குலு குலு – சந்தோஷ் நாராயணனின் குதூகலக் கொப்பளிப்பு!

ஒரு பணியை சிரத்தையுடன் செய்வது எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு அதனை மேற்கொள்ளும்போது மகிழ்ச்சியுடன் இருப்பதும் அவசியம். அவ்வாறு நிகழ்ந்தால், அதன் பலன் விளைவுகளில் தெரியவரும்.

ரத்னகுமார் இயக்கத்தில் சந்தானம் நாயகனாக நடித்திருக்கும் ‘குலு குலு’ திரைப்படம் காண்கையில் அப்படியொரு மகிழ்ச்சியை உணர முடிந்தது.

குறிப்பாக, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அடைந்த மகிழ்ச்சியை நம்மால் உணர முடிவதே இப்படத்தின் பெரும் சிறப்பு.

காமெடியான (?!) கதை!

ஒரு லத்தீன் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பழங்குடியின மனிதர் தன் தாய், உறவினர்கள், மொழி இழந்து பல நாடுகள் கடந்து இறுதியாக சென்னை வந்தடைகிறார்.

’உதவி’ என்று எவரொருவர் கேட்டாலும், அவருக்காகத் தன்னால் இயலாததையும் சொல்லும் குணம் கொண்ட அம்மனிதரின் பெயர் கூகுள் என்ற ‘குலு’ பாய் (சந்தானம்).

இஸ்ரோவில் விஞ்ஞானியாக பணியாற்றும் தந்தைக்கு தன் மீது பாசம் இருக்கிறதா இல்லையா என்று தெரியாமல் திணறுகிறார் மதிமாறன் (ஹரிஷ்குமார்).

அவரைத் தீவிரமாகக் காதலிக்கிறார் வடிவுக்கரசி (நமீதா கிருஷ்ணமூர்த்தி) என்ற பெண்.

ஆஸ்திரேலியாவில் இருந்து மதி இந்தியா திரும்ப, அதேநேரத்தில் தன் பெற்றோரிடம் சண்டையிட்ட வடிவுக்கரசி அவரைத் தேடி வருகிறார்.

இன்னொரு பக்கம், மாபெரும் சாராய சாம்ராஜ்யத்துக்கு சொந்தக்காரரான டேவிட் (பிரதீப் ராவத்), இறந்துபோன தன் தந்தையின் ஈமச்சடங்கை துரிதமாக நடத்துவதில் குறியாக இருக்கிறார்.

காரணம், தந்தைக்கு வெளிநாட்டில் ஒரு குடும்பமும் ஒரு மகளும் இருக்கும் தகவலை அறிவதுதான். அந்த பெண் பெயர் மெடில்டா (அதுல்யா சந்திரா).

கடைசியாக தந்தையின் முகம் காணவரும் மெடில்டா, இடுகாட்டில் அவரது சடலம் வெளியே தோண்டியெடுத்து வைக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியுறுகிறார்.

அதேநேரத்தில், மெடில்டா தான் தந்தையின் பிணத்தை வெளியே எடுத்ததாக எண்ணி அங்கு வரும் டேவிட் அவரைத் துரத்துகிறார்.

இந்த களேபரத்திற்கு நடுவே, தந்தையின் அன்பைப் பெறுவதற்காகத் தன் நண்பர்களுடன் சேர்ந்து கடத்தல் நாடகமாடத் திட்டமிடுகிறார் மதிமாறன்.

அதற்குள், வேறொரு கும்பல் நிஜமாகவே அவரைக் கடத்துகிறது.

மதிமாறனைக் காப்பாற்ற அவரது நண்பர்களும் வடிவுக்கரசியும் குலு பாயின் உதவியை நாடுகின்றனர். அவரும் உடனே சம்மதிக்கிறார்.

மதியைத் தேடும் அவர்களது பயணத்தில், திடீரென்று டேவிட்டின் கொலைவெறிக் கும்பல் குறுக்கிடுகிறது. அது ஏன், அதன்பின் என்னவானது என்று சொல்கிறது ‘குலு குலு’.

கிரேசி மோகனின் ‘ஆள் மாறாட்ட’ காமெடி டைப்பில் கதை அமைந்தாலும், திரையில் ஒவ்வொரு காட்சியும் அடுக்கப்பட்ட விதம் புதுமாதிரியாக இருக்கிறது.

அது பலமா பலவீனமா என்பது பார்வையாளர்களின் தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது. அந்த இடம்தான் இப்படம் வெற்றியா தோல்வியா என்பதைத் தீர்மானிக்கும் காரணியாகவும் அமைகிறது.

