயே ‘விருமனை’யும் தந்திருக்கிறார்.

ஒருகாலத்தில் பேரரசு ஊர்ப்பெயர்களை டைட்டிலில் வைத்து, விதவிதமாக பாசத்தைச் சொல்லும் படங்களை வார்த்தது போல, மதுரை வட்டாரம் என்றாலே ’பாசம் காட்டுறதுல ரொம்ப மோசமானவய்ங்க’ என்கிற தொனியில் தன் பங்குக்கு படங்களை அடுக்கி வருகிறார் முத்தையா.

அதேநேரத்தில், அரதப்பழசான பாத்திர வார்ப்பையும் திரைக்கதை நகர்வையும் மிகப்புதியதாக உணரும் அளவுக்கு ‘காட்சியாக்கத்தில்’ மாயஜாலம் நிகழ்த்தும் வித்தையும் அவருக்கு வாய்த்திருப்பதை மறுக்க முடியாது.

பழையதை புதிதாக ஆக்கத் தெரிந்த ஒருவர், மிகப்புதிதாகவே ஒன்றை முயற்சித்தால் நன்றாகயிருக்குமே என்பது நம் எண்ணம்.

தன் மீது விழுந்திருக்கிற முத்திரையில் இருந்து மட்டுமல்ல, தனக்குத்தானே போட்டுக்கொண்ட வட்டத்திலிருந்து வெளியேறவும் அதுவே முத்தையாவுக்கு உதவக்கூடும். என்ன செய்யப் போகிறாரோ?!

-உதய் பாடகலிங்கம்

You might also like