குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் பணி விறுவிறு!

குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் அடுத்த மாதம் 10-ம் தேதி முடிகிறது. அதற்கு முன்பாக புதிய குடியரசுத் துணைத் தலைவர் தேர்வு செய்தாக வேண்டும்.

இதற்கான தேர்தல் அடுத்த மாதம் 6-ம் தேதி நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 5-ம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி நாள் ஆகும். வேட்பு மனுக்கள் பரிசீலனை 20-ம் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கு 22-ம் தேதி கடைசி நாளாகும்.

இந்தத் தேர்தலில் மத்தியில் ஆளும் பா.ஜ.க. கூட்டணி சார்பில், மேற்குவங்க மாநில ஆளுநர் ஜெகதீப் தன்கர் போட்டியிடுகிறார்.

எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மார்கரெட் ஆல்வா போட்டியிடுகிறார்.

இந்நிலையில், குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதால் ஜெக்தீப் தன்கர் தனது ஆளுநர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக் கொண்டார்.

ஜெக்தீப் தன்கர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து மணிப்பூர் ஆளுநர் இல.கணேசனுக்கு மேற்குவங்க ஆளுநர் பணியையும் கவனிக்கக் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் ஜெகதீப் தங்கர் இன்று மதியம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார்.

You might also like