இதற்கு முன்பு பலமுறை குடியரசுத் தலைவர் தேர்தல்கள் நடந்துள்ளன. எதிர்க்கட்சி வேட்பாளர்கள் ஓரிருவர், கட்சி மாறி ஆளுங்கட்சிக்கு வாக்களித்த சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன.
இந்த முறை சில எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக ஆளுங்கட்சிக்கு சாதகமான முடிவை எடுத்துள்ள விநோதம் அரங்கேறியுள்ளது.
இதன் சூத்திரதாரி பிரதமர் மோடி.
குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆளும் பாஜக கூட்டணி வேட்பாளராக திரவுபதி முர்மு நிறுத்தப்பட்டுள்ளார்.
அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்கா போட்டியிடுகிறார். ஐஏஎஸ் அதிகாரியான இவர், பின்னர் பாஜகவில் சேர்ந்து அரசியல் பயணத்தைத் தொடங்கினார்.
மோடியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பாஜகவில் இருந்து விலகினார்.
இப்போது யஷ்வந்த் சின்கா – திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.
பச்சைக்கொடி காட்டிய பட்நாயக்
பாஜக கூட்டணி வேட்பாளர் முர்மு – ஒடிசாவில் பிறந்தவர். பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர்.
அந்த வகுப்பினர் அதிகம் வாழும் ஜார்கண்ட் மாநில ஆளுநராக பதவி வகித்தவர்.
தங்கள் ஊர் பெண்மணி என்பதால், முர்மு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அடுத்த நிமிடமே, அவருக்கு ஆதரவு தெரிவித்தார் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்.
பிஜு ஜனதா தளம் தலைவரான இவரிடம் பாஜக முறையாக ஆதரவு கோரவில்லை.
எனினும் முதல் ஆளாக எதிர்க்கட்சிகள் வரிசையில் இருந்து ஆதரவுக்கரம் நீட்டினார் நவீன் பட்நாயக்.
அடுத்த நாளே – பாஜக கூட்டணியில் இல்லாத ஆந்திர முதல்வர் ஜெகன் மோகனும், முர்முவுக்கு ஓகே சொன்னார்.
திடீர் திருப்பங்கள்
மகாராஷ்டிராவில் சிவசேனா இரண்டாக உடைந்த நிலையில், ஒரிஜினல் சிவசேனா கட்சியின் தலைவராக இருப்பவர் உத்தவ் தாக்கரே.
இன்றைக்கும் அவரது கட்சி காங்கிரஸ் கூட்டணியில் தான் உள்ளது. யஷ்வந்த் சின்காவுக்கு ஆதரவான கூட்டங்களில் இவரது கட்சி பங்கேற்றுள்ளது.
இந்நிலையில் திடீர் திருப்பமாக, “நாங்கள் முர்முவை ஆதரிக்கிறோம்’’ என அறிவித்துள்ளார், உத்தவ் தாக்கரே. அவரிடமும் பாஜக ஆதரவு கேட்கவில்லை.
சிவசேனா கட்சியின் பெரும்பான்மை எம்.பி.க்கள் நிர்ப்பந்தம் காரணமாக, உத்தவ் இந்த முடிவை மேற்கொண்டார்.
ஆடிப்போன காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த அதிர்ச்சி ஜார்கண்டில் இருந்து வந்து சேர்ந்தது.
அந்த மாநிலத்தில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவும், காங்கிரசும் இணைந்து கூட்டணி ஆட்சியை நடத்துகிறது.
இந்த நிலையில், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியும் முர்முவை ஆதரிக்கப் போவதாக அறிவித்து விட்டது.
யஷ்வந்த் சின்கா ஆதரவு கூட்டங்களில் தொடர்ந்து பங்கேற்று வந்த ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவும், பாஜகவை ஆதரிப்பது, எதிர்க்கட்சி தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நாளை மறுநாள் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்னும் என்னென்ன கூத்துக்கள் அரங்கேறப் போகிறது என்பது தெரியவில்லை.
– பி.எம்.எம்.