- என்எப்டிசி புதிய முயற்சி
தமிழ்த் திரைப்படத் துறையின் நிலை மற்றும் திறனை மதிப்பிட்டு அறிக்கை அளிக்கும் புதிய முயற்சியில் தேசிய திரைப்பட வளர்ச்சி கழக இயக்குநர் ராஜேஷ் கண்ணா ஈடுபட்டுள்ளார்.
தமிழ்த் திரைப்படத் துறையின் தற்போதைய நிலை, எதிர்கால சாத்தியக்கூறுகள் பற்றிய ஆய்வு மற்றும் ஆராய்ச்சியை மேற்கொள்வதற்காக நேஷனல் ஃபிலிம் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் எனும் தேசிய திரைப்பட வளர்ச்சி கழகத்தின் இயக்குநர் ராஜேஷ் கண்ணா ஒரு புதிய திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளார்.
என்எஃப்டி கிரியேட்டர் எகானமி சார்பாக இந்த ஆய்வு மற்றும் ஆராய்ச்சியை ஆரக்கள் மூவிஸ் மேற்கொள்ளும். என்எஃப்டி கிரியேட்டர் எகானமி என்பது ஆரக்கிள் மூவீஸின் தாய் நிறுவனமாகும். ஆரக்கள் மூவிஸ் இந்தியாவின் முதல் என் எஃப் டி திரைப்பட சந்தையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
திரைப்படத் துறையின் வருவாய் தரப்பு பங்குதாரர்களான தயாரிப்பாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் ஆகியோரை நேரடியாகச் சந்தித்து இந்த ஆய்வு நடத்தப்படும். அவர்களின் கருத்துகள் தொகுக்கப்பட்டு அறிக்கையாக என்எப்டிசியிடம் கொடுக்கப்படும்.
- இந்த அறிக்கை பின்வரும் காரணங்களுக்காகப் பயன்படுத்தப்படும்:
* தமிழ்த் திரைப்படத் துறையின் தற்போதைய ஆரோக்கியத்தையும் ஆற்றலையும் உறுதிப்படுத்துதல்.
* வருவாய் இழப்பை அடையாளம் கண்டு சரி செய்தல்.
* தயாரிப்பில் உள்ள மற்றும் இன்னும் வெளியிடப்படாத திரைப்படங்களின் தரவுத்தளத்தை உருவாக்குதல்.
* தரமான முடிக்கப்படாத திரைப்படங்களை அடையாளம் காணுதல். இந்த முயற்சிக்குத் தயாரிப்பாளர்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் இயக்குநர் ராஜேஷ் கண்ணா தெரிவித்துள்ளார்.
“தயாரிப்பாளர்களின் ஆதரவுடன் மட்டுமே இந்தத் திட்டம் வெற்றிகரமாக அமையும். இந்த முயற்சி தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும்” என்று அவர் தெரிவித்தார்.
ஆரக்கிள் மூவீஸ் இணை நிறுவனரும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஜி.கே.திருநாவுக்கரசு, ” என்எப்டிசி இந்த ஆராய்ச்சியைச் செய்வதற்கு எங்களை இணைத்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
இந்த முயற்சி தயாரிப்பாளர்களின் வருவாயை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த திரைத்துறையின் வளர்ச்சிக்கும் உதவும்.
தற்போதைய நிலையில் தமிழ்த் திரையுலகம் எந்த நிலையில் உள்ளது என்பது பற்றிய சிறந்த யோசனையையும் இது தரும்” என்றார்.
இந்த முயற்சியில் வெற்றி அடையத் தொழில்நுட்பம் கைகொடுக்கும் என்று ஆரக்கிள் மூவிஸ் நிறுவனர் மற்றும் தொழில்நுட்ப தொழில்முனைவோர் செந்தில் நாயகம் தெரிவித்தார்.
“தொழில்நுட்பத்தின் உதவியுடன், வெளிவரத் தயாராக உள்ள திரைப்படங்களின் எண்ணிக்கையைக் கண்காணிப்பது எளிதாக இருக்கும். தமிழ் சினிமாவில் அதிக வருவாய் ஈட்டவும் தொழில்நுட்பம் உதவும்” என்றும் அவர் நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
– பா. மகிழ்மதி