எந்தத் தேர்தலும் நெருங்காத நிலையில் இந்தச் சமயத்தில் எடப்பாடி பழனிசாமி ஏன் இவ்வளவு தூரத்திற்கு ஆட்களை வளைத்துப் போட்டு, நீதிமன்றத்திற்குப் போய்ப் பொதுக்குழுவை இரு தடவைகள் கூட்டியிருக்கிறார்?
-அந்த அளவுக்கு அவருக்கு என்ன நெருக்கடிகள் வந்துவிட்டன?
இந்தக் கேள்வி பலருக்கும் எழுந்திருக்கலாம்.
ஒருவிதத்தில் முன்னாள் எம்.பி.யான மைத்ரேயன் சொன்ன மாதிரி “இணைப்பு நடந்திருக்கிறதே ஒழிய, மனங்கள் இணையவில்லை” என்பது தான் யதார்த்தம்.
சரி.. சட்டென்று எதனால் பொதுக்குழு முடிவுக்கு வந்திருக்கிறார் எடப்பாடி?
அ.தி.மு.க.வில் யாருக்கு ராஜ்யசபா சீட் வழங்குவதில் தனக்குப் போதுமான சுதந்திரம் இல்லை என்பது ஒரு காரணமாக இருக்கலமாம். ஓ.பி.எஸ்.ஸின் மகன் ஆளும்கட்சியின் முக்கியப் பிரமுகர் ஒருவரைச் சந்தித்துப் பேசியிருக்கிறார் என்ற தகவல் வெளியானது இன்னொரு காரணமாக இருக்கலாம்.
இதைவிட முக்கியமான காரணம் – கோடநாடு வழக்கு விசாரணை நெருங்கிக் கொண்டிருப்பதும், தனக்கு வேண்டியவர்கள் வரை விசாரணை வளையத்திற்குள் வந்துவிட்டார்கள் என்பதால் எந்தச் சமயத்திலும் அடுத்த நெருக்கடி தன்னை நோக்கி வரலாம் என்பதை அவர் உணர்ந்திருக்கலாம்.
அதனால் தன்னைக் கட்சி ரீதியாகப் பலப்படுத்திக் கொள்வது சரியாக இருக்கும் என்று நினைத்திருக்க வாய்ப்பிருக்கிறது என்றாலும், சட்டரீதியாக வழக்கில் தீர்ப்பு வெளிவந்து அ.தி.மு.க.வில் யாராவது சிறைக்குப் போகும்போது, தொண்டர்கள் நரப்பில் அதிகபட்சம் ஓரிரு நாட்கள் எதிர்ப்பு எழுந்து அடங்கிவிடுவதைப் பலரும் அறிந்தே வைத்திருக்கிறார்கள்.
கட்சிரீதியிலும், வழக்கு விசாரணை வளையம் நெருங்குவதற்குள் தன்னைக் குறைந்தபட்சம் தற்காத்துக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பாகவும் பொதுக்குழு என்கிற அஸ்திரத்தைப் பெரும் செலவுக்கிடையில் அவர் கையில் எடுத்திருக்கவே வாய்ப்புகள் அதிகம்.
தன்னைச் சுற்றி இருப்பவர்களின் விசுவாசம் மிகவும் தற்காலிகமானது என்பதையும் அவர் நன்றாகவே உணர்ந்திருப்பார்.
பொதுக்குழுவில் அவர் காட்டிய கவனத்தை அ.தி.மு.க தலைமை அலுவலகத்தைக் காப்பாற்றுவதில் அவர் காட்டவில்லை.
காவல்துறையில் புகார்களைக் கொடுத்திருந்தாலும் கூட, இந்த அளவுக்கு ஓ.பி.எஸ் தனது ஆதரவாளர்களுடன் அதிரடியாக நுழைவார் என்பதை எடப்பாடி எதிர்பார்த்திருக்க மாட்டார்.
ஆனால் இன்றைக்குப் பொதுக்குழு என்கிற பெயரில் தனது பிரத்யேகச் செல்வாக்கினால் எடப்பாடி தனக்குப் பெரும்பாலான ஆதரவு இருப்பதான தோற்றத்தைக் காட்டியிருந்தாலும், அது நெல்லிக்காய் மூட்டை மாதிரி தான் என்பதையும் அவர் உணர்ந்தே இருப்பார்.
இன்றைக்கு உடனிருப்பவர்கள் காட்டும் ‘பாசம்’ எவ்வளவு குறுகிய கால மதிப்புடையது என்பதும், எது அவர்களை நிழல் மாதிரி தன்னிடம் ஒதுங்க வைத்திருக்கிறது என்பதும் அவருக்குத் தெரியாதா?
பொதுக்குழு மேடையிலேயே கே.பி.முனுசாமிக்கும், சி.வி.சண்மூகத்திற்கும் இடையில் நிகழ்ந்த வாக்குவாதம் போல, இனியும் பல முரண்பாடுகளைச் சமாளித்தாக வேண்டிய கட்டாயம் அவருக்கு இருக்கிறது.
அதே சமயம் பொதுக்குழுவில் எடப்பாடி பேசிய பேச்சு அவருடைய மனநிலையின் தீவிரத்தைப் பிரதிபலித்திருக்கிறது அல்லது அம்பலப்படுத்தியிருக்கிறது.
தி.மு.க தலைமையிலான ஆட்சி தன்னை மிக முக்கியமான வழக்கில் நெருங்கிக் கொண்டிருப்பதை உள்ளூர உணர்ந்த ஒருவர் “பழைய பழனிசாமின்னு நினைச்சீங்களா?” என்று முதல்வர் ஸ்டாலினுக்குச் சவால் விடுவாரா? தன்னை நெருங்கிக் கொண்டிருக்கும் வலையில் தானே முந்திக் கொண்டு தன்னுடைய பேச்சின் மூலம் சிக்கிக் கொள்வாரா?
தனக்கு முன்னால் திரளான நிர்வாகிகளும், தொண்டர்களும் பக்க பலமாக இருக்கிறார்கள் என்கிற மனநிலை தான் இப்படிப் பேச வைத்திருக்கக் கூடும்.
ஆனால் ஒரு கிரிமினல் வழக்கு நெருங்கிச் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் பட்சத்தில் இந்தக் கூட்டத்தில் எத்தனை பேர் இவருக்கு ஆதரவாய் நிற்பார்கள்?
நிலைமை இப்படி இருக்கும் போது, கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கொண்டு அவர் சவாலான பேச்சைக் கல் மாதிரி விட்டெறியலாமா?
இம்மாதிரியான பேச்சுகள் தி.மு.க. இந்த வழக்கில் காட்டி வந்த நிதானத்தைக் குலைத்து, சட்டரீதியான நடவடிக்கையைத் துரிதப்படுத்தவே உதவும்.
எப்படியோ அ.தி.மு.க நீதிமன்றம், தேர்தல் ஆணையம் என்று பல அடுக்குகளைத் தாண்டி ஒரு சமநிலைக்கு வர சற்றுக் கால தாமதம் ஆகலாம். காலத் தேவைக்கேற்றபடி தலைமையில் மாற்றங்கள் கூட நடக்கலாம்.
அ.தி.மு.க.வுக்கு இது ஒரு ‘சுய பரிசோதனைக் காலம்’!
-யூகி
*