கோலாகலமாக நிறைவடைந்த செஸ் ஒலிம்பியாட் விழா!

கடந்த 12 நாட்களாக சென்னை, மாமல்லபுரத்தில் நடைபெற்று வந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி நேற்று மாலையுடன் நிறைவு பெற்றது. இதையொட்டி செஸ் ஒலிம்பியாட்டின் கோலாகலமான நிறைவு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று மாலை நடைபெற்றது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை நடைபெற்ற விழாவில், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன், சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு தலைவர் அர்கடி துவார்கோவிச் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினர்களாக இந்திய செஸ் அணியின் ஆலோசகர் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், அனைத்திந்திய சதுரங்க கூட்டமைப்பு தலைவர் சஞ்சய் கபூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டர்.

நிறைவு விழா தொடக்கத்தில், இந்தியாவின் இதயத்துடிப்பு என்ற பெயரில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. டிரம்ஸ் சிவமணி, வீணை இசைக் கலைஞர் ராஜேஷ் வைத்தியா, கீ போர்டு – ஸ்டீபன் தேவசி, புல்லாங்குழல் இசைக் கலைஞர் நவீன் ஆகியோர் இணைந்து பல பாடல்களை இசைத்தனர்.

பாரதியாரின் ‘சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா’பாடலை பியோனோவில் வாசித்தார் பியோனோ கலைஞர். அந்தரத்தில் பறந்தபடி பியோனா இசைத்த பெண்ணின் நிகழ்ச்சி பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தியது.

இதே போல பல்வேறு பாரம்பரியமிக்க கலை நிகழ்ச்சிகள், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களை விளக்கும் கலைநிகழ்ச்சிகளும் நடந்தது.

600 கலைஞர்கள் கலந்து கொண்டு பல்வேறு கண்கவர் நடனம் மற்றும் இசை நிகழ்ச்சிகளை நடத்தினர்.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளான ஜல்லிக்கட்டு, கபடி, மஞ்சுவிரட்டு, பூப்பந்தாட்டம், கண்ணாமூச்சி, சதுரங்கம் உள்ளிட்ட தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளின் வரலாற்றை விவரிக்கும் வகையில் கலைஞர்கள் தங்கள் பங்களிப்பை வெளிப்படுத்தி அசத்தினர்.

இது தமிழர்களின் விளையாட்டுகளை பறைசாற்றும் விதமாக அமைந்தது.

You might also like