கார்கில் போரில் நடந்தது என்ன?

– அன்றைய ராணுவ ஜெனரலின் சிறப்புச் சந்திப்பு
*
மீள் பதிவு
*
கார்கில் போர்.

1999 ஆம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கார்கில் பகுதிக்குள் ஊருவியது. இந்திய ராணுவத்துக்கும், பாகிஸ்தான் ராணுவத்துக்கும் இடையில் மூண்டது போர்.

மூன்று மாதங்கள் தொடர்ந்து நடந்த போரில் பாகிஸ்தான் தரப்பில் ஏராளமான படை வீரர்கள் பலியானார்கள். இந்தியத் தரப்பில் ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள்.

‘ஆபரேஷன் விஜய்’ என்று பெயர் சூட்டப்பட்ட கார்கில் போர் நிறைவு பெற்றது 1999 ஜூலை 26 ஆம் தேதி.

21 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கார்கில் போரைப் பற்றி அப்போதைய இந்திய ராணுவ ஜெனரலே நேரடியாகச் சொன்னால் எப்படியிருக்கும்?

புது டில்லியில் ராஜாஜி சாலையில் உள்ள இந்திய ராணுவ ஜெனரல் பங்களாவில் பத்மநாபனை ஒரு வார இதழ் பேட்டிக்காகச் சந்திக்கச் சென்றிருந்தோம், ஆசிரியரான ராவும், நானும்.

பல மொழிகள் அறிந்தவரான பத்மநாபன் ஜம்மு காஷ்மீரில் கோர் கமாண்டராக இருந்தவர். அங்குள்ள தீவிரவாதிகளை ஒடுக்கிய பிறகு அங்கு தேர்தல் நடக்க வழிவகுத்தவர்.

காஷ்மீர் தீவிரவாதிகள் அப்போது இவருடைய தலைக்கு வைத்த விலை – பத்து லட்சம் ரூபாய், ஒரு ஸ்நைப்பர் ரைஃபிள், ஒரு தங்கப் பதக்கம்.

நாங்கள் மிகுந்த பாதுகாப்பு அரண்களைத் தாண்டிச் சந்தித்துப் பேசிய நேரம் – ஆறரை மணி நேரம். சந்திப்பு நடந்தது 2000 ஆம் ஆண்டு டிசம்பரில் குளிர்காலத்தில்.
பேச்சிற்கிடையில் கார்கில் போரைப் பற்றி அவருடன் உரையாடியதில் இருந்து ஒரு பகுதி:
*
“கார்கில் சண்டை நடந்த சமயத்தில் நீங்கள் எங்கிருந்தீர்கள்?”

“நான் ஜனவரியில் அந்தப் பகுதியை விட்டுப் போனேன். அதற்கடுத்து ஐந்து மாதங்கள் கழித்துக் கார்கில் சம்பவம் நடந்தது.

பலத்த ராணுவக் கண்காணிப்பு இருந்தும் சில காரணங்களால் அது நடந்தது. ஊடுருவல் நடந்தபோது பாகிஸ்தான் ராணுவத்தில் ஒருவருக்கு ஒருவர் பஹூத் அச்சா என்று தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

கொஞ்ச நாட்களிலேயே சமாளித்துப் பதிலடி கொடுத்ததும் வெலவெலத்துப் போய் விட்டார்கள். முதலில் தீவிரவாதிகள்தான் ஊடுருவியதாகச் சொன்னார்கள்.
இந்திய ராணுவம் போரிட்டபோது எதிர்த்தரப்பில் இறந்தவர்களின் உடையில் பாகிஸ்தான் ராணுவத்தின் அடையாளம் இருந்தது. இறந்த அந்த உடல்களை எடுத்துப் போகக் கூட அவர்கள் தயாராக இல்லை.

அப்படி எடுத்துப்போனால் பாகிஸ்தான் ராணுவத்தினர் என்பது ஊர்ஜிதமாகிவிடும் என்கிற பயம்!

கார்கில் யுத்தத்தின்போது நமது மீடியா ரொம்பவும் ஒத்துழைத்தது. யுத்தத்தை நம் டிராயிங் ரூமிற்கே கொண்டு வந்தது. என்ன நடந்தது என்கிற உண்மையை உலகம் முழுக்க தெளிவாகத் தெரிவித்தார்கள்.

அது திருப்திகரமான விஷயம். எவ்வளவு ‘எமோஷனலான’ ஈடுபாடு ஜனங்களுக்கு ஏற்பட்டது. அதற்குக் காரணம் மீடியாவின் சக்திதான்.”

“கார்கில் சண்டையின்போது எல்லைப் புறத்தில் நமது ராணுவத்தின் பாதுகாப்பு குறைவாக இருந்ததா?”

