அசோகர் சாலையோரங்களில் மரம் நட்டார், ராஜராஜ சோழன் தஞ்சை பெரியகோயிலைக் கட்டினார் என்று ஒருபக்கம் பழங்கால மன்னர்களின் சாதனைகளைப் பட்டியலிடும்போதே, அவர்கள் எல்லோரும் கடுமையான போர்களின் வழியாகவே பல தேசங்களை வென்று அடிமைப்படுத்தியதாகவும் அறிகிறோம்.
அலெக்சாண்டரும் செங்கிஸ்கானும் இன்றிருக்கும் பல நாடுகளைப் போரிட்டு அடிபணிய வைத்ததாகப் படிக்கிறோம்.
ஒவ்வொருமுறை இது போன்ற தகவல்களைக் கேள்விப்படும்போதெல்லாம், எந்நேரமும் போர் பற்றிய நினைவுகளுடன் மூர்க்கத்துடனே திரியும் ஒரு மன்னரால் எப்படித் தன் நாட்டு மக்களிடம் மட்டும் பரிவையும் பண்பையும் வெளிப்படுத்த முடியும்?
இந்த கேள்வி என்னைப் பல முறை தாக்கியிருக்கிறது. தற்போது நந்தமூரி கல்யாண்ராம் நடிப்பில் வெளியாகியுள்ள ‘பிம்பிசாரா’ தெலுங்கு திரைப்படம் அதற்குப் பதிலளித்துள்ளது.
கொடுங்கோலன் ஆட்சி!
ஒரு மாபெரும் மருத்துவ சாம்ராஜ்யத்தை கட்டியெழுப்ப ஆசைப்படும் சுப்பிரமணிய சாஸ்திரி (விவன் பதேனா) தன் தந்தையின் ஆசைப்படி பல நூற்றாண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட தன்வந்திரி வைத்தியக் குறிப்பு நூலை அடைய முயற்சிக்கிறார்.
அதனைக் கைக்கொண்டால், உலக மருத்துவ சந்தையையே தன் கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம் என்று கனவு காண்கிறார்.
அதற்காக, கேது (அய்யப்ப சர்மா) எனும் ஒரு மாந்தீரிகவாதியின் உதவியையும் நாடுகிறார்.
எதிர்கால நிகழ்வுகளைக் கணித்தறியும் கேது, தன்வந்திரி குறிப்பைத் தனது கருவூலத்தில் பாதுகாத்து வைத்த பேரரசர் பிம்பிசாரரே அதனை நேரில் வந்து ஒப்படைப்பார் என்று சொல்கிறார்.
இதையடுத்து, இந்த நவீன யுகத்தில் பிம்பிசாரரைத் தேடும் படலம் ஆரம்பமாகிறது.
கி.மு.500இல் திரிகர்தலா எனும் நாட்டை ஆண்ட மன்னர் பிம்பிசாரர் (கல்யாண் ராம்) பல தேசங்களை எதிர்த்துப் போரிட்டு அவற்றை தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருகிறார்.
தனக்கு கீழ்ப்படியாத அசாகஸ் நாட்டு மன்னரையும் இளவரசி இராவையும் (கேத்தரின் தெரசா) கடத்திவந்து சிறையில் அடைக்கிறார்.
எதிரிகளில் சிலருக்கு வைத்தியம் செய்த காரணத்திற்காக, ஒரு மருத்துவரின் குடும்பத்தையும் அவர் வசித்த கிராமத்தையும் சூறையாடுகிறார்.
எதிர்த்துப் பேசிய காரணத்திற்காக, ஒரு பச்சிளம் சிறுமியைக் கூட கொல்கிறார். அங்கிருக்கும் தன்வந்தரி குறிப்பை அபகரித்துச் செல்கிறார்.
பிம்பிசாரரின் வெற்றியைப் பாராட்டி பாண்டிய மன்னர் உட்பட பலரும் பரிசுகள் அனுப்புகின்றனர். அதில் ஒரு மாயக்கண்ணாடியும் அடங்கியிருக்கிறது.
அந்த மாயக்கண்ணாடியை அனுப்பியவர் பிம்பிசாரர் உடன் பிறந்த சகோதரரான தேவதத்தன் (கல்யாண்ராம்). இருவரும் இரட்டையர்களாகப் பிறந்தவர்கள்.
தந்தையைக் கொன்ற பிம்பிசாரர், தன்னையும் கொன்றுவிடுவான் என்றெண்ணி சிறுவயதிலேயே தப்பிச் சென்றுவிடுகிறார் தேவதத்தன்.
ஆனால், தான் நேசிக்கும் இளவரசி இராவை பிம்பிசாரர் சிறை வைத்ததை அறிந்ததும் கோபமுற்று அரண்மனைக்குள் நுழைகிறார்.
