எந்த மதத்தையும் அவமதிப்பது கலாச்சாரத்துக்கு எதிரானது!

– குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு

குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, இந்திய ஜனநாயக தலைமைத்துவ நிறுவன மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

டெல்லியில் உள்ள குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் போது உரையாற்றிய அவர், “மனித குலத்தின் முன்னேற்றத்திற்கு உலக அமைதி மிகவும் முக்கியமானது.

நாகரீகமான சமுதாயத்தில் பயங்கரவாதம், பிரிவினைவாதம், வெறுப்புணர்வு ஆகியவற்றுக்கு இடமில்லை. இந்தியர்கள் தங்களது கலாச்சாரம் குறித்து பெருமைப்படுவதுடன், அனைத்து கலாச்சாரங்கள் மற்றும் மதங்களுக்கு மதிப்பளிப்பவர்கள்.

உலகில் இந்தியா மதச்சார்பற்ற நாடாக திகழ்கிறது. யாராக இருந்தாலும் அவர் எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் இந்தியாவின் மிக உயர்ந்த அரசியல் சாசன பதவியை அடைய முடியும்.

இந்திய நாகரீகத்தின் முக்கிய பண்பு பகிர்தல் மற்றும் கவனம் செலுத்துதல் என்பதாகும். எந்தவொரு மதத்தையும், மதத்தை சார்ந்த தலைவர்களையும் அவமரியாதை செய்வது, இந்திய கலாச்சாரத்துக்கு எதிரானது.

எந்த மதத்துக்கு எதிராகவும் வெறுப்பு பேச்சையோ, அவதூறு கருத்துக்களையோ வெளியிடுவது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.

ஜனநாயக உரிமைக்காக போராடும் போது வன்முறையைத் தூண்டுவது நாட்டு நலனுக்கு பாதகமானது. பாராளுமன்றம், சட்டமன்றங்களில் விவாதித்து முடிவெடுத்தலே முன்னேற்றத்துக்கு வழி வகுக்கும்.

பாராளுமன்றங்களில் நடைபெறும் அமளிகளைப் பெரிய அளவில் வெளியிடுவதைக் கைவிட்டு, ஊடகங்கள் ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஜனநாயகத்தை வலுப்படுத்துகிறோமா அல்லது பலவீனப்படுத்துகிறோமா என்பதை கட்சிகள் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

அரசியல் உட்பட அனைத்துத் துறைகளிலும் பெண்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். மாணவர்கள் பொதுவாழ்வில் ஒழுக்கத்தை கடைப்பிடிப்பதுடன், மக்கள் நலனுக்காக அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.

You might also like