ஜூலை 11-ல் அதிமுக பொதுக்குழு நடக்குமா?

அண்மையில் நடந்த அதிமுக பொதுக்குழுவில் அதிமுகவின் அடுத்தகட்ட பொதுக்குழு ஜூலை 11-ம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதில் ஒற்றை தலைமை குறித்த தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என்கின்ற பேச்சு அடிபடுகிறது. எடப்பாடி பழனிசாமியை முன் நிறுத்துவதற்கான ஒரு முயற்சியாகவும் அது பார்க்கப்படுகிறது.

அண்மையில் நடந்த அதிமுக பொதுக்குழுவில் கலந்து கொண்ட அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் அவமானப்படுத்தப்பட்டு இருக்கிறார்.

அவர் மீது தண்ணீர் பாட்டில் உட்பட சிலவற்றை வீசி எறிந்திருக்கிறார்கள். அவருடைய ஆதரவாளர்கள் மீது துரோகிகள் என்ற சொற்கள் வீசிய எறியப்பட்டிருக்கின்றன.

இந்த அவமானங்களுக்குப் பிறகு அவர் அந்தப் பொதுக்குழுவிலிருந்து வெளியேறி இருக்கிறார்.

அந்தப் பொதுக்குழுவில் கலந்து கொண்ட பெரும்பான்மையானோர் எடப்பாடிக்கு ஆதரவாகவே முழங்கியிருக்கிறார்கள்.

அவருடைய பெயரை குறிப்பிடும் போதெல்லாம் பெரும் ஆரவாரம் எழுந்திருக்கிறது. இதெல்லாம் திட்டமிட்டபடி சில பல கவனிப்புகளுக்குப் பிறகு இந்த ஆதரவு ஒருங்கிணைக்கப்பட்டு அது எடப்பாடி பழனிசாமிக்கான ஆதரவுக் கூட்டமாக மாறியிருக்கிறது.

இன்னொரு வகையில் சொன்னால் ஏறத்தாழ கூவத்தூர் பாணிதான். ஆர்.கே. நகரில் தொடங்கி தொடர்ந்து பொதுக்குழு வரை நீண்டிருக்கிறது என்றும் சொல்லலாம். பணபலமும் அதிகார பலமும் பலவற்றை தீர்மானிக்கின்றன என்பதனை மறுபடியும் ஒரு உறுதிப்படுத்துகிறது அண்மையில் நடந்த பொதுக்குழு.

சரி, இதற்கு பிறகு ஜூலை 11-ம் தேதி நடக்க இருக்கின்ற பொதுக்குழு எந்த அளவிற்கு அமைதியாக களேபரமின்றி நடக்கும் என்கிற கேள்வி பல தரப்பிலும் எழுந்திருக்கிறது.

ஓ.பன்னீர் செல்வத்தின் தீவிர ஆதரவாளரான வைத்தியலிங்கம் அதிமுக பொதுக்குழு ஜூலை 11-ம் தேதி நடக்காது என்று உறுதிபடச் சொல்லி இருக்கிறார்.

அதற்கான சட்ட ரீதியான ஒரு முயற்சிகளும் மேற்கொள்ளப்படலாம். தேர்தல் ஆணையத்திற்கும் சில புகார்கள் எடுத்துச் செல்லப்படலாம். அதற்கான அனைத்து முயற்சிகளையும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

அண்மையில் டெல்லிக்குச் சென்று வந்த பிறகு தொண்டர்களைச் சந்தித்த ஓபிஎஸ், தனக்குதான் அதிமுக தொண்டர்களின் பலம் இருக்கிறது என்று என்பதை சொல்லியிருக்கிறார்.

உண்மையில் பொதுக்குழுவில் உள்ள உறுப்பினர்களை அதாவது 2000-க்கும் மேற்பட்ட நபர்களையும் மாவட்டச் செயலாளர்களையும் ஒருங்கிணைப்பதை போல அதிமுக தொண்டர்களை ஒருங்கிணைத்து தனக்கான ஆதரவாளர்களாக எடப்பாடி பழனிசாமியால் மாற்றிவிட முடியாது.

அந்த அளவிற்கு ஒரு பரந்துபட்ட, ஒரு விரிந்த முயற்சிகள் இன்று நடக்கவில்லை. தொண்டர்களை அப்படி எந்த செல்வாக்கையும் பயன்படுத்தி தனக்கு ஆதரவாளராக யாரும் சுலபமாக மாற்றிவிட முடியாது.

1972-ல் அதிமுக உருவாக்கப்பட்டதிலிருந்து அந்த இயக்கத்திற்கு பக்கபலமாக அடித்தளமாக இருப்பவர்கள் அதிமுக தொண்டர்கள். அப்படிப்பட்ட தொண்டர்கள் இன்று அதிமுகவில் நடந்து கொண்டிருக்கும் பரபரப்பான சம்பவங்களை மனக் குழப்பத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதே எதார்த்தம்.

இதில் எவ்வளவு பேர் எந்த அணிக்கு ஆதரவாக இருப்பார்கள்? அன்மையில் புரட்சி பயணத்தை மேற்கொண்டதாகச் சொல்லப்படும் திருமதி. சசிகலா அவர்களை ஆதரிப்பார்களா? அல்லது தனக்கு பெரும்பான்மை பலம் இருக்கிறது என்று பொதுக்குழுவில் ஆரவாரம் காட்டிய எடப்பாடி பழனிச்சாமியை ஆதரிப்பார்களா?

அல்லது தென் தமிழகத்தில் தனக்கு தனித்த செல்வாக்கு இருக்கிறது என்று சொல்லக் கூடிய பன்னீர்செல்வத்தை ஆதரிப்பார்களா? அல்லது தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை ஆதரிப்பாளர்களா? அல்லது வேறு சில தலைமையை ஆதரிக்க முன்வருவார்களா என்பதெல்லாம் காலத்தின் முன் எழுப்பக் கூடிய கேள்விகளாக இருக்கின்றன.

ஜூலை 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு நடப்பதற்கான சாத்தியக் கூறுகள் எவ்வளவு தூரத்திற்கு இருக்கின்றன என்பதை இப்போதைக்கு கணித்து சொல்லிவிட முடியாது.

திமுகவும் பாஜகவும் ஒதுங்கி நின்று அதிமுகவில் நடக்கும் இந்த அணி மோதல்களை வேடிக்கை பார்க்கின்றன. குறிப்பிட்ட அணிக்குதான் தன்னுடைய ஆதரவு என்பதை வெளிபடுத்தாமலும் இருக்கின்றன.

குறிப்பாக பாஜகவை  எடுத்துக்கொண்டால் இதற்கு முன்பு ஓ.பி.எஸ்சுக்குக் கிடைத்த ஒரு மிகையான மரியாதை தற்போது அவர் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில் அவருக்குக் கிடைப்பது சிரமமே.

ஆக, அதிமுகவில் நடக்கும் தற்போது அணி முதலில் தங்களுக்கு என்ன கிடைக்கும், தங்கள் பக்கம் அந்த நிர்வாகிகள் வருவார்களா? தொண்டர்கள் வருவார்களா? என்பதை எதிர்பார்த்த மனநிலையில்தான் பாஜகவும் இருக்கிறது; திமுகவும் இருக்கிறது.

இதை உணர்ந்ததால்தான் என்னவோ இனிமேலும் நடக்க இருக்கிற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு 25 இடங்கள் கிடைக்கும் என்பதை அறுதியிட்டுச் சொல்லியிருக்கிறார் தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை.

சமீபத்தில் சட்டமன்றத் தேர்தலில் நான்கு இடங்களை மட்டுமே பெற முடிந்த தமிழக பாஜகவால் எப்படி 25 நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றி பெறும் அளவிற்கு பெரு வளர்ச்சி எப்படி அடைய முடியும்.

ஆனால், அதிமுகவைச் சுற்றி பலதரப்பட்ட தூண்டில்கள் இன்று காத்திருக்கின்றன. எந்த தூண்டிலில் எந்த மீன் சிக்கும் என்பதை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

சில கட்சித் தலைவர்கள் சிக்கலாம், சில நிர்வாகிகள் சிக்கலாம். ஆனால் அதிமுக தொண்டர்கள் சிக்குவார்களா என்பதை கணித்துச் சொல்ல முடியாது.

அவர்கள் அம்மாதிரி வெவ்வேறு எதிர்பார்ப்புகளில் விழக்கூடிய மீன்கள் அல்ல என்பதை மட்டும் சொல்ல முடியும்.

-யூகி

You might also like