“பாதுகாப்பு குறைவாக இல்லை. சில இடங்களில் ராணுவம் இல்லை. கண்காணிப்பு இன்னும் நன்றாக நுணுக்கமாக இருந்திருக்க வேண்டும். சில காரணங்களால் இல்லை.

அதற்கான காரணங்கள் தெரிந்து விட்டது. என்ன தப்பு என்பதைக் கண்டுபிடித்து, எதைச் சரி செய்ய வேண்டுமோ, அதைச் செய்து கொண்டிருக்கிறோம். அதை விரிவாக வெளியே சொல்ல முடியாது.”

“பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸின் அணுகுமுறை எப்படி இருந்தது?”

“பெர்னாண்டஸ் ராணுவத்திற்கென்று அமைந்த ஒரு சிறப்பான அமைச்சர். ஜவான்களுடனும் சரி, அதிகாரிகளுடனும் சரி பிரமாதமாகப் பழகுவார்.

நாங்கள் சொல்வதை உன்னிப்பாகக் கேட்டு, ராணுவத்தின் தேவைகளைக் கேட்டுப் புரிந்துகொண்டு உடனுக்குடன் ‘ஆக்‌ஷன்’ எடுப்பார்.

நாற்பத்தி ஒரு வருஷமாகப் பார்த்த ராணுவ அமைச்சர்களில் நல்ல திறமையானவர் என்று இவரைச் சொல்ல முடியும். கார்கிலுக்கே அடிக்கடி அவர் வந்தார். அங்கு மலைகளில் பொருட்களைத் தூக்கிப்போக ‘ஸ்நோ ஸ்கூட்டர்’களை வாங்குவதற்கான தேவை இருந்தது.

அது இல்லாததால் பல சிரமங்கள். அவர் வந்ததும், ஆக்சிஜன் குறைவாக இருக்கிற இடத்தில் சுமையைத் தூக்கியபடி பனியில் – மலை உச்சிகளில் ராணுவ ஜவான்கள் நகர்வதில் இருக்கிற சிரமங்களைச் சொன்னோம்.

டெல்லி திரும்பிய கையோடு முதல் வேலையாக சுவீடனில் இருந்து ஸ்நோ ஸ்கூட்டர்களை வாங்க ஏற்பாடு செய்தார் பெர்னாண்டஸ்”.

“ஜெனரலாகப் பதவியேற்கும்போது எப்படி இருந்தது உங்களது உணர்வு?”
“நாற்பத்தியொரு வருடங்களாக ராணுவத்தில் இருக்கிறேன். யாருக்குத்தான் பெருமையாக இருக்காது. நான் பதவியேற்றதற்கு வாழ்த்துக்கூறி ஆயிரக்கணக்கான கடிதங்கள் வந்திருக்கின்றன.

எதிர்பார்ப்புகள் ஏராளமாக இருக்கின்றன. செய்ய வேண்டிய விஷயங்கள் என்ன என்பது தெளிவாகத் தெரியும். பதவியேற்றதும் காஷ்மீருக்கு இரண்டு தடவை போய் வந்து விட்டேன். வடகிழக்கு எல்லை மாநிலங்களுக்கும் போய் வந்தேன்.
சண்டை ஏதாவது வந்தால் அதை எப்படிச் சமாளிப்பது என்று தெளிவான கருத்து இருக்கிறது. அதற்காகப் பயிற்சி கொடுப்பதில் அதிகம் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறேன்.

கார்கில் சம்பவங்களையொட்டி சில அதிகாரிகள் மீது புகார்கள் எல்லாம் இருக்கின்றன. அதை எல்லாம் விசாரித்துச் சரி பண்ண வேண்டும். மொத்தத்தில் இந்த இரண்டு வருஷமும் ரொம்ப இன்ட்ரஸ்டிங்காகத்தான் இருக்கும் போலிருக்கிறது.

(சிரிக்கிறார்)

எவ்வளவு அருமையான பட்டாளம் நம்முடையது தெரியுமா? எவ்வளவோ தேசங்களுக்குப் போய் இருக்கிறேன். பல நாட்டு ராணுவங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

ஆனால் இதுபோல தொழில் சிரத்தை உள்ள ராணுவத்திற்குத் தலைமைப் பொறுப்பில் என்னை நியமித்திருப்பது பூர்வஜென்ம பாக்கியம்.

இந்தப் பொறுப்பான பதவிக்கு என்னைத் தகுதியாக்கிக் கொள்ள வேண்டும் என்கிற ஒரே எண்ணம்தான் மனதில் இருக்கிறது.”