நழுவப் பார்க்கும் ‘லகான்’!

கவுதமாலா, வெனிசுலா உள்ளிட்ட சில லத்தீன் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த பழங்குடியின மக்களிடம் இந்தியச் சாயல் இருப்பதைக் காண முடியும்.

அதனை மட்டும் வைத்துக்கொண்டு, சந்தானத்தின் பாத்திரத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர்.

மன இறுக்கத்தில் சிக்குண்டவர் என்ற தன்மைக்கேற்ப படம் முழுக்க புன்னகை சிந்தாமல் வலம் வருகிறார் சந்தானம்.

நாயகியாக வரும் அதுல்யாவுக்கு இதில் பெரிதாக வேலையில்லை. ‘யூடியூப்’ புகழ் மிதிலா பால்கரை நினைவுபடுத்துகிறார் நமீதா கிருஷ்ணமூர்த்தி.

மதிமாறனாக வரும் ஹரிஷ் குமார், ‘முதல் நீ முடிவும் நீ’க்கு பிறகு நினைவில் நிற்கும் ஒரு பாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரது நண்பர்களாக வருபவர்களும் கூட கலக்கியிருக்கின்றனர்.

பிரதீப் ராவத், அவரது சகோதரராக வரும் பிபின், லொள்ளுசபா மாறன், சேஷு, இன்ஸ்பெக்டராக வரும் சாய் தீனா, ஜார்ஜ் மரியானோடு இணைந்து கடத்தல்காரர்களாக வரும் இதர நடிகர்கள் என்று ஒரு பட்டாளமே திரையை நிறைக்கிறது.

விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவு இப்படத்தின் பெரும்பலம். சந்தானத்தின் அறிமுகக்காட்சியிலேயே அதனை அவர் உணர்த்திவிடுகிறார்.

இப்படியொரு ‘கொத்து பரோட்டா’ திரைக்கதையைக் கொஞ்சமும் குழப்பம் இல்லாமல் ரசிகனுக்குத் தர படத்தொகுப்பு சீர்மையுடன் இருக்க வேண்டும்.

அதனைச் செவ்வனே செய்திருக்கிறார் பிலோமின் ராஜ். ’டிஐ’ மேற்கொண்ட குழுவும் அபாரமாகப் பணியாற்றியிருக்கிறது.

கண்களைத் துருத்தாத காட்சியமைப்புக்கு ஜாக்கியின் கலை வடிவமைப்பும், தினேஷ் மனோகரனின் ஆடை வடிவமைப்பும் பக்கபலமாக அமைந்திருக்கின்றன.

திசைக்கொரு பக்கமாக நகரும் கதாபாத்திரங்களின் தன்மை, வழக்கத்திற்கு மாறான திரைக்கதை ட்ரீட்மெண்ட் என்று களமிறங்கியிருக்கும் இயக்குனர் ரத்னகுமார், தன் கையிலிருக்கும் லகானை விட்டுவிடாமல் அங்குமிங்குமாக ஓடியிருப்பதாகவே தோன்றுகிறது.

அதற்கேற்ப சில காட்சிகள் நம் மனதைத் தொடுகின்றன; சில வெகுசாதாரணமாக நம்மைக் கடந்து செல்கின்றன.

புதுவகை ’ட்ரீட்மெண்ட்’!

அமெரிக்க, கொரிய, ஐரோப்பிய, லத்தீன் அமெரிக்க திரைப்படங்கள் என்று நம் கண்களை நிறைக்க விருந்து தயாராக இருக்கிறது.

அவற்றில் பயன்படுத்தப்படும் திரைக்கதை உத்திகளும் காட்சிகள் நகர்விற்காகப் பயன்படுத்தப்படும் ட்ரீட்மெண்டும் பலவாறாக கிளைகள் விரிக்கின்றன.

அவற்றில் ஏதேனும் ஒன்றைக் கண்டால் கூட, அப்படியொரு திசையில் தமிழ் திரையுலகிலும் யாராவது கதை சொல்ல மாட்டார்களா என்ற ஏக்கம் தலையெடுக்கும்.

அதற்குத் தீர்வளிக்கும் வகையில், ‘அதற்காகவே நான் திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளேன்’ என்று சொல்லாத குறையாக ‘குலு குலு’ வைத் தந்திருக்கிறார் இயக்குனர் ரத்னகுமார்.

