ஊர் சுற்றிக் குறிப்புகள்:
கோடிக்கணக்கான பட்ஜெட்டுடன் எடுக்கப்படும் நவீன டெக்னாலஜி படங்கள் கூட தயாரிப்பாளர்களைக் கடிக்கும்போது, நாற்பதைக் கடந்தவர்களின் நினைவுகளில் தங்கியிருக்கிற ‘நாடோடி மன்னன்’, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘வசந்த மாளிகை’ ரகப் படங்கள் எல்லாம் மறு ரிலீஸாகி ஓரளவு கூட்டத்துடன் அரங்கு நிறைவது ஆச்சர்யம்.
பழைய படங்களிலிருந்து அங்கங்கே சுட்டு பாலிஷ் போட்டு புதுப்படங்கள் என்று வரும்போது – நேரடியாகப் பழைய படங்கள் வருவதும், வரவேற்புப் பெறுவதும் மாறுதல்தான்.
ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ஈஸ்ட்மென் வண்ணங்கள் பளிச்சென்று தெரிகிறபடி அந்தக்காலப் பாணி தேடிவரும் காதல்; அதை மறுத்து வானைப் பார்த்தபடி பாடும் ‘ஓடும் மேகங்களே’ பாட்டு; மென்மையான கீச்சுக் குரலில் பி.சுசீலாவின் ‘உன்னை நான்’ போன்ற பாடல்கள்; தடிமனான சகாக்கள் கப்பலில் அங்கங்கே தொற்றிக் கொண்டிருக்கப் பாடப்படும் ‘அதோ அந்தப் பறவை போல’ பாடல்.
சுடுகாட்டில் மண்டையோட்டைப் பார்த்தலும் படு ஒல்லியான நாகேஷின் பளீர் வசனங்கள்.
இன்னும் அழகான கடலோரக் காட்சிகள், பயன்படுத்தப்பட்டிருக்கிற ஏராளமான நடிகர்கள். அவர்களின் பால்யகாலப் பதிவை மறுபிரதியெடுத்த உணர்வை உண்டாக்குவது சற்று வயதான ரசிகப் பெருமக்கள் திரள்வதற்காக காரணங்களில் ஒன்றாக இருக்கலாம்.
தமிழில் இதே மாதிரியான படங்கள் தயாராகிக் கொண்டிருந்த அதே காலகட்டத்தில் மலையாளத்தில் தகழியின் செம்மீன் கலரில் தயாரானது.
தமிழிலோ ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘காதலிக்க நேரமில்லை’ பிறகு ‘தில்லானா மோகனாம்பாள்’ போன்ற படங்கள். ‘வித்தியாசமான’ சினிமா ரசனையாளர்கள் இதற்குச் சலித்துக் கொள்ளலாம்.
நல்ல சினிமா – தரமான சினிமா என்கிற வரையறைகளுக்குள் இந்தப் படங்கள் அடங்குகின்றனவோ இல்லையோ. மனதில் பதிந்திருக்கிற சில புகைமூட்டமான நினைவுகளுக்கு இணையான உணர்வு இந்தப் படங்களிலிருந்து கிடைப்பது தான். இவை தொடர்ந்து கவனிக்கப்படுவதற்கு ஒரு காரணமோ?
எதிரும் புதிருமாக காரசாரமான அரசியல் நடத்தும் இந்நாள் முதல்வர் கலைஞர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருவருமே மறக்க முடியாத படமாகக் குறிப்பிட்டிருப்பது ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தை.
என்னவொரு அபூர்வமான ஒற்றுமை?
– நன்றி: புதிய பார்வை ஜூன் 16-30, 2007.