‘சமகால கல்விச் சிந்தனைகள்’: தொடர் – 7 / சு. உமாமகேஸ்வரி
நம் நாடு உலக அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் எதனால் யாருடனும் போட்டிபோட்டு பதக்கங்களைப் பெறமுடியவில்லை?
நம் பள்ளிகள் எத்தனை ஆயிரம் விளையாட்டு வீரர்களை உருவாக்கியுள்ளன? இங்கு உடற்கல்விக்கான இடம் என்ன?
இவையும் கல்வியுடன் இணைத்துப்பார்க்க வேண்டியவைகளே.
பள்ளி வயதுக் குழந்தைகளுக்கு மிகவும் அவசியமானது உடற்பயிற்சி வகுப்புகள், விளையாட்டுகள்.
ஆனால் நம் கல்விமுறையில் அதற்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்தால் பல அதிர்ச்சிகள் தெரியவரும்.
பெரும்பாலான பள்ளிகளில் விளையாட்டுத் திடேலே கிடையாது. விளையாட்டுத் திடல் இருந்தால் தானே குழந்தைகள் ஆரோக்கியமாக விளையாட முடியும்?
தொடக்கப்பள்ளி வயதிலிருந்து குழந்தைகளை உடற்பயிற்சி, விளையாட்டுப் பயற்சிகளில் ஈடுபட வைப்பதற்கான சூழல் இங்கு இல்லை.
மற்ற பாடங்களுக்குத் தரப்படும் முக்கியத்துவம் உடற்கல்வி என்ற பாடப்பிரிவிற்குத் தரப்படுகிறதா என்றால் அதுவுமில்லை.
உடற்கல்வி ஆசிரியர்கள் தனியாக நியமிக்கப்படுவது உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் மட்டுமே. ஆங்காங்கே பகுதிதேர ஆசிரியர்களும் உடற்கல்வி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அரசுப் பள்ளிகளைப் பொறுத்தவரை தொடக்கப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் எங்குமே கிடையாது. ஆனால் சிறு வயதிலிருந்து பயிற்சி பெற்றால்தானே விளையாட்டுத் துறையில் சாதனை புரிய முடியும்?
தனியார் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் கட்டாயமாக நியமிக்கப்பட்டிருப்பர்.
ஆனால் அங்கும் உடற்கல்வி பாடம் என்பது எந்தளவிற்கு ஈடுபாட்டுடன் கொடுக்கப்படுகிறது என்பது ஆய்வுக்குட்பட்டது.
பல தனியார் பள்ளிகள், நகரப் பகுதிகளின் குடியிருப்புப் பகுதிகளில் எந்தவித வசதியுமின்றி ஆரம்பிக்கப்பட்டு, விளையாட்டுத் திடல் இன்றியும் இயங்கி வருகின்றன.
இங்கு, வெறும் பாடங்களை மட்டுமே நடத்தி, தேர்வுக்காக மட்டுமே மாணவர்களை தயார்படுத்தும் கல்வி முறையாக உள்ளதால், குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் மிகவும் சீர்குலைந்துள்ளது.
10 வயதுக் குழந்தைகள் கூட உடல் பருமன், இதய நோய், சர்க்கரை நோய், கண் பார்வையில் குறைபாடு என பலவித உடல் குறைபாடுகளுடன் தான் வளர்கின்றனர்.
ஆயிரம் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில்கூட விளையாட்டுத்திடல் கிடையாது.
குழந்தைகள் மன அழுத்தத்தால் நிரம்பி நோயாளி மனிதர்களாகவே இங்கு வளர்கின்றனர் என்பதை இந்த சமூகம் எப்போது உணரப்போகிறது?
விளையாட்டு வகுப்புகள் ஒருவரது வாழ்க்கையில் வெற்றி தோல்வி மனப்பான்மைகளை நேர்மறையாக சகஜமாக எடுத்துக்கொள்ளும் பயிற்சியை வழங்கும், உற்சாகத்தையும் புத்துணர்ச்சியையும் தரும் முக்கியமான பாடம் உடற்கல்வி.
ஆனால், அதைத் திட்டமிட்டே ஒதுக்கிவைத்து எந்திரத் தன்மையுடனான மாணவர்களை உருவாக்கும் பள்ளிகளே இங்கு அதிக விழுக்காடு.
அனிதா போன்ற குழந்தைகள் தோல்விகளை சந்திக்க இயலாமல் தற்கொலை முடிவுகளை எடுப்பதற்கு அவர்களது நேர்மறைமனப் பான்மைகளை வளர்க்காத இந்தக் கல்விச் சூழலே காரணம்.

பாடங்களும் மதிப்பெண்களும்தான் இந்த வாழ்க்கைக்கு முக்கியம் என மாணவர்களுக்கு, அவர்களது குழந்தைப் பருவத்திலிருந்தே நம்பிக்கையளிக்கப்படுகிறது.
விளையாட்டுத் துறைகளை சரியாக பள்ளிக்குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தி இருந்தால், இன்று உலக அளவிலான ஏராளமான விளையாட்டுப் போட்டிகளில் இந்தியக் குழந்தைகளே முன்னிலை வகுப்பர்.
ஆனால் நாம் தோற்றுப்போய் நிற்கிறோம்.
எதிர்கால சந்ததியை உடலளவிலும் மனதளவிலும் ஆரோக்கியமற்றவர்களாக வளர்த்து வருகிறோம்.
இந்த நிலை மாற வேண்டும், கல்வியில் உடற்கல்வியும் கவனம் கொள்ளப்பட வேண்டும்.
(தொடரும்…)