“அணு ஆயுத எதிர்ப்பு பல நாடுகளில் வலியுறுத்தப்படும்போது அணுகுண்டு தயாரிப்பு இப்போதைக்கு இந்தியாவுக்கு அவசியமா?”

“அணுகுண்டு என்பதை அவசியமிருந்தால் உபயோகிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். அதனால் இந்தியாவுக்கான பாதுகாப்புப் பற்றி யாரும் கவலைப் படவேண்டியதில்லை.

அணுகுண்டு என்பது பழைய கால பிரம்மாஸ்திரம் மாதிரி பயங்கர ஆயுதம்தான். அதனால்தான் இந்தியா தனது அணு ஆயுதக் கொள்கையில் ‘நாங்கள் முதலில் பிரயோகிக்க மாட்டோம்’ என்று கூறியிருக்கிறது.

யாராவது அணு ஆயுதத்தை வைத்துக் கொண்டு வாலாட்டினால் அதற்குத் தக்க பதிலடி கொடுப்போம். நாங்கள் பதிலாக என்ன செய்யப் போகிறோம் என்பது எங்களுக்குத் தெளிவாகவும் திட்டவட்டமாகவும் தெரியும்.

ஆனால், எங்களைப் பொறுத்தவரை அணு ஆயுதத்தைப் பயன்படுத்தக்கூடிய வாய்ப்பு மிக மிகக் குறைவு. அணுகுண்டு ஒரு கேடயம் மாதிரிதான். ஆனால், இதை வைத்துக் கொண்டு ஒருவரையொருவர் பைத்தியக்காரத்தனமாக அழித்துக் கொள்வதில் என்ன பிரயோஜனம்”.

“இப்படியொரு பலத்தைக் காட்டியாக வேண்டிய தேவை இந்தியாவுக்கு இருக்கிறதா?”

“இருக்கிறது. நான் உங்களைக் கேட்கிறேன். நூறு கோடி ஜனங்களைக் கொண்ட ஒரு பெரிய நாடு, புழு மாதிரித் தரையில் ஊர்ந்து போக வேண்டுமா? அல்லது தலைநிமிர்ந்து நடக்க வேண்டுமா?

பாரதத்தின் குரல் கம்பீரமாக உலகம் முழுவதும் கேட்க வேண்டுமா? கூடாதா? ஆனால், இப்போது பலத்தைத்தான் மதிக்கிறார்கள். ஆகவே நமது ராணுவம் முன்பிருந்ததை விட பல மடங்கு பலமடைந்து கொண்டிருக்கிறது.

இன்னும் பத்து, பதினைந்து வருடங்களில் இந்திய ராணுவம் மற்ற தேசங்களில் உள்ள ராணுவத்தை விட பலமடைந்துவிடும். நம்மிடம் நவீன வசதிகள் ஏராளமாக இருக்கின்றன. எதையும் சாதிக்க முடியும்”.

“இரண்டு தேசங்களும் பொருளாதாரச் சேதத்தை ஏற்படுத்திக் கொண்டு இம்மாதிரிச் சண்டையில் இறங்க வேண்டுமா என்பது தானே அடிப்படையான வருத்தமான கேள்வி?”
“இரண்டு தேசங்களுமே சண்டையிடுவதால் இந்தியாவைப் பொறுத்தவரை 20 வருடங்கள் பொருளாதார முன்னேற்றத்தில் பின்தங்கி போகிறோம்.

இது இல்லை என்றால், 2020-ல் எந்த அளவுக்கு முன்னேற்றம் சாத்தியமோ அந்த அளவுக்கு முன்னேறி இருப்போம்.

பாகிஸ்தானைப் பொறுத்தவரை 40 வருடங்கள் பின் தங்கி விடுவார்கள். இது என்னுடைய சொந்த அனுமானம். ஆனால் ஒன்று, நமது நவீன ஆயுதங்கள் முழுக்க நமது சொந்த விஞ்ஞானிகளாலேயே வடிவமைக்கப்பட்டவை.

குறிப்பாக இந்தப் பெருமை டாக்டர்.அப்துல்கலாம் போன்ற திறமையுள்ள நம் நாட்டு விஞ்ஞானிகளையே சாரும்.

எந்த நாட்டிடமிருந்தும் ‘ப்ளுபிரண்ட்’டைத் திருடி உருவாக்கப்பட்டவை அல்ல. அது நாம் எல்லோரும் பெருமைப்பட வேண்டிய விஷயம். ” – தீர்க்கமான குரலில் சொல்கிறார் பத்மநாபன்.

– 2003 டிசம்பரில் வெளிவந்த ‘மணா’வின் ‘கனவின் பாதை’ நூலிலிருந்து…

You might also like