– நடிகை சாய் பல்லவி நெகிழ்ச்சி
நடிகர் சூர்யாவின் 2D நிறுவனம் தயாரிப்பில், சாய்பல்லவி கதாநாயகியாக நடித்துள்ள கார்கி. இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் படக்குழுவினர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
அப்போது பேசிய இயக்குநர் கவுதம் ராமசந்திரன், “என்னுடைய முதல் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் படம் நன்றாக இருந்தால் உடனே கூறுங்கள். இல்லையென்றால், சிறிது தாமதமாக கூறுங்கள் என்று சொல்லியிருந்தேன்.
ஆனால், இப்படம் நன்றாக இருக்கிறது என்றுதான் கூறுவீர்கள். சாய் பல்லவி இப்படத்திற்கு மிகவும் உறுதுணையாக இருந்தார். நான் திருப்தியடைந்தாலும் அவர் இன்னும் சிறப்பாக எடுக்கலாம் என்று நடிப்பார்” என்றார்.
நடிகை சாய் பல்லவி பேசும்போது, “சாய் பல்லவியால் தான் இப்படம் சிறப்பாக இருக்கிறது என்று அனைவரும் கூறினார்கள். ஆனால், நான் வருவதற்கு முன்பே எல்லாமே தயாராக இருந்தது.
அன்றாடம் நாம் சந்திக்கும் பிரச்சனையை படமாகக் கொடுத்திருக்கிறார்கள்.
பொதுவாக இயக்குனருக்கு அழுத்தம் அதிகமாக இருக்கும். ஆனால், இயக்குனர் கெளதம் எந்தவித அழுத்தமும் இல்லாமல் இயல்பாகவே இருந்தார்.
ஒரு நாள் நடிகர் சூர்யாவுடன் எடுத்த புகைப்படம் அனுப்பினார்கள். அப்போது அவரும் இதில் பகுதியாக இருக்கிறார் என்று நினைத்தேன்.
எதிர்பாராதவிதமாக சூர்யா சாரையும் ஜோதிகாவையும் பார்த்ததில் எனக்கு பேச்சு வரவில்லை.
அன்றைய படப்பிடிப்பில் நான் எப்படி நடித்தேன் என்றுகூட தெரியவில்லை. நான் சூர்யா சாரின் மிகப்பெரிய விசிறி. அவரைப் பார்த்து உறைந்து போனேன்” என்று நெகிழ்ந்து பேசினார்.
நடிகை ஐஸ்வர்யலட்சுமி பேசும்போது, “கடந்த மூன்று ஆண்டுகளாக கார்கியுடன் பயணித்து இருக்கிறேன். ஆனால், இயக்குநர் கெளதம் ராமசந்திரன் 4 ஆண்டுகள் போராடியிருக்கிறார்.
சாய் பல்லவி இல்லாமல் கார்கி இல்லை. இப்படம் எனக்கு மிகவும் உணர்வுபூர்வமான படம். அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்கள்” என்றார்.
நடிகர் காளி வெங்கட், “முதலில் நடிகர் சூர்யாவிற்கு நன்றி. இப்படம் மக்களிடம் எப்படி சேரும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.
2D-க்கு சென்ற பிறகுதான் நிம்மதியாக இருந்தது. படத்தின் கதையைக் கேட்கும்போது பதட்டமாக இருந்தது. ஏனென்றால், இது மற்ற படங்களைப்போல் இருக்காது.
இறுதிக் காட்சியைக் கேட்கும்போது இப்படம் நிச்சயம் வெற்றியடையும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது.
ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பில் சிறப்பாக நடித்துவிட வேண்டும் என்று பயிற்சி எடுத்து வருவேன். ஆனால், ஒரே ஒரு பாவனையில் சாய் பல்லவி வென்றுவிடுவார்” என்று கூறினார்.
-பா. மகிழ்மதி