சமகால கல்விச் சிந்தனைகள்: 6 / சு. உமாமகேஸ்வரி
பொதுவாகவே நமது கல்வி முறையில் பாடப்புத்தகங்களும் ஆசிரியர்களும்தான் பிரதானமாக இடம் பெறுகின்றனர்.
ஒரு குழந்தை பள்ளிக்குள் நுழையும்போதே புத்தகப் பையுடன்தான் வகுப்பறைக்குள் வரவேண்டும் என்பது நியதியாக இருக்கிறது.
அதையொட்டியே அரசும் கல்விக்கான இலவசங்களைக் கொடுக்கும்போது புத்தகப் பையையும் சேர்த்தே தருகிறது.
ஒரு குழந்தை பை நிறைய புத்தகங்களையும் நோட்டுகளையும் பள்ளிக்கு எடுத்துச் சென்று. விட்டாலே குழந்தைகள் படித்துவிடுவார்கள் என்று பெற்றோர்களும் நம்புகின்றனர்.
கூடுதலாக, வகுப்பறையில் அவர்கள் அமரும் ஒழுக்கம், பிரார்த்தனைக் கூட்டத்திற்கு வரிசையைப் பின்பற்றுவது,
மணி அடித்தால் அடுத்த பிரிவேளைக்கான தயாரிப்பில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வது போன்றவை மிகச் சாதாரணமாக பின்பற்ற வேண்டிய பள்ளி நடைமுறைகளாக வரையறுக்கப்பட்டுள்ளன.
இவையெல்லாம் வகுப்பறைக்கு முக்கியம்தான். ஆனால், இவை மட்டுமே முக்கியமா என்ற கேள்வியை நாம் முன்வைக்கவேண்டியது அவசியமாகிறது.
பள்ளிகள் குழந்தைகளுக்கு என்ன சொல்லித்தரவேண்டும், அது எப்படி சொல்லித் தர வேண்டும் என்பது குறித்து நாம் பாட நூல்களில் இருப்பதை மட்டும்தான் பின்பற்ற வேண்டுமா, அதுவே முழுமையான வழிகாட்டுதல் ஆகிவிடுமா என்பதையும் நாம் யோசிக்கவேண்டும்
ஏனெனில், மேற்சொன்ன அனைத்தையும் சரியாகத் தரக்கூடிய நமது பள்ளிகளில், வகுப்பறைக்குள் அமர்ந்திருக்கும் குழந்தைகளுக்கான அணுகும் முறைகளும் அவர்களுக்கான தனிப்பட்ட பிரச்சனைகள் குறித்த பார்வையான தனியாள் வேறுபாடுகள் பற்றிய பார்வையும் முக்கியத்துவம் பெறுவதில்லை என்பது கவனிக்கப்பட வேண்டியவை.
கற்பித்தலின்போது ஒரு பாடவேளையில் குழந்தைகளை, அவர்கள் கூர்ந்து நோக்குவதற்கான போதிய வாய்ப்பு அளிப்பதாகத் திட்டமிடுதலும் நடைமுறைப்படுத்தப் படுவதும் நம்மிடையே உள்ளதா எனவும் நமது கல்வி முறையைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம்.
எல்லா குழந்தைகளாலும் ஒரே மாதிரியான கற்றல் அடைவுகளைப் பெற முடிவதில்லை. காரணங்களாக அவர்கள் கற்கும் வேகம், புரிந்து கொள்ளும் ஆற்றல் ஆகியவற்றைக் கூறினாலும்,
புரிந்துகொள்ளும் ஆற்றலை வலுப்படுத்தவோ வளப்படுத்தவோ என்ன வகையான முறைகளை நமது வகுப்பறைகள் பின்பற்றுகின்றன என்பதற்கு ஆய்வுகளைத் திரட்டினால் உண்மை நிலை புரியும்.
குழந்தைகள் அனைவரும் வகுப்பறையில் கவனிப்பதுபோலவே அமர்ந்திருப்பார்கள் அவர்கள் உடல் அளவில்தான் அங்கு அமர்ந்திருக்கின்றனர்.
ஆனால் அவர்களது சிந்திக்கும் திறனும், மன எண்ணங்களும் முழுமையாக வகுப்பறைக் கற்றலில் ஈடுபடுவது இல்லை என்பதை குழந்தைகளிடம் பேசிப் பார்த்தால் புரியும்.
குழந்தைகள், அவர்கள் எந்த வயதினராக இருந்தாலும் எந்திரத்தன்மையான வகுப்பறை போதனைகளை விரும்பவில்லை. பாடங்களை, பாட நூல்களை என தங்களைச் சுற்றியுள்ள பாடம் சார்ந்த விஷயங்களை சுமைகளாகக் கருதுகின்றனர்.
தங்களது மனதில் பல்வேறு அழுத்தங்களை வைத்துக்கொண்டு யாரிடம் வெளிப்படுத்துவது எனத் தெரியாமல் குழப்பமாகவும், பய உணர்வுடனும்தான் தங்கள் பெரும்பாலான நேரங்களைக் கழிக்கின்றனர்.
இதுபோன்ற ஒரு கற்றல் சூழலால்தான் அவர்களது கற்கும் வேகமும் திறனும் பாதிக்கப்படுகிறது என்பதை ஆசிரியர்களால் மட்டுமே புரிந்துகொள்ள இயலும்.
பெற்றோர்களால் இவற்றைப் புரிந்துகொள்ளவோ உணரவோ இயலாது.
ஆகவே, இவற்றின் தீர்வுக்கான வழிகளை ஆசிரியர்கள்தான் முடிவுசெய்து செயல்படுத்த முடியும்.
குழந்தைகளின் இந்த அடிப்படைப் பிரச்சனையான எண்ணங்களை வளப்படுத்தாமல் முழுமையான கற்றல் அடைவுகளை எதிர்பார்க்கவோ, கற்பித்தல் நோக்கங்களை நிறைவேற்றவோ இயலும் என்று பதிவேடுகளில் குறிப்பதெல்லாம் உண்மையாகி விடாது.
பாடநூல்களிலுள்ள பாடங்களின் அடர்த்தி கூடுதலாக இருப்பது எங்களுக்கான சுதந்திரமான கற்றலைத் தடை செய்கிறது என்கின்றனர் குழந்தைகள்.
உதாரணமாக, தற்போதைய எட்டாம் வகுப்பில் தமிழ்ப் பாட நூலில் முதல் இயல் பாடப் பகுதியில் உள்ள சொற் பூங்கா என்ற தலைப்பில் சொல்லப்பட்ட செய்திகளைப் புரிந்த கொள்ள முடியாமல் தவிக்கும் குழந்தைகள்.
காரணம், எழுத்துகளை சரளமாக வாசித்துப் பழகாத குழந்தைகளால் பொருள் பொதிந்த இலக்கண செய்திகளை மனதுள் உள்வாங்குவது என்பது மிகவும் சுமையான கற்றலாக உணர்கின்றனர்.
குழந்தைகள் சுமையின்றிக் கற்கவும் அவர்களுக்கான கற்றல் குறைபாடு காரணங்களை சரி செய்யத் தேவையான முயற்சிகளை மேற்கொள்ளவுமான நெகிழ்வுத் தன்மையுடனான கல்வி முறையே இங்கு தேவை.
– தொடரும்