ராம் கோபால் வர்மாவின் ‘பொண்ணு’!

பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் இந்தியாவின் முதல் தற்காப்புக் கலை திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘Ladki’.

நாயகியை மையமாக வைத்து உருவாகும் இப்படம் தமிழில் ‘பொண்ணு’ என்ற பெயரில் வெளியாகிறது. தற்காப்புக் கலை வீராங்கனை பூஜா பலேகர் முதன்மை பாத்திரத்தில், சண்டை காட்சிகளில் அசத்தியுள்ளார்.

விரைவில் வெளியாகவுள்ள படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. அதில் பேசிய இயக்குநர் ராம் கோபால் வர்மா, “எனக்கு மிகவும் சவாலான மனதிற்குப் பிடித்த படம் இது.

கல்லூரி நாட்களில் இருந்தே புரூஸ் லீ என் இதயத்திற்கு மிக நெருக்கமாக இருந்துள்ளார். நான் தொடர்ந்து அவர் படங்களை பார்த்து வந்திருக்கிறேன்.

நான் இயக்குநராக வந்த பிறகு மார்ஷியல் ஆர்ட்ஸ் படங்கள் எடுக்கலாம் என நினைத்தேன். ஆனால் அது தள்ளிப்போனது.

இறுதியாக இந்தப் படம் எடுக்க நினைத்தபோது புரூஸ்லீயின் உருவம் என் மனதில் வந்துபோனது. அவர் மிக ஒல்லியான உருவம் கொண்டவர்.

ஆனால் திரையில் அவர் தரும் மேஜிக் அற்புதமானது.

அதேநேரம், ஒரு பெண்ணை வைத்து எடுத்தால் என்ன என எனக்குத் தோன்றியது. பலரை தேடி கடைசியாக பூஜா பலேகர் குறித்து கேள்விப்பட்டு சந்தித்தேன். அவரின் திறமைகள் பார்த்து வியந்தேன்.

அவரின் வீடியோவை மார்ஷியல் ஆர்ட்ஸ் பிறப்பிடமான சைனாவின் ஒரு கம்பெனியிடம் காட்டினேன். அவர்கள் ஆச்சர்யப்பட்டார்கள். பிறகு இந்தப் படத்தை அவர்களுடன் இணைந்து தயாரித்தேன்.

அனைத்து மொழிகளிலும் இந்தப்படத்தை ஒரே நேரத்தில் அனைத்து மொழியிலும் வெளியிட வேண்டும் என திட்டமிட்டோம்.

ஹைதராபாத்தில் புரூஸ் லியின் எண்டர் தி டிராகன் திரைப்படம் பார்க்க என்னிடம் பணமில்லை. ஆனால் இப்போது என்னுடைய மார்ஷியல் ஆர்ட்ஸ் படம் அதே தியேட்டரில் வெளியாகவுள்ளது மகிழ்ச்சி.

இது என கனவு இப்போது நனவாகியிருப்பது சந்தோஷம்” என்று உற்சாகத்துடன் பேசினார்.

நடிகை பூஜா பலேகர், “ராம் கோபால் வர்மா சார் படத்தில் நான் நடித்தது, எனக்கு கனவு போல் உள்ளது. நான் ராம் கோபால் வர்மா சாரின் ரசிகை.

இன்று அவரது இயக்கத்தில் ஒரு தற்காப்பு கலை படத்தில் நடிப்பதில் பெருமை அடைகிறேன். எனக்கு நடிப்பில் முன் அனுபவம் எதுவும் இல்லை. நான் புரூஸ்லி ரசிகை. உங்களுக்கு சிறந்த அனுபவமாக இந்தப் படம் இருக்கும்” என்றார்.

  • பா.மகிழ்மதி
You might also like