அதிமுக அலுவலக சாவி: பழனிசாமியிடம் ஒப்படைக்கவும்!

– சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

சென்னையில் ஜூலை 11-ம் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடக்கும்போது ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகம் முன் பழனிசாமி தரப்பினருக்கும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் நடந்தது.

அதைத் தொடர்ந்து கட்சி தலைமை அலுவலகத்துக்கு ‘சீல்’ வைத்து வருவாய் கோட்ட அதிகாரி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து பழனிசாமியும் பன்னீர்செல்வமும் தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தன. முன்னதாக ஜூலை 11ம் தேதி சம்பவம் தொடர்பாக காவல்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ் திலக் ஆஜராகி வருவாய் கோட்ட அதிகாரியின் அறிக்கை; போலீஸ் தரப்பு அறிக்கை மற்றும் புகைப்படம் வீடியோ பதிவுகளை தாக்கல் செய்தார்.

பழனிசாமி சார்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண்; பன்னீர்செல்வம் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் ரமேஷ் மற்றும் அரவிந்த் பாண்டியன்; காவல்துறை தரப்பில் வழக்கறிஞர் ராஜ் திலக் ஆகியோர் வாதாடினர்.

வழக்கறிஞர்களின் வாதங்கள் முடிந்ததை அடுத்து இவ்வழக்கின் உத்தரவை தேதி குறிப்பிடாமல் நீதிபதி சதீஷ்குமார் தள்ளி வைத்திருந்தார்.

இவ்வழக்கில் இன்று பிற்பகல் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “சீல் வைக்கப்பட்ட அதிமுக அலுவலக சாவியை பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்க வேண்டும்.

ஒரு மாதத்திற்கு தொண்டர்கள், நிர்வாகிகள் யாரையும் அலுவலகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது. அதிமுக அலுவலகத்திற்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும்” என நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

விசாரணையின் முடிவில், சென்னையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் திருமாறன், “அலுவலக உரிமை தொடர்பாக ஆராயாமல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆர்.டி.ஓ உத்தரவை நேரடியாக ரத்து செய்தது தவறு. உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியும்” அவர் கூறினார்.

You might also like