தமிழகத்தில் இந்த ஆண்டு முதல் ஒரு வருடத்திற்கு 6 முறை கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
அதன்படி, ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினத்தன்றும், மே 1-ம் தேதி தொழிலாளர் தினத்தன்றும், ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்றும், அக்டோபர் 2-ம் தேதி மகாத்மா காந்தி பிறந்த நாளன்றும்
அதேபோல், மார்ச் 22-ம் தேதியான உலக தண்ணீர் தினம் மற்றும் நவம்பர் 1-ம் தேதி உள்ளாட்சிகள் தினத்தன்றும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார்.
அதன்படி, நாட்டின் 75-வது சுதந்திர தின விழா வரும் 15-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அன்றைய தினம் கிராம சபைக் கூட்டம் நடத்துவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககத்தின் ஆணையர் தாரேஸ் அஹமது அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், “அனைத்து ஊராட்சிகளிலும், அனைத்து கிராம மக்களும் ஆர்வத்துடன் எதிர்வரும் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள ஏதுவாக, கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ள இடம், நேரம் ஆகியவற்றை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இது தொடர்பான அறிக்கையை வரும் 22-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் கிராம சபைக் கூட்டத்திற்கான செலவின வரம்பு ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளதையும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.