மெட்ராஸ் என்கிற சென்னை – தமிழ்நாட்டின் தலைநகரம் மட்டுல்ல, தமிழர்களின் நினைவுகளில் என்றும் இருக்கும் மாநகரம்.
கோடிக்கணக்கில் மக்கள் நெருக்கியடித்துப் பரபரப்பாக இன்றைக்கு இருக்கும் மெட்ராஸ் எண்பதுகளில் எப்படி இருந்தது?
கொஞ்சம் நினைவுகளில் பின்னோக்கி 1980-க்குள் நுழைவோம்.
அன்றைய மெட்ராஸ் பெருமளவுக்கு ஜன அடர்த்தியில்லை. வாகனங்கள் பெருமளவுக்கு அதிகரிக்கவில்லை. இரண்டு மாடி பேருந்துகள் ஓடிக்கொண்டிருந்தன.
தொலைக்காட்சிகள் மக்களை அதிகம் சென்றடையவில்லை. தொலைத்தொடர்புகள் விரிவடையவில்லை.
திரைப்படத்துக்கு விடை கொடுத்த எம்.ஜி.ஆர் பெரும் மக்கள் ஆதரவுடன் தமிழக முதல்வராக இருந்தார். பெல்பாட்டமும், நீண்ட காலரும் ஆண்களுக்கும், விதவிதமான ஜாக்கெட்களும், உயரமான கூந்தல் அலங்காரமும் பெண்களுக்கு அடையாளங்களாக இருந்ததை அப்போதைய படங்களில் பார்க்க முடியும்.
இளம் பெண்கள் சுடிதாருக்கு மாறுவதற்கு முன்னால் தாவணியுடன் காட்சியளித்தார்கள்.
சென்னை பரபரப்பான மாநகரமாக மாறவில்லை.
ஒரு படத்தில் டி.எம்.எஸ் பாடியதைப் போல ‘மெட்ராஸ் நல்ல மெட்ராஸா’கவே இருந்தது.
வானொலியைக் கேட்பவர்களும், நாடகங்களைப் பார்ப்பவர்களும் அன்று அதிகம் இருந்தார்கள்.
சினிமாவை ஆராதிக்கிறவர்களும் அதிகம் இருந்தார்கள். திரையங்குகள் தற்காலிகமான சொர்க்கத்தைப் போல இருந்தன.
தமிழில் முதல் பேசும் படமான ‘கீசகவதம்’ வெளியான ஆண்டு 1917. அந்த மௌனப் படத்தைத் திரையிட்ட அரங்கு இன்றும் சென்னையில் இருக்கிறது.
பேசும் படத்தைத் திரையிட்ட அரங்கு சென்னை அண்ணாசாலையில் இப்போதும் இருக்கிறது.
கோடம்பாக்கம் தமிழர்களின் கனவுத் தொழிற்சாலைப் போல மாறியிருந்தது. எண்பதுகளில் தமிழ் சினிமாவின் போக்கில் பல ஒளிக்கீற்றுகள் தென்பட்டன. புது ரத்தம் கோடம்பாக்கத்தில் பாய்ந்தது.
திரையிசையில் மெல்லிசை மன்னரான எம்.எஸ்.விஸ்வநாதன் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்தாலும் இளையராஜாவின் வருகை தமிழ் சினிமாவின் வசந்தகாலம்.
1980ல் வெளிவந்த ‘ஒரு தலை ராகம்’ ஒரு ஆண்டு வரை ஓடி டி.ராஜேந்தருக்கு வழிவிட்டு வரவேற்றது.
பின்னாளில் தமிழக முதல்வரான ஜெயலலிதா இறுதியாக நடித்த ‘நதியைத் தேடி வந்த கடல்’ இயக்குநர் பீ.லெனின் இயக்கத்தில் வெளிவந்தது
இயக்குநர் பாரதிராஜாவின் ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘மண்வாசனை’, ‘முதல் மரியாதை’ என்று அவருக்கான முத்திரைப்படங்கள் தொடர்ந்து வெளியாகி, அவரைத் தமிழ்த் திரையுலகின் தனிப்பெரும் இயக்குநராக உயர்த்தின.
