தட்பவெப்ப காலச் சூழ்நிலைகளுக்கு ஏற்றது போல் இயற்கை நமக்கு காய்கறிகள், பழங்களை வழங்குகிறது. அந்தந்த காலங்களில் கிடைக்கக்கூடிய உணவுகளை எடுத்துக்கொள்ளும் போது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நமக்கு கிடைக்கின்றன.
இந்த கோடைக்காலத்தில் இயற்கை நமக்கு வழங்கிய அற்புதமான பழங்களில் ஒன்று மாம்பழம். இந்த மாம்பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, தாமிரம் மற்றும் ஃபோலேட் ஆகிய ஊட்டச்சத்துகள் இருக்கின்றன.
உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பல வைட்டமின்கள் அடங்கியது மாம்பழம். இப்போது மாம்பழத்தை கொண்டு பலவிதமாக ரெசிபிகள் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
மாம்பழ மில்க் ஷேக்
தேவையான பொருட்கள்:
நல்ல பழுத்த மாம்பழம் – 2
காய்ச்சி குளிர்வித்த பால் – 2 டம்ளர்
வெண்ணிலா ஐஸ்கிரீம் – 2 ஸ்பூன்
சர்க்கரை – 4 ஸ்பூன்
ஐஸ் க்யூப் -தேவையான அளவு
செய்முறை:
மாம்பழத்தை கழுவி, தோலை நீக்கிவிட்டு துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். மாம்பழத்தை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு சர்க்கரை சேர்த்து அரைத்து பின் பால், வெண்ணிலா ஐஸ்கிரீம், ஐஸ் க்யூப் போட்டு அடித்து இறக்கினால் சுவையான மாம்பழ மில்க் ஷேக் ரெடி.
மாம்பழ அல்வா
தேவையான பொருட்கள்:
பழுத்த மாம்பழத் துண்டுகள் – 3 கப்
சர்க்கரை – 1 கப்
பால் – 2 1/2 கப்
ஏலக்காய் தூள் – சிறிதளவு
நெய் – தேவைக்கேற்ப
முந்திரி,திராட்சை – தேவைக்கேற்ப
செய்முறை:
மாம்பழத்தை மசித்து அல்லது மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொண்டு அதனுடன் சர்க்கரை போட்டு கிளறவும்.
பின்பு பால் சேர்த்து மிதமான தீயில் நெய் ஊற்றி அடி பிடிக்காமல் கட்டியாகும் வரை கிண்ட வேண்டும்.
இன்னொரு பாத்திரத்தில் நெய் ஊற்றி முந்திரி, திராட்சை வறுத்து அல்வாவில் கொட்டி கிளறி இறக்கினால் அல்வா ரெடி.
மாம்பழப் பச்சடி
தேவையான பொருட்கள்:
பழுத்த மாம்பழம் – 2
வெல்லம் துருவல் – 1/2 கப்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
பச்சைமிளகாய் -1
காய்ந்த மிளகாய் – 1
கடுகு – 1/4 டீஸ்பூன்
அரிசி மாவு – 1 டீஸ்பூன்
அரைத்த தேங்காய் – 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் – 1 டீஸ்பூன்
கருவேப்பிலை – தே,அ
உப்பு – ஒரு சிட்டிகை.
செய்முறை:
மாம்பழத்தை கொட்டை நீக்கி பெரிய துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும். அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஒரு கப் தண்ணீர் விட்டு, வெட்டிவைத்த மாம்பழத் துண்டுகள், உப்பு, மஞ்சள் தூள் போட்டு வதக்க வேண்டும்.
அதனுடன் பொடித்த வெல்லம் சேர்த்து கொதி வந்து கெட்டியானதும் தீயைக் குறைத்து அரிசி மாவை தண்ணீரில் கரைத்து அதனுடன் சேர்த்து அரைத்து தேங்காய் கலந்து இறக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, பச்சை மிளகாய் காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு இறக்கினால் சுவையான மாம்பழ பச்சடி ரெடி..!
மாம்பழ மோர்க்குழம்பு
தேவையானவை:
புளிப்பும் தித்திப்பு கலந்த மாம்பழங்கள் – 2
புளித்த மோர் – 2 கப்
அரிசி – 1 ஸ்பூன்
சீரகம், கடுகு – 1/2 டீஸ்பூன்,
வெந்தயம் – ¼ டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 1
காய்ந்த மிளகாய் – 2
தேங்காய் துருவல் – 3 ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – தே.அ
உப்பு – தே.அ
செய்முறை:
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி வெட்டிய மாம்பழங்களை உப்பு சேர்த்து வேக விடவும்.
தேங்காய், ஊறவைத்த அரிசி, சீரகம், ஒரு காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும்.
அரைத்த விழுதினை மோரில் உப்பு சேர்த்து வெந்து கொண்டிருக்கும் மாம்பழங்களுடன் இதை ஊற்றியவுடன் அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்து இறக்கிவிடவும்.
மாம்பழ பாயாசம்
தேவையான பொருட்கள்:
மாம்பழம் அரைத்த விழுது – 1 கப்
சர்க்கரை –1/2 கப்
பால் – 1 லிட்டர்
அரிசிக் குருணை – 2 ஸ்பூன்
கேசரி பவுடர் – ஒரு சிட்டிகை
நெய் – 2 ஸ்பூன்
முந்திரி, திராட்சை – தலா ஒரு டேபிள்ஸ்பூன்
கண்டென்ஸ்டு மில்க் – 2 ஸ்பூன்
ஏலக்காய்த்தூள் – 1/2 டீஸ்பூன்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி முந்திரி, திராட்சையை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதே கடாயில் அரிசி குருனையை மிதமாக வறுத்து அதில் பால் கலந்து வேகவிடவும்.
கண்டென்ஸ்டு மில்க், சர்க்கரை இரண்டையும் சேர்த்து கலந்து விடவும். பிறகு கேசரி பவுடர், ஏலக்காய்த்தூள் மற்றும் அரைத்து வைத்த மாம்பழம் போட்டு கிளறிவிடவும்.
அடுப்பை நிறுத்தி வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்தால் மாம்பழ பாயாசம் ரெடி.
இது போன்ற இன்னும் பல ரெசிபிகள் தொடர்ந்து பார்க்கலாம்.
– யாழினி சோமு