பெண் குழந்தைகள் பாலியல் அத்துமீறல்களுக்கு ஆளாவது தினசரிச் செய்திகளாக மாறிவிட்ட சூழலில், நம் சுற்றத்தில், நம்மில் அப்படியொரு பாதிப்பு ஏற்படும்போது எவ்வாறு எதிர்கொள்வோம்?
பாதிப்பை ஏற்படுத்தியவராகவும் பாதிப்புக்கு உள்ளானவராகவும் ஆகும் பட்சத்தில் நம் வாழ்வு எப்படியெல்லாம் மாறும்?
இந்த கேள்விக்கான பதிலாக விரிகிறது புதுமுக இயக்குனர் கௌதம் ராமசந்திரன் இயக்கத்தில் வெளியாகியிருக்கிற ‘கார்கி’.
குற்றமும் தண்டனையும்!
அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் பத்து வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்கு ஆளாகிறார். அதில் சம்பந்தப்பட்ட 4 வெளிமாநிலத் தொழிலாளர்களைக் கைது செய்கின்றனர் போலீசார்.
இந்த வழக்கில் 5வது குற்றவாளியாக அக்குடியிருப்பில் செக்யூரிட்டியாக வேலை செய்யும் பிரம்மானந்தம் (ஆர்.எஸ்.சிவாஜி) சேர்க்கப்படுகிறார்.
ஊடகங்களில் பிரம்மானந்தம் குறித்த அடையாளம் வெளியாக, அவரது குடும்பமே வெலவெலத்துப் போகிறது. ஊரே ஒன்று சேர்ந்து அவர்களை ஒதுக்கி வைத்தாற் போலாகிறது.
தன் தந்தை ஒருபோதும் இத்தகைய செயல்களில் ஈடுபடமாட்டார் என்று திடமாக நம்புகிறார் பிரம்மானந்தத்தின் மூத்த மகள் கார்கி (சாய் பல்லவி).
தமக்குத் தெரிந்த ஒரு வழக்கறிஞரின் (ஜெயப்பிரகாஷ்) உதவியை நாடுகிறார்.
வழக்கறிஞர்கள் சங்கத்தில் தடை போடப்பட்டதால் தன்னால் உதவ முடியாது என்கிறார் அவர்.
அந்த நேரத்தில், அவ்வழக்கறிஞரின் உதவியாளராக இருக்கும் இந்திரன்ஸ் (காளி வெங்கட்) கார்கிக்கு உதவ முன்வருகிறார்.
நன்கு வாதாடும் வழக்கறிஞர்களே கையாளத் தயங்குகிற அவ்வழக்கை தனது முதல் முயற்சியாக எடுத்துக்கொள்கிறார்.
வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெறும்போது, கார்கியின் தந்தை மீது உறுதிபடக் குற்றம் சுமத்த முடியாத நிலை உருவாகிறது.
அதன்பின் என்ன நடந்தது? பிரம்மானந்தத்தைக் கார்கி காப்பாற்றினாரா என்று சொல்கிறது மிதிப்பாதி.
ஒரு குற்றம் நிகழ்ந்தபிறகு குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது வெறுப்பைக் கக்குகிறது சமூகம்.
ஒருவேளை அந்த நபர் அல்லது நபர்கள் நிரபராதிகளாக இருந்தால், அவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தினர் மீதும் சமூகம் இழைப்பது அநீதி ஆகாதா என்ற கேள்வியைச் சுற்றியே திரைக்கதை பின்னப்பட்டுள்ளது.
அதற்கான பதில் தெரியவரும் இடமாக ‘கிளைமேக்ஸ்’ அமைக்கப்பட்டு, அங்கிருந்து மீண்டும் ஒருமுறை ஒட்டுமொத்த திரைக்கதையையும் அசைபோட வைக்கிறார் இயக்குனர் கௌதம் ராமசந்திரன்.
அதனாலேயே, மிகமுக்கியமான திரைப்படமாக உருவெடுத்திருக்கிறது ‘கார்கி’.
குற்றத்திற்கான தண்டனை என்பது குற்றவாளியோ அல்லது அவரது குடும்பத்தினரோ துன்புறுத்தலுக்கு ஆளாவதல்ல; மாறாக, இன்னொரு முறை அக்குற்றம் நிகழாத வண்ணம் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பக்கபலமாக குற்றவாளியின் குடும்பத்தினரே மாறுவதுதான் என்று சொல்கிறது.
அபாரமான ஆக்கம்!
நான்கே வரிகளில் சொல்லிவிடக்கூடிய கதை. அதனை அங்குலம் அங்குலமாகப் பார்வையாளர்கள் புரிந்துகொள்ளும் வகையில் காட்சிகளை அமைத்ததில் ‘சபாஷ்’ சொல்ல வைக்கிறது கார்கி குழு.
மனிதத் தலைகளும் களப் பொருட்களும் செயற்கை வெளிச்சமும் பெரும்பரப்பும் கேமிராவின் பார்வைக்குள் சிக்க வேண்டுமென்று எண்ணாமல், மிக எளிமையாக ‘குறும்பட’ பாணியில் நகர்கின்றன காட்சிகள்.
அவற்றினூடே சுமார் ஒரு டஜன் பாத்திரங்களை உலவவிடுகிறார் இயக்குனர்.
குறைவான வசனங்கள், கொஞ்சமும் ஆபாசம் எட்டிப்பார்க்காத காட்சியமைப்புகள் என்று திரைக்கதை நகர்ந்தாலும், ஒரு கதை எந்த இடத்தில் பார்வையாளர்களின் மனதைத் தைக்க வேண்டுமோ அதனை மிகச்சரியாக நிகழ்த்தியிருக்கிறது ‘கார்கி’.
அந்த வகையில் மிகச்சிறப்பாக ஆக்கப்பட்டிருக்கிறது.
திரைக்கதை வசனத்தைக் கௌதம் ராமசந்திரனுடன் இணைந்து எழுதியிருக்கிறார் ஹரிஹரன் ராஜு. பிரம்மானந்தம் என்பவர் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகளை உடைப்பதற்கான எவ்வித ஆதாரங்களும் இல்லை என்ற நிலையில் முன்பாதி காட்சிகள் நகர்கின்றன.
ஆனால், அவை ஒவ்வொன்றுமே ‘கிளைமேக்ஸில்’ வேறொரு அர்த்தத்தை உணர வைக்கின்றன. பின்பாதி முழுக்க கிடைத்த ஆதாரங்களை வைத்துக்கொண்டு பிரம்மானந்தம் குற்றவாளியல்ல என்று நிரூபிப்பதை நோக்கி நகர்கிறது.
அந்த கணத்தில் வரும் ‘ட்விஸ்ட்’ கண்டிப்பாக எவருமே எதிர்பாராதது. போலவே, படத்தின் முடிவும் கூட.
’இப்பல்லாம் எம் பொண்ணு என்னை அப்பாவை பார்க்குறதில்ல ஆம்பளையா தான் பார்க்குறா’ என்று பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையும், ‘ஒரு பொண்ணோட வலி என்னன்னும் தெரியும், ஒரு ஆம்பளையோட திமிர் எங்க இருக்குன்னும் தெரியும்,
அதனால இந்த கேஸை விசாரிக்க பெஸ்ட் பெர்சன் நான் தான்’ என்று நீதிபதியாக இருக்கும் திருநங்கை ஒருவரும் பேசுவதாக எழுதப்பட்ட வசனங்கள் ஈட்டியாய் நம் நெஞ்சை தைக்கின்றன.
தன் தந்தை குற்றமற்றவர் என்று கார்கி நம்புவதில் இருந்து நேர்கோடாகத் திரைக்கதை பயணிக்க, சிறுவயதில் கார்கி எதிர்கொண்ட பாலியல் அத்துமீறலொன்று கிளைக்கதையாக இடையிடையே சொல்லப்படுகிறது.
மையக்கதைக்கும் அந்த கிளைக்கதைக்குமான தொடர்பு இழை என்னவென்பதை பார்வையாளர்களே உணர வேண்டுமென்று இயக்குனர் விட்டிருப்பது அற்புதம். அதனாலேயே, அற்புதமான கதைசொல்லி எனும் பாராட்டுக்கு உரியவராகிறார் கௌதம் ராமசந்திரன்.
ஒளிப்பதிவைக் கையாண்டிருக்கும் ஷ்ரையந்தி, பிரேம்கிருஷ்ணா ஆக்காட்டூ இருவருமே அற்புதமான பங்களிப்பைத் தந்திருக்கின்றனர்.
படத்தொகுப்பாளர் ஷபீக் முகம்மதுவும் பார்வையாளர்களின் கண்களையும் மனதையும் புண்படுத்தாத வகையில் காட்சிகளைக் கோர்த்திருக்கிறார்.
இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவுக்கு ‘கார்கி’ மிக முக்கியமான படம். உணர்வுப்பூர்வமான காட்சிகளில் அவரது பின்னணி இசை தனியிடம் பிடிக்கிறது.
மிகச்சரியாக அது பார்வையாளர்களைத் திரைக்குள் இழுத்துச் செல்கிறது. ‘தூவி தூவி’, ‘மாசறு பொன்னே’ பாடல்களில் கவனம் ஈர்க்கிறார் பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா.
சாய் பல்லவிக்கு ஜே!
ஒரு மாணவி அவசர அவசரமாக தேர்வறைக்குச் செல்வதில் இருந்து ‘கார்கி’ தொடங்குகிறது. அடுத்த நொடியே கார்கியாக அறிமுகமாகிறார் சாய் பல்லவி.
அங்கு தொடங்கி படம் முழுக்க அவரது பிம்பம் தான் நிறைந்திருக்கிறது. அதில்தான் எத்தனையெத்தனை மாற்றங்கள். எப்பேர்ப்பட்ட உணர்வுப் பிரவாகம்!
இந்த பாத்திரத்தில் வேறு எந்த நடிகையும் நடிக்கலாம். சத்தியமாக, சாய் பல்லவியிடம் தென்படும் அந்த எளிமையை மட்டும் எவராலும் திரையில் பிரதிபலிக்க முடியாது.
இதையே, அவரது நடிப்புக்கான பாராட்டாகவும் எடுத்துக்கொள்ளலாம். அதனால் படம் முடிந்தபிறகு ‘சாய் பல்லவிக்கு ஜே!’ என்று சொல்லத் தோன்றுகிறது.
காளி வெங்கட், இந்த படத்தில் ஒரு ஹீரோ போலவே வலம் வருகிறார். அரசு வழக்கறிஞராக வரும் கவிதாலயா கிருஷ்ணனுடன் அவர் மோதுமிடங்கள் தியேட்டரில் கைத்தட்டலைப் பெறுகின்றன.
ஐஸ்வர்யா லட்சுமி ஒரு வெற்றிகரமான நாயகியாக இருந்தபோதும் மிகச்சிறு பாத்திரத்தில் தோன்றியிருப்பது அழகு. அவர், இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் என்பது கூடுதல் சிறப்பு.
ஆர்.எஸ்.சிவாஜி, லிவிங்க்ஸ்டன், ஜெயப்பிரகாஷ், பிகில் சிவா, ராஜலட்சுமி, எஸ்.ஐ. பென்னிக்ஸ் ஆக பிரதாப், நீதிபதியாக எஸ்.சுதா உட்பட அனைவரும் அளவெடுத்தாற்போல திரையில் தங்களது பங்களிப்பைத் தந்திருக்கின்றனர். நக்கலைட்ஸ் தனம் இதில் வெறுமனே வந்து போயிருக்கிறார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையாக வரும் சரவணனின் நடிப்பு படம் பார்ப்பவர்களின் கண்களில் நிச்சயம் கண்ணீரை வரவழைக்கும்.
சொல்லப்படாத போதனை!
திரையரங்கில் இருக்கும்போது மட்டுமல்லாமல், அதைவிட்டு வெளியேறியபின்னும் நம்முள் தாக்கத்தை ஏற்படுத்தும் திரைப்படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
பாலியல் அத்துமீறல்களில் இருந்து ஒரு பெண் குழந்தையை விடுவிக்க வேண்டியது அவளது தந்தையோ தாயோ சுற்றியிருக்கும் சமூகமோ அல்ல; அந்த குழந்தை மட்டுமே அதற்குப் பொறுப்பு.
பெண் குழந்தையைப் பெற்றதாலேயே ஒரு ஆணுக்கு பெண்மையைக் கனிவுடன் நடத்த வேண்டுமென்ற எண்ணம் வந்துவிடாது. மிக முக்கியமாக, தம் வீட்டுப் பெண்களுக்கான கட்டுப்பாடுகளை விதிப்பவர்களில் பலர் பிற பெண்களை போகப்பொருளாகவே பார்ப்பார்கள் என்று பல பாடங்களை உணர்த்துகிறது ‘கார்கி’.
இதனை வசனங்களில் வெளிப்படுத்தாமல் காட்சிகளின் வழியே உணரச் செய்திருப்பது ஒரு சிறந்த திரைப்படத்திற்கான இலக்கணம்! கௌதம் ராமசந்திரன் குழுவினருக்கு தாராளமாக ஒரு பூங்கொத்தை ‘பார்சல்’ செய்யலாம்!
-உதய் பாடகலிங்கம்