கறுப்பு வெள்ளைக் காலத்திலிருந்தே திரை வரலாறு படைத்த இயக்குநர் சிகரமான கே.பாலசந்தர் ‘வறுமையின் நிறம் சிகப்பு’, ‘தண்ணீர்… தண்ணீர்’, ‘சிந்து பைரவி’, ‘புன்னகை மன்னன்’ என்று அடுத்தடுத்து வெற்றிக் கொடியைப் பறக்கவிட்டார்.
மூடுபனி, அழியாத கோலங்கள், மூன்றாம் பிறை என்று செல்லுலாய்டு காவியங்களைத் தந்த இயக்குநர் பாலுமகேந்திரா வீடு, சந்தியாராகம் போன்ற படங்களைப் படைத்து தேசிய விருதுகளையும் பெற்றுத் தந்தார்.
உதிரிப்பூக்களைத் தொடர்ந்து ஜானி, நெஞ்சத்தைக் கிள்ளாதே, நண்டு, மெட்டி போன்ற அற்புதமான படங்களை இயக்குநர் மகேந்திரன் தந்ததும் இந்தக் காலத்தில் தான்.
ஒரு கை ஓசை, அந்த ஏழுநாட்கள், மௌன கீதங்கள் என்று திரைக்கதையில் தனி முத்திரையைப் பதித்துக் கொண்டிருந்தார் இயக்குநர் கே.பாக்யராஜ்.
ஆண்பாவம் மூலம் பாண்டிய ராஜனும், புதிய பாதை மூலம் பார்த்திபனும் திரைக்குள் வெற்றிக் காலடி வைத்தார்கள்.
பாசில் ‘பூவே பூச்சூட வா’ மூலம் மென்மையான வாசனையைப் போல தமிழ்த் திரைக்குள் நுழைந்தார்.
இதயக் கோவிலில் துவங்கி ‘நாயகன்’, ‘மௌனராகம்’ என்று நவீனப் பார்வையுடன் தனித்துத் தெரிந்தார் இயக்குநர் மணிரத்னம். மை டியர் குட்டிச் சாத்தான் மூலம் 3 டி நவீனத் தொழில்நுட்பம் தமிழ்த் திரைக்குள் நுழைந்தது.
சகலகலா வல்லவன், முரட்டுக்காளை, தூங்காதே தம்பி தூங்காதே என்று தொடர் வெற்றிகளால் அயராத உழைப்பைத் தந்தவரான இயக்குநர் எஸ்.பி.முத்துராமனைக் கொண்டாடிய காலமும் இது தான்.
ராஜபார்வை, விக்ரம், நாயகன், பேசும்படம் என்று கமல் தன்னுடைய சாதனைகளை விரிவுபடுத்தினார்.
முரட்டுக்காளை துவங்கி எங்கேயோ கேட்ட குரல், நல்லவனுக்கு நல்லவன், ராகவேந்திரர் வரை தொடர் உச்சிக்குப் போனார் ரஜினிகாந்த்.
சங்கிலி படம் மூலம் பிரபு அறிமுகமானார். எங்க ஊரு பாட்டுக்காரன் மூலம் ராமராஜன் வெளிச்சத்திற்கு வந்தார். நகைச்சுவை உலகின் இரட்டையர்களான கவுண்டமணியும், செந்திலும் ஒன்று சேர்ந்து கலக்க ஆரம்பித்தார்கள்.
நிழல்கள் படத்தின் மூலம் பொன்மாலை நாயகனாக கவிப்பேரரசு வைரமுத்தின் வீர்யத்தைக் கவனிக்க வைத்தார் பாரதிராஜா.
இயக்கம், தொழில்நுட்பம், இசை, பாடல், நடிப்பு என்று சகலவற்றிலும் புது ரத்தம் பாய்ந்த காலகட்டம் 80-கள் தான்…!
– யூகி