சமூக அக்கறையை வளர்க்கும் கவிதைகள்!

நூல் அறிமுகம்

கவிமுகிலின் வளர்ச்சி பன்முகத் தன்மைகள் கொண்டது.

மரபுக் கவிதை, ஹைக்கூ கவிதை, புதுக்கவிதை, சிறுவர் இலக்கியம், புதினம் என்று இடையறாது தேக்கமில்லாமல் படைப்புலகில் மெல்ல மெல்ல, ஆனால் உறுதியான இடத்திற்கு வந்து கொண்டிருக்கிறார் என்று அவரது இலக்கியப் படைப்புலகை மதிப்பிட்டு அங்கீகாரம் தருகிறார் கவிஞர் ஈரோடு தமிழன்பன்.

இலக்கிய உலகில் ஓர் அங்கீகாரம் தேடும் முயற்சியாக இல்லாமல் – தன் இலக்கிய நாட்டமும் தேட்டமும் தொய்வடையாத விதத்தில் – கவிமுகில் தனக்குள் இருக்கும் ஒரு சமூக மனிதனின் கலை வேட்கைக்கும் – ஒரு கலைஞனின் சமூக அக்கறைக்கும் இடம் தந்து அவர்களை வளர்த்தெடுக்கும் ஒரு முயற்சியாகவே கவிமுகிலின் கவிதைகளைப் பார்க்கிறேன் என்றும் சுட்டிக்காட்டுகிறார் தமிழன்பன்.

கவிமுகிலின் தேர்ந்தெடுத்த கவிதைகள் கல்பொரு சிறுநுரை என்ற பெயரில் நூலாக வெளிவந்திருக்கிறது.

பழைய சாலை என்ற கவிதையில் தொடங்கி உக்கடை என 60 கவிதைகள் இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

முதல் கவிதையான பழைய சாலை என்ற கவிதைகள் சொந்த ஊர் நினைவுகளை அழகாகப் பதிவு செய்திருக்கிறார்.

பஞ்சத்த
பார்வையிட கலெக்டர்
வந்தப்ப
கருப்பா
ஒரு உருவம்
காகிதக் கட்டு ஒன்ன
எடுத்து நீட்டுச்சு

வஸ்தா சாவடி
வாளமர்கோட்டை
வடக்கு நத்தம்
புதுச்சாலை போட்டதால
பழைய சாலை என்று எனக்குப்
பேச வைத்தார்கள்

 – என்று தொடங்குகிறார்.

சொந்த வாழ்வின் அனுபவங்களை சமூக அனுபவங்களின் ஊடாக அக்கறையுடன் எழுதுகிறார் கவிமுகில்.

கவிஞர் கவிமுகிலின் கவிதைகளை வாசிக்கும்போது ஒரு குரல் ஒலித்துக்கொண்டே இருப்பதை உணரலாம்.

பெரும்பாலும் அக்குரலின் தொனி நமது மூதாதையர்கள் நம்முடன் வாழ்ந்து மறைந்த முந்தைய தலைமுறையினர் மற்றும் சமகாலத்தின் மனிதத்துவம் மிக்கதுமாக இருக்கிறது.

அதோடு ஒவ்வொரு கவிதைகளிலும் ஒரு பெரும் வாழ்வு மறைந்திருக்கிறது என்கிறது நூலின் பதிப்புரை.

ஆசு கவிபோல நினைத்த மாத்திரத்தில் சரளமாகக் கவிதைகளை எழுதி முடிக்கும் கவிமுகிலின் இந்த தொகுப்பில் உள்ள கவிதைகள், கதைகளுக்கான தன்மையுடன் இருப்பதைப்போல, பாடலுக்கான உணர்வையும் ஒரு சேர தருகிறது என்ற பதிப்புரை கருத்து உண்மைதான் என்பதைக் கவிதைகளைப் படிப்பவர்கள் உணர்வார்கள்.

தமிழா எழு என்ற கவிதையை ஒரு பாடலாகவும் நம்மால் பார்க்கமுடிகிறது.

நாட்டுப்புறப் பாடல்களின் சாயலும், பாடல்களின் தொனியும் கவிமுகிலின் கவிதைகளில் இழையோடுவதைக் காணமுடிகிறது.

இப்படிக் கவி புனையும் தகுதி அவருக்குத் திரைப்பாடல் எழுதும் வாய்ப்பையும் பெற்றுத் தந்திருக்கிறது.

தென்றல் தமிழனே
புயலாக மாறி வா
தேடிய பகை முடித்து
தென்றலாக மாற வா

உதயக் கதிரென
உடன் எழுந்து ஓடி வா
உச்சி வான் சுடரென
செஞ்சுடர் காட்டி வா

கடலின் அலையென
வளங்காணத் திரண்டு வா
திடலில் மாற்றானின்
தலைவனைக் கொய்வோம் வா

கருப்பைச் சிசுவையும்
களங்காணக் கூட்டி வா
நெருப்பைக் கண்களிலே
நீயேந்தி நிமிர்ந்து வா

தன் கவிதைப் பயணத்துக்கு ஊக்கமாக இருந்த கவிஞர் தாராபாரதிக்கும் ஒரு கவிதை எழுதி நெகிழ்ந்திருக்கிறார் கவிமுகில்.

வளர்ந்தவனை வாழ்த்துவதல்ல உன் எழுதுகோல் / அது வளர்ந்தவனை நிமிர்ந்துவந்த நெம்புகோல் என்று உச்சிமுகர்ந்து பாராட்டுகிறார்.

கல்பொரு சிறு நுரை உங்களின் நெஞ்ச மேடுகளில் தொடர்ந்து முட்டி மோதும்.

அவை உருவாக்குகிற நுரைகள் படர்ந்து பெருகி உங்களை வான் மேகங்களுக்கு இடையே கடத்திச் செல்லும் ஆற்றல் உடையவை என்ற தமிழ் இயலனின் வார்த்தைகள் கவிமுகின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளுக்குப் பொருத்தமாக அமைகின்றன.

கல்பொரு சிறு நூரை: கவிஞர் கவிமுகில்
(கவிஞர் கவிமுகிலின் தேர்ந்தெடுத்த கவிதைகள்)

வெளியீடு: டிஸ்கவரி பதிப்பகம்,
9, பிளாட் எண்: 1080 ஏ ரோகிணி பிளாட்ஸ்,
முனுசாமி சாலை, கே.கே.நகர் மேற்கு,
சென்னை – 78
விலை ரூ. 180

பா. மகிழ்மதி

You might also like