அதிமுகவில் வலுக்கும் அதிகாரப் போட்டி!

வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலராக எடப்பாடி பழனிசாமி தோ்ந்தெடுக்கப்பட்டார்.

அதைத் தொடா்ந்து, அதிமுக பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசனை நியமித்து எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். ஓ.பன்னீா்செல்வம் இதை ஏற்க மறுத்து வருகிறார்.

இந்நிலையில் அதிமுகவுக்காக உள்ள வங்கிக் கணக்குகளை நிர்வகிப்பது குறித்து இருவருக்கும் இடையே போட்டி ஏற்பட்டிருக்கிறது.

பொதுக்குழுவில் தாக்கல் செய்யப்பட்ட வரவு செலவு கணக்கு விவரத்தின்படி வங்கிகளில் நிரந்தர வைப்புத் தொகையாக ரூ.244 கோடி உள்ளது. அதிமுகவின் வங்கிக் கணக்குகளை பொருளாளா்தான் நிர்வகிக்க முடியும்.

அதன்படி, பொருளாளராக இருந்த ஓ.பன்னீா்செல்வம் நிர்வகித்து வந்தார். ஆனால், தற்போது அதிமுக பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுகவின் கணக்குகள் உள்ள வங்கிகளுக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், கட்சியின் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார் என்றும், அவருக்கு வங்கிக் கணக்குகளை நிர்வகிக்கும் அதிகாரத்தை அளிக்க வேண்டும் என்றும் எழுதியிருந்தார்.

இதனிடையே, ஓ.பன்னீா்செல்வமும் வங்கிகளுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், “அதிமுக பொருளாளராக நானே நீடித்து வருகிறேன் என்றும், அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் செல்லாது.

அதனால், எடப்பாடி பழனிசாமி தரப்பில் அளிக்கப்பட்டுள்ள கடிதத்தின் சாராம்சத்தை ஏற்கக் கூடாது” என்று எழுதியுள்ளார்.

You might also like