தன்னைப் போலவே தோற்றம் கொண்ட கொடுங்கோலன் பிம்பிசாரரை அந்த மாயக்கண்ணாடிக்குள் தள்ளி அவரது இடத்தைப் பிடிக்கிறார். கால வெள்ளத்தில் சிக்கிய பிம்பிசாரர், 21ஆம் நூற்றாண்டில் நுழைகிறார்.
ஒருபக்கம், பிம்பிசாரரைப் பிடிக்க சுப்பிரமணிய சாஸ்திரியின் ஆட்கள் முயல்கின்றனர்.
கடந்த காலத்திலோ, நாட்டு மக்களின் துயர் துடைக்க பிம்பிசாரரின் கருவூலத்தைத் திறக்க முயற்சிக்கிறார் தேவதத்தன்.
ஆனால், அதனைத் திறக்க பிம்பிசாரரின் கைரேகையும் குரலும் தேவை. அதை ஈடுகட்ட, வேதிகர்கள் சில பூஜைகள் செய்கின்றனர். அதனைத் தடுக்க தளபதி பகீரா சதித்திட்டம் தீட்டுகிறார்.
பிம்பிசாரரின் கருவூலத்தில் இருக்கும் தன்வந்தரி குறிப்பை சுப்பிரமணிய சாஸ்திரி கைப்பற்றினாரா? பகீராவை மீறி தேவதத்தன் வாகை சூடினாரா என்ற கேள்விகளுக்கு விடையளிக்கிறது பின்பாதி ‘பிம்பிசாரா’.
மன்னர்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும், அவர்களது ஆட்சியில் ஜனநாயகத்தை எதிர்பார்க்க முடியாது என்ற உண்மையைச் சொல்கின்றன பிம்பிசாரரைக் காட்டும் காட்சிகள்.
ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் கொடுங்கோலாட்சியை மேற்கொண்டாலும் அது ராஜநீதிதான் என்று ஒரு சிலர் முட்டுக் கொடுப்பதைத் தகர்க்கும் வகையில், எந்தவொரு மனிதருக்கும் நேயம் மட்டுமே அவசியமானது என்று நீதி சொல்கிறார் இயக்குனர் மல்லிடி வசிஷ்டா.
கல்யாண் ராமின் அதகளம்!
ஒரு பாகுபலி, கேஜிஎஃப் போல பிற மாநில மக்களை ஈர்க்கக்கூடிய கதையாக ’பிம்பிசாரர்’ இருந்தாலும், வழக்கமான தெலுங்கு பட பட்ஜெட்டிலேயே இதனைத் தயாரித்து நடித்திருக்கிறார் கல்யாண் ராம்.
அதேநேரத்தில், விஎஃப்எக்ஸில் பெரிதாக குறை வைக்கவில்லை. அதனால், எந்தவொரு காட்சியும் ‘அமெச்சூர்’ராக தெரியவில்லை.
மன்னராட்சியோ, மக்களாட்சியோ எதுவாக இருந்தாலும், அதன் மையமாக மக்களின் நலன் மட்டுமே இருக்க வேண்டும்.
இந்த ஒன்றை மட்டும் துணையாகக் கொண்டு, மிக நேர்த்தியான திரைக்கதையைத் தந்திருக்கிறார் வசிஷ்டா. ஆனால், முன்பாதி அளவுக்கு பின்பாதி வசீகரிக்கவில்லை என்பதும் உண்மை.
பின்பாதியில் லாஜிக் குறைகளும் வழக்கமான தெலுங்கு சினிமா மசாலாத் தனங்களும் நிறைந்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம்.
தனது அனுபவம் மிகப்பெரியது என்பதை ஒவ்வொரு பிரேமிலும் காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சோட்டா கே.நாயுடு. கல்யாண் ராமின் அறிமுகக் காட்சியே அதற்கொரு உதாரணம்.
நிகழ்காலம், கடந்த காலம் என்று இரண்டையும் அடுத்தடுத்து காட்டும் திரைக்கதை நகர்வில் எவ்விதக் குழப்பத்திற்கும் இடம் தராமல் அமைந்திருக்கிறது தம்மி ராஜுவின் படத்தொகுப்பு.
எம்.எம்.கீரவாணி மற்றும் சிரந்தன் பட் இசையில் முறையே 4 மற்றும் 2 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
‘விஜயஹோ’ என்று பின்னணியில் ஒலிக்கும் பாடல் தவிர மற்றனைத்தும் வழக்கமான தெலுங்கு படங்களுக்கே உரியவை. கீரவாணியின் பின்னணி இசை அருமை.
கிரண்குமாரின் கலை வடிவமைப்பு, வழக்கமாக வரலாற்று திரைப்படங்களில் இருக்கும் அம்சங்களையே காட்டுகிறது.
என்ன, பிம்பிசாரரின் கருவூலத்தைக் காட்டுமிடத்தில் மட்டும் கொஞ்சம் மெனக்கெடவில்லையோ என்று தோன்றுகிறது.
நாயகிகளாக வரும் கேத்தரின் தெரசாவுக்கோ, சம்யுக்தாவுக்கோ பெரிதாக வேலையில்லை. பிரகாஷ்ராஜ் மற்றும் அவரது குடும்பத்தினராக வருபவர்களுக்குத் திரைக்கதையில் பெரிதாக முக்கியத்துவம் தரப்படவில்லை. அதுவே, கிளைமேக்ஸ் பகுதியின் மிகப்பெரும் பலவீனமாக வெளிப்படுகிறது.
வெண்ணிலா கிஷோர், பிரம்மாஜி ஆகியோரின் நகைச்சுவை ஆங்காங்கே சிரிக்க வைக்கிறது. அவர்களை மீறி பிம்பிசாரரின் எடுபிடியாக வரும் ஸ்ரீனிவாஸ் வாய்விட்டு சிரிக்க வைக்கிறார்.
வில்லன்களாக வரும் விவன் பதேனா, அய்யப்ப சர்மா அளவோடு திரையில் நடமாடுகின்றனர்.
இப்படத்தில் மிகமுக்கிய வில்லன் பிம்பிசாரராக வரும் கல்யாண் ராம். ஆதலால், அவருக்கே அதீத முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.
அதை அவரும் மிகச்சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார் என்பதுதான் மொத்தப்படத்தின் சிறப்பம்சமாகவும் விளங்குகிறது.
சிங்கத்தின் கர்ஜனை என்று தோன்றும் வகையில் மூர்க்கத்தனத்தை வெளிப்படுத்தும் கரகரத்த குரலில் அவர் வசனம் பேசியிருப்பது நம்மை மிரட்டுகிறது. தமிழ் ரசிகர்களுக்கு சிவாஜி கணேசன் நினைவு வந்தால் ஆச்சர்யமில்லை.
வரிசையாக ஐந்தாறு ‘அட்டர்பிளாப்’ தந்தால் இடையே ஒரே ஒரு திரைப்படத்தில் அதகளப்படுத்துவது கல்யாண் ராமின் வழக்கம். ’பிம்பிசாரா’ அப்படியொரு பிளாக்பஸ்டராக அமைந்திருக்கிறது.
இப்படத்தில் கோட்சூட் அணிந்தாலும் கல்யாணை ஒரு அரசராகவே உணரவைப்பது, அவரது நடிப்புத்திறனுக்கான சான்று. அதேநேரத்தில், மொத்தப்படமும் கல்யாண் ராமின் ‘ஒன் மேன் ஷோ’வாக இருக்கிறது என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
நல்ல ஐடியா!
‘பிம்பிசாரா’ மிகச்சிறப்பாக உருவாக்கப்பட்ட திரைப்படமா என்றால் ‘இல்லை’ என்றே சொல்ல வேண்டும். ஆனால், வரையறுக்கப்பட்ட பட்ஜெட்டில் மிகச்சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இன்னும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட திரைக்கதையுடன் வழக்கமான ‘க்ளிஷே’க்களை தவிர்த்து உருவாக்கியிருந்தால் ஒரு ‘பான் இந்தியா’ படமாகவும் இது கொண்டாடப்பட்டிருக்கும்.
வெறுமனே மன்னர்களின் சாதனைகளை மட்டுமே கொண்டாடும் மனோபாவத்தின் எதிரே, அவ்வாட்சியில் மக்கள் எத்தகைய சூழலை எதிர்கொண்டார்கள் என்ற எண்ணம் உடைபட்டுப்போகும். இன்று, அது தொடர்பான கேள்விகள் பெருகியிருக்கின்றன.
அதிகார மமதை அழிவுக்கே வழி வகுக்கும் என்ற நம்பிக்கையும் பெரும்பாலானவர்களிடம் வேர் கொண்டிருக்கிறது.
அதனைப் புரிந்துகொண்டு, வெறும் வரலாற்றுப் படமாக அல்லாமல் ஒரு ‘பேண்டஸி’ படமாக நம்மை வந்தடைந்திருப்பது நல்ல ஐடியா. அதற்காக மட்டுமே மல்லிடி வசிஷ்டாவின் ‘பிம்பிசாரா’வை கொண்டாடலாம்.
அதேநேரத்தில், நம்மூரில் நாம் கொண்டாடிவரும் ஏதேனும் ஒரு மன்னரை இப்படிக் காட்சிப்படுத்த இயலுமா என்ற கேள்வியும் நம்முள் எழுகிறது.
கூடவே, ‘இவ்வுலகில் கேள்விகளுக்கு அப்பாற்பட்டவர் எவருமில்லை’ என்கிற நியதியையும் புதையுண்ட நினைவடுக்குகளில் இருந்து பிரித்தெடுக்கிறது ‘பிம்பிசாரா’!
– உதய் பாடகலிங்கம்