திமுக நிறைவேற்றாத வாக்குறுதிகளும் அதன் சாதக பாதகங்களும்!

அண்மையில் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின் திமுக அறிவித்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றி விட்டதாக பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

அப்படி திமுக தேர்தலின்போது அறிவித்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டு விட்டதா?

பரவலாக தமிழக மக்கள் பலராலும் எதிர்பார்க்கப்பட்ட குடும்பத் தலைவிக்கு மாதம் 1,000 ரூபாய் என்கின்ற திட்டம் நிதி பற்றாக்குறை காரணமாக இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

அது எப்போது நிறைவேற்றப்படும் என்கின்ற எதிர்பார்ப்பு பரவலாக மக்களிடம் இருக்கிறது.

சொன்னதை செய்வார்கள் என்கின்ற ஒரு எதிர்பார்ப்பும் அவர்களிடையே நிலவுகிறது. இது மாதிரி சில பல திட்டங்கள்.

நீட் தேர்வைப் பொறுத்தவரை இதுவரை தமிழக அரசால் தனித்து தேர்தல் வாக்குறுதியில் சொன்னதுபோன்று முழுக்கத் தேர்வுத் திட்டத்தை தடுத்து நிறுத்த முடியவில்லை.

இரண்டாவதாக தேர்தலின் போது திமுக அளித்த முக்கியமான வாக்குறுதிகளில் ஒன்று கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல்களையும் அந்த ஊழலுக்குக் காரணமானவர்களையும் சட்டத்தின் முன்னாடி கொண்டுபோய் நிறுத்துவோம் என்பது அவர்கள் அளித்த முக்கியமான வாக்குறுதிகளில் முதன்மையானது.

அப்படிப்பட்ட வாக்குறுதி அதிமுக விஷயத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறதா?

திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு அதிமுக அமைச்சர்கள் சிலருடைய வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. சிலரிடம் குறிப்பிட்ட அளவு கூடுதலான சொத்துக்கள் இருந்ததாகச் சொல்லப்பட்டது.

மணல் கூட அளவுக்கு மீறி வைக்கப்பட்டிருந்த செய்திகளெல்லாம் வெளிவந்தன. ஆனால் அந்த சோதனைகள் நடந்ததே ஒழிய அதையொட்டி சட்டரீதியாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அவர்கள் கைதானார்களா அல்லது ஏன் அந்த சோதனைகள் ஒரு கட்டத்தோடு நின்று போயிருக்கின்றன என்பதற்கெல்லாம் இன்றுவரை பதில் இல்லை.

அடுத்ததாக கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு. அதிமுக ஆட்சியின் போது முடிந்தவரை தள்ளிப் போடப்பட்ட அல்லது அலட்சியம் காட்டப்பட்ட அந்த வழக்கு விசாரணை திமுக ஆட்சிக்கு வந்ததும் விரைந்து நடந்து உண்மையிலேயே அதற்குப் பின்னணியாக இருந்த அசலான குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என்று பலரும் எதிர்பார்த்தார்கள்.

ஆனால், அதிமுக ஆட்சியில் நடந்த அதே விதமான ஒரு தாமதமான நிலைமைதான் தற்போது வரை அந்த குறிப்பிட்ட வழக்கில் நீடித்துக் கொண்டிருக்கிறது.

சில கொலைகளும் கொள்ளையும் நடந்தேறிய அந்த கொடநாடு வழக்கில் ஏன் இத்தனை தாமதம்?

ஏன் அந்த வழக்கை ஆட்சி மாறிய பிறகும் தொடர்ந்து விசாரணை முடுக்கிவிட்டு உரிய குற்றவாளிகளை ஏன் இன்னும் சட்டத்தின் முன்னால் நிறுத்தவில்லை. அப்படி நிறுத்தப்படாமல் போனதற்கு என்ன காரணம்.

இத்தனைக்கும் பல ஊடகங்கள் கொடநாடு கொள்ளை வழக்கில் ஏன் இத்தனை தாமதம் நடக்கிறது என்பது பற்றி வெவ்வேறு யூகங்களை வெளிப்படுத்துகின்றன.

அந்த யூகங்களின்படி ஏதோ மறைமுகமான சில ஒப்பந்தங்கள் இருப்பதாகக் கூட சொல்லப்படுகிறது. அப்படிப்பட்ட யூகங்கள் பொதுவெளியில் பரவுவதற்கான காரணங்கள் என்ன?

ஏன் திமுக இந்த விஷயத்தில் சற்று பாராமுகமாக இருந்து கொண்டிருக்கிறது என்பது மிகவும் வியப்பிற்குரிய ஒரு கேள்வி.

அடுத்து இந்தக் குறிப்பிட்ட வழக்கில் ஒருவேளை தீவிரம் காட்டப்பட்டிருந்தால் சட்டத்திற்கு முன் சில குற்றவாளிகள் அகப்பட்டிருப்பார்கள். அதிமுகவில் அண்மையில் நடந்த பொதுக்குழுவில் கூட அதனுடைய பாதிப்பு தெரிய வந்திருக்கும்.

ஆனால் அப்படிப்பட்ட எந்த பின்விளைவும் நடக்கவில்லை. இதற்கு ஒரு விதத்தில் திமுக காட்டிய மெத்தனமும் ஒரு முக்கியமான காரணம். இந்தக் கேள்விகள் திமுக தொண்டர்களிடமே இருக்கின்றன என்பதும் ஒருவகை யதார்த்தம்.

இனிமேலாவது திமுக தன்னுடைய தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டபடி, அதிமுக அமைச்சர்கள் சம்பந்தப்பட்ட பல்வேறு விஷயங்களில் குட்கா ஊழலிலிருந்து கூவத்தூர் வழக்குகளிலிருந்து பல்வேறு சோதனைகள் இடப்பட்ட அந்த சூழல் வரை

பலதரப்பட்டவற்றில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டால் தான் திமுக தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி இருக்கிறது என்கின்ற ஒரு திருப்தியை பொதுமக்கள் பெறமுடியும்.

திமுக ஒருகாலத்தில் அளித்த வாக்குறுதியை நம்பி வாக்களித்த வாக்காளப் பெருமக்கள் இப்போதும் அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா என்ற அளவில்

எதை எதையெல்லாம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது எதெல்லாம் நிறைவேற்றப் படவில்லை என்பதையும் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை யாரும் மறந்து விட வேண்டாம்.

-யூகி

You might also like