கும்பகோணம் பார்வதி சிலை அமெரிக்காவுக்குப் போனது எப்படி?

கும்பகோணத்தில் உள்ள நடனபுரீஸ்வரர் கோவிலில் 51 ஆண்டுகளுக்கு முன்பு பார்வதி சிலை ஒன்று காணாமல் போயிருக்கிறது. பல இடலங்களிலும் வழக்கம் போலத் தேடியிருக்கிறார்கள்.

இப்போது அதே பார்வதி சிலை அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது. அந்தப் பார்வதி சிலை எப்போது அமெரிக்காவுக்குப் போனது? யார் அதைக் கடத்தினார்கள் என்கிற கேள்விகள் ஒருபுறம் இருக்க, அந்தச் சிலையில் தற்போதைய சந்தை மதிப்பு எவ்வளவு தெரியுமா?

ஒரு கோடியே 68 லட்சத்து  26 ஆயிரம் ரூபாய்.

கும்பகோணம் கோவிலில் இருந்த பார்வதி சிலை நியூயார்க்கில் உள்ள ஏலக்கடைக்கு எப்படிப் போனது என்பதை பார்வதி தான் சொல்ல வேண்டும் போலிருக்கிறது.

அந்தச் சிலையைத் திரும்பவும் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவர சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவுக் காவல்துறை முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது.

சரி தான். அது மாதிரி இன்னும் எத்தனை சிலைகள் கடத்தப்பட்டு வெளிநாடுகளுக்குப் பயணப்பட்டிருக்கின்றனவோ, தெரியவில்லை.

இதே மாதிரி மதுரையில் உள்ள ஒரு கோவிலில் இருந்து பிரிட்டிஷார் ஆட்சிக்காலத்தில் அழகான வேலைப்பாடுகள் நிரம்பிய மண்டபமே மலிவான விலைக்கு வாங்கப்பட்டு வெளிநாட்டில் உள்ள மியூசியத்தில் இப்போதும் காட்சிப் பொருளாக இருக்கிறது.

பழ.நெடுமாறன் போன்றவர்கள் அந்தக் கல் மண்டபத்தை மீண்டும் தமிழகத்திற்குக் கொண்டு வருவதற்குக் குரல் கொடுத்திருக்கிறார்கள்.

அதனுடைய இப்போதைய சந்தை மதிப்பு எத்தனை கோடிகளோ?

குறைந்த காலமே சிலைத்தடுப்புப் பிரிவில் இருந்தவரான பொன்.மாணிக்கவேல் தமிழகத்திலிருந்து காணாமல் போன சிலைகளின் பட்டியலையே கொடுத்தாரே.. அதில் நாம் எந்த அளவுக்கு உரிய கவனம் எடுத்துக் கொண்டோம்?

ஒன்றை நாம் உணர வேண்டும். இவ்வளவு நுட்பமான வேலைப்பாடு அமைந்த அற்புதமான சிலைகளையும், மண்டபங்களையும் எவ்வளவு நுணுக்கமான – மனம் ஒன்றிய ஈடுபாட்டோடு உருவாக்கி இருப்பார்கள் நம் முன்னோர்களான அன்றையத்  தமிழர்கள்.

அத்தகைய உழைப்பைத் தற்போது நம்மால் காட்ட முடியவில்லை என்றாலும், கால ஓட்டத்தை மீறி நம்மிடம் இருக்கும் அவற்றின் மதிப்பைக் கூட நாம் உணராமல் வெளிநாடுகளில் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது என்றால் யாரைக் குறை சொல்வது?

அவ்வளவு சிலைகள் தானாகக் கோவிலில் இருந்து நகர்ந்து வெளிநாடுகளுக்குப் பயணப்பட்டிருக்குமா?

அன்றையத் தமிழர்கள் அரிய உழைப்பைக் கொடுத்து காலத்தை மீறிய பொக்கிஷங்களை நமக்கு முன்னால் விட்டுச் சென்றிருக்கிறார்கள்? அதை முறையாகப் பராமரிக்கக் கூடத் திறனின்றி இன்றையத் தமிழர்களே அலட்சியப்படுத்தலாமா?

-யூகி

You might also like