நெஞ்சை நெகிழ வைக்கும் சென்டிமெண்ட், அதற்கடுத்து உடனடியாக ‘மொக்கை’ வாங்கும் நகைச்சுவை,

அதன்பின் கொலை வெறி தாக்குதலை நிகழ்த்தும் கும்பலுடன் ‘அதிரிபுதிரி’யான மோதல் என்று காட்சிகள் ஒவ்வொன்றும் ஏதேனும் ஒரு உணர்ச்சியை மட்டும் தாங்கிப் பிடிக்கின்றன.

சில காட்சிகளில் அடுத்தடுத்து உணர்வு மாற்றங்கள் நிகழ்கின்றன. அதற்கு நம் மனம் தயாராவதற்குள் ஏதேனும் ஒரு பாத்திரம் கிச்சுகிச்சு மூட்டுகிறது. இதுவே தொடர்கதையாகி படம் முடியும் வரை நீடிக்கிறது.

எப்படி ‘டாக்டர்’ படத்தில் சிவகார்த்திகேயன் தன் வழக்கமான ‘கலாய்த்தலை’ மூட்டை கட்டி வைத்தாரோ, அதே சவாலை இதில் ‘அசால்டாக’ எதிர்கொண்டிருக்கிறார் சந்தானம். அவரது வழக்கமான ‘கவுண்டர்’கள் இப்படத்தில் ஓரிடத்தில் கூட வெளிப்படவில்லை.

அதனைத் திறமையாகச் சமாளித்ததோடு, சந்தானத்தில் ‘ஆக்‌ஷன் ஹீரோ’ பிம்பத்திற்கும் அடித்தளம் அமைத்து தந்திருக்கிறார் இயக்குனர் ரத்னகுமார்.

ரத்தமும் சத்தமும் தெறிக்கும் ஒரு கதைக்களத்தில் நகைச்சுவைக்கு இடம் தருவதெல்லாம் அசாத்தியமான விஷயம். அதனைச் சாதிக்க முயன்றிருக்கிறார்.

இப்படியொரு படத்தில் ‘மொழி அரசியலை’யும் ‘அடையாள அரசியலை’யும் பேசியிருப்பது அருமை. அதற்கேற்ப வசனங்களையும் ‘பஞ்ச்’சாக தந்திருக்கிறார்.

ஆனால், ‘எத்தனை மொழிகள் கத்துக்கிட்டாலும், எப்போதும் ஒருத்தன் தாய்மொழியிலேயே சிந்திக்கணும்’ என்ற வசனத்தில், ‘தாய்’ என்ற வார்த்தையை ‘ம்யூட்’ செய்திருப்பது தணிக்கைத் துறையில் இருப்பவர்களின் அறிவுப் புரிதலையே கேள்விக்குட்படுத்துகிறது.

இவையனைத்தையும் தாண்டி, ‘குலு குலு’வை கொண்டாடவோ அல்லது ஒருமுறை ரசிக்கவோ ஒரே ஒரு காரணம் மீதமிருக்கிறது.

அது, சந்தோஷ் நாராயணனின் இசை. படம் தொடங்கிய கணம் முதல் இறுதி வரை, ஒரு சிறு காட்சி துணுக்கை கூட தவறவிட்டுவிடக்கூடாது என்ற முனைப்புடன் தனது இசையைத் தந்திருக்கிறார்.

ஒரு பணியைச் செய்யும்போது, அதில் லயித்து இன்பத்தை உணர்ந்தால் மட்டுமே அப்படியொரு விளைவைப் பெற முடியுமென்று சொல்லும் அளவுக்குத் தன் பங்களிப்பைத் தந்திருக்கிறார் ச.நா.

’மாட்னா காலி’, ‘அம்மா நாநா’, ‘அன்பரே’ என்று பாடல்கள் மீண்டும் மீண்டும் ஒலிக்கும்போது உள்ளுக்குள் குதூகலம் கொப்பளிக்கிறது. இதே போன்றதொரு உணர்வை நம்மால் ‘ஜிகிர்தண்டா’விலும் பெற முடியும்.

ஒரு நடிகராகத் தன் திரையுலக வாழ்வில் மிகமுக்கியமான மாற்றத்தை எதிர்கொண்டிருக்கிறார் சந்தானம்.

‘வித்தியாசமான படத்துல எப்போ நடிப்பீங்க’ என்ற கேள்விக்கு இயக்குனர் ரத்னகுமார் மூலமாகப் பதிலளித்திருக்கிறார். அதனை ஏற்கத் தயாராக இருப்பவர்களுக்கு ‘குலு குலு’ அதிருப்தியைத் தராது!

– உதய் பாடகலிங்கம்

You might also like