கடந்த 2019-ம் ஆண்டு ஐ.நா. வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி, இந்தியாவின் மக்கள் தொகை 137 கோடி ஆகும். சீனாவின் மக்கள்தொகை 143 கோடி.
இருப்பினும், 2050-ம் ஆண்டுக்குள் இந்திய மக்கள் தொகையில் 27 கோடியே 30 லட்சம் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும், 2027-ம் ஆண்டுக்குள் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா மிஞ்சிவிடும் என்றும் ஐ.நா. அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.
ஆனால், ஐ.நா. கணித்த காலத்துக்கு முன்பே சீனாவை இந்தியா மிஞ்சிவிடும் என்று சீன மக்கள்தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
10 ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்பட்ட சீன மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்கள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன.
அதன்படி, சீன மக்கள்தொகை 141 கோடியே 18 லட்சம். அடுத்த ஆண்டு இது மேலும் குறையும் என்று கருதப்படுகிறது.
மக்கள்தொகை சரிவால், தொழிலாளர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்றும், நுகர்வு விகிதம் குறைந்து பொருளாதாரம் பாதிக்கப்படும் என்றும் அச்சம் எழுந்துள்ளது.
சீனாவில், வரும் ஆண்டுகளில் பிறப்பு விகிதம் மேலும் குறையும் என்றும், இந்தியாவில் பிறப்பு விகிதம் அதிகரிக்கும் என்றும் சீன மக்கள்தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள் கணித்துள்ளனர்.
எனவே, ஐ.நா. கணித்த ஆண்டுக்கு முன்பே அதாவது 2023 அல்லது 2024-ம் ஆண்டிலேயே சீன மக்கள்தொகையை இந்தியா மிஞ்சிவிடும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
சீனாவில் பிறப்பு விகிதம், தொடர்ந்து 4 ஆண்டுகளாக குறைவாகவே உள்ளது. அங்கு குழந்தை பெறும் வயதுடைய பெண்கள் எண்ணிக்கையும் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு, ஒற்றை குழந்தை கொள்கையை கைவிட்டு, 2 குழந்தைகள் பெற்றுக்கொள்ள சீனா அனுமதித்தது.
தற்போது, கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.