அதிமுக பொதுக்குழுவுக்குத் தடை விதிக்க முடியாது!

– உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் கடந்த மாதம் 23- ம் தேதி சென்னை வானரகத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.

இந்தக் கூட்டத்தில், புதிய தீர்மானங்கள் எதுவும் இயற்றக்கூடாது என்று பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கில் தடை கேட்ட மனுவை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார்.

இதை எதிர்த்து செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர்மோகன் ஆகியோர், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 23 தீர்மானங்களை தவிர புதிய தீர்மானங்களை கொண்டுவர தடை விதித்து கடந்த மாதம் 23-ம் தேதி அதிகாலையில் உத்தரவிட்டனர்.

ஆனால், தடையை மீறி புதிய தீர்மானம் இயற்றப்பட்டதாக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம், ஐகோர்ட்டில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தார்.

அதில், அ.தி.மு.க., பொதுக்குழுவில் உயர்நீதிமன்ற தடையை மீறி, அ.தி.மு.க.வின் அவைத் தலைவராக தமிழ் மகன் உசேனை நியமித்து, புதிய தீர்மானம் இயற்றப்பட்டது.

உயர்நீதிமன்ற உத்தரவை மீறி தீர்மானத்தை இயற்ற காரணமான அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வரும் 11-ம் தேதி மீண்டும் பொதுக்குழு கூட்டப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பொதுக்குழுப் கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு அவசர வழக்காக எடுக்கவேண்டும் என்று மனுதாரர் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது.

அதற்கு பதில் அளித்த நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மட்டும் வரும் 4-ம் தேதி விசாரிக்கப்படும். அந்த வழக்கில் பொதுக் குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை விசாரிக்க முடியாது என்றனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வக்கீல் ஸ்ரீராம் ஆஜராகி பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்ட 23 தீர்மானங்களை தாண்டி வேறு தீர்மானங்கள் இயற்றக் கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் அவைத் தலைவரை நியமித்து புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே அவமதிப்பதாக உள்ளது. அது மட்டுமில்லாமல் மீண்டும் பொதுக்குழுவை 11-ம் தேதி கூட்டுவதாக அறிவித்துள்ளனர்.

இது சட்ட விரோதம். எனவே இந்த பொதுகுழுவுக்கு தடை விதிக்க வேண்டும். அவைத் தலைவரைத் தேர்வு செய்த தீர்மானத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.

அதற்கு நீதிபதிகள், ஏற்கனவே நாங்கள் பிறப்பித்த உத்தரவுகள் அனைத்தும் பழைய வழக்குகளுக்கு மட்டுமே பொருந்தும். பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டுமென்றால் தனி நீதிபதியிடம் முறையிட வேண்டும்.

டிவிஷன் பெஞ்சில் முறையிட முடியாது. தனி நீதிபதி பிறப்பித்த இடைக்கால உத்தரவை எதிர்த்து தரக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கை மட்டுமே விசாரிக்கிறோம்.

தடையை மீறி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக கூறினாலும் அவைத் தலைவர் இல்லாமல் எப்படி பொதுக்குழுவை கூட்ட முடியும்? எனவே இதில் நீதிமன்ற அவமதிப்பு என்ற கேள்வி எப்படி எழும்.

எனவே வரும் 11-ம் தேதி கூடும் பொதுக் குழுவுக்கு தடை விதிக்க முடியாது என்று நீதிபதிகள் கூறினார்கள்.

ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அரவிந்த பாண்டியன் வாதிட்டார். இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை 7-ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

You might also like