ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரரின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் உட்பட மூன்று இந்திய இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த துயரமும், வேதனையும் அடைந்தேன்.
தாய்நாட்டைக் காக்கும் அரிய பணியில் தன் இன்னுயிரைத் தியாகம் செய்து, வீரமரணம் எய்திய ராணுவ வீரர்களுக்கு என் அஞ்சலியையும், வீரவணக்கத்தையும் சமர்ப்பிக்கின்றேன்.
அதோடு, வீரமரணமெய்திய தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் திரு.இலட்சுமணன் அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களுக்கு ரூபாய் இருபது லட்சம் நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.