– உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவு
திருப்புத்துார் அருகே மகிபாலன்பட்டி செந்தில்குமார், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், பத்தாம் வகுப்பு முடித்து, ஓட்டுனர் உரிமம் பெற்ற தகுதியை சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், 2010ல் பதிவு செய்தேன். எனக்கு பதிவு எண் வழங்கப்பட்டது. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டயப் படிப்பை, 2011ல் பதிவு செய்தேன். பதிவை குடும்ப சூழ்நிலையால் 2013ல் புதுப்பிக்கத் தவறிவிட்டேன்.
வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு புதுப்பிக்க, 2021ல் தமிழக அரசு சிறப்புச் சலுகை வழங்கியது. என் பதிவை புதுப்பிக்க வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் இணையதளத்தில் நுழைந்தேன். என் பதிவு எண்ணைப் பயன்படுத்தி, வேறு ஒருவருக்கு வேலை வழங்கப்பட்டிருந்தது.
அவரின் பணி நியமனத்தை ரத்து செய்து, எனக்கு பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் வழங்கக்கோரி, 2021 செப்டம்பரில் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரிடம் மனு அளித்தேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.
விசாரணையில் தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டது, அப்போதைய மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தொண்டீஸ்வரனால், சட்ட விரோதமாக பணி வழங்கப்பட்டது. பணி பெற்றவரை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தொண்டீஸ்வரன் கட்டாய ஓய்வு பெற அனுமதிக்கப்பட்டிருந்ததாலும், அவர் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய, துறை ரீதியான நடவடிக்கைகளை துவங்க, தமிழக அரசிடம் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் அனுமதி கோரியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, அரசிடமிருந்து அனுமதி பெற்று முடிந்தவரை விரைவாக, தொண்டீஸ்வரன் மீது துறைரீதியான நடவடிக்கைகளை துவங்கவும், குற்ற வழக்கு பதிவு செய்யப்படவும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் உறுதி செய்ய வேண்டும்.
செந்தில்குமாருக்கு பதிலாக வேலை பெற்ற நபருக்கு எதிராக, விரைவாக நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வழக்கை முன்னுதாரணமாக கொண்டு, வேலைவாய்ப்பு அலுவலக பதிவுகளில் முறைகேடுகளை தடுப்பதற்கான வழிமுறைகளை உருவாக்க வேண்டும். இது, வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மீது சாமானியர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் இருக்க வேண்டும்” என நீதிபதி உத்தரவிட